ப்ரேதன் கதை: The Story of Z Movies

ஜோர்ஜ் ஏ. ரோமேரோ (February 4, 1940 – July 16, 2017), Modern Horrorஇன் தந்தை. ஒரு கலைஞனை இன்னொரு கலைஞனை கொண்டாடுவது என்பது அந்த கலைஞன் எந்தளவுக்கு தாக்கத்தை இவன் படைப்புகளில் ஏற்படுத்தியிருக்கிறான் என்பதிலேயே தங்கியிருக்கின்றது. சினிமாவைப் பொறுத்தவரை பல ஜாம்பவான்கள் இருக்கின்றார்கள். அவர்களது படைப்புலகம் இன்றுவரை பல சினிமா இயக்குனர்களுக்கு உந்துதலாக இருந்துவருகின்றது. அல்ப்ரட் ஹிட்ச்காக், அகிரா குரோசாவா, ஸ்டான்லி க்யூப்ரிக் என்று இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஜோர்ஜ் ஏ. ரோமேரோ அப்படியான ஒருவரே என்றால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். Genre திரைப்படங்கள் எடுப்பவர்களை யாரும் உலக இயக்குனர்கள் வரிசையில் சேர்ப்பதில்லை. ரோமேரோ எடுத்த படங்கள் எந்தளவுக்கு social satire இருந்தது என்பதை அவரது படைப்புகளை கொஞ்சம் சிரத்தையெடுத்து நோக்கினால் புரியும். இன்றிருக்கும் பல ஹாரர் லெஜன்டுகளின் குருநாதர் இவர். புதியதோர் sub genreஐயே உருவாக்கியவர். 50 வருடங்களுக்கு முன்னரே கறுப்பு நடிகர்களை முக்கிய பாத்திரங்களாக உருவாக்கியவர். ஹாரர் படங்களில் கறுப்பு நடிகர்களின் பாத்திரம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை கவனித்தால் இது புரியும். Jordan Peeleயின் Get Out படம் வரைக்கும் கறுப்பு நடிகர்கள் ஹாரர் படங்களில் நிறவேற்றுமையின் அடிப்படையிலேயே சித்தரிக்கப்பட்டு வந்தார்கள். ஆனால், Night of the Living Dead திரைப்படத்தில் கறுப்பு நடிகர்தான் பிரதான பாத்திரம். பிறிதொரு சந்தர்ப்பத்தில் இது பற்றி பேசலாம்.

ஜோம்பிகள் பற்றிய கட்டுரை கரவொலி இணைய சஞ்சிகைக்கா எழுதியது. ஜோர்ஜ் ஏ. ரோமேரோவை நினைவுகூறும் முகமாக பேயெழுத்தில்,

ப்ரேதன் கதை

தமிழில் இப்பொழுது வித்தியாசமான genreகளில் படங்கள் வருவது அதிகரித்துக் கொண்டு வருகின்றது. Horror திரைப்படங்கள் வரிசையாக வர, அதனை தொடர்ந்து இப்பொழுது விஞ்ஞானப் புனைவுத் திரைப்படங்கள் தலைத்தூக்கத் துவங்கியுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான மாற்றம் என்றாலும் மேற்கிலிருந்து உள்வாங்கப்படும் இந்த Genre Movies தட்டையாகவே மொழிபெயர்க்கப்படுகின்றது. ஹாலிவூட் எப்படி ஜெர்மனியின் எக்ஸ்ப்ரஷனிஸ சினிமாவிலிருந்து ஒளிப்பதிவை மாத்திரம் உள்வாங்கிக் கொண்டதோ அதுபோலத்தான் இதுவும். இப்பொழுதும் கூட ஹாலீவூட் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் festival படங்களை ரீமேக் செய்கிறது, அல்லது அந்த படங்களின் இயக்குனர்களை இறக்குமதி செய்து தன்னுடன் வைத்துக்கொள்கின்றது. தமிழில் பிறமொழிகளில் வெற்றிபெற்ற Lucia போன்ற படங்களை ரீமேக் செய்வது போன்றதுதான் இதுவும். இருக்கட்டும்.  

Horror மற்றும் விஞ்ஞானப் புனைவு genreஇல் எடுக்கப்பட்ட மிருதன் திரைப்படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன். படத்தின் ட்ரைலரை பார்த்த போதே இப்படத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. காரணம், ஜோம்பி எனக்கு பிடிக்காத genre என்பதையும் தாண்டி ‘தமிழில் ஜோம்பி’ என்ற ஒரு ஆர்வம்தான். படத்தின் ட்ரைலர் வந்தபோது, ஜோம்பி genre குறித்து அதிகம் பேசப்பட்டது. ஆனால், படம் வந்த பிறகு எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகம் வந்தன. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஜோம்பி genre குறித்து தெளிவான விளக்கம் எத்தரப்பினராலும் தரப்படவில்லை. ஜெயம் ரவியின் ஒரு பேட்டியில் இது ஒரு வகையான காட்டேரி படம்… என்று குறிப்பிட்டிருந்தார். (அது நிச்சயமாக அதிகபிரசங்கி பத்திரிகை எடிட்டருடைய வேலையாகத்தான் இருக்கும்.) இப்படியிருக்கையில் ஜோம்பி திரைப்படங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற எனது நெடுநாளைய கனவு நனவாக ஒரு புள்ளி இந்த மிருதன் திரைப்படத்தின் மூலம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

மிருதன் திரைப்படம் எப்படி? உலகம் முழுவதும் இருந்து வருடத்திற்கு குறைந்தது பத்து ஜோம்பி திரைப்படங்களாவது வந்துகொண்டுதான் இருக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு genre தமிழ் சினிமா ஹிரோயிஸத்திற்குள் நசுங்கிவிட்டது என்பதே உண்மை. படத்தில் எதுவுமே ஒட்டவில்லை. ஒரு மெகா சீரியல் செட்டிங்கிற்குள் எடுக்கப்பட்டது போல் இருக்கின்றது. பொதுவாக ஜோம்பி படங்களில் வரும் கிட்டத்தட்ட அனைத்துப் பாத்திரங்களும் ஜோம்பிகளை எதிர்த்து போராடும். சுட்டுத்தள்ளும். இப்படத்தில் ஜெயம் ரவி மாத்திரம்தான் சுட்டுக் கொண்டிருக்கிறார். மேற்கொண்டு படத்தைப் பற்றி சிலாகித்துக் கூற எதுவுமில்லை. இதில் பாகம் இரண்டு வேறு வருகிறதாம். வரட்டும்.

ஜோம்பி திரைப்படங்களுக்கு நீண்ட திரை வரலாறு உள்ளது. இந்த வகைப் படங்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் உலகெங்கும் ஏராளம். ஜோர்ஜ் ஏ. ரோமேரோவின் Night of the Living Dead திரைப்படத்தில் வரும் ஜோம்பிகளைப் போலவே இந்த ரசிகர் பட்டாளமும் இந்த படங்களின் பின்னால் அலைந்து கொண்டிருப்பார்கள். ஹாலிவூட் படங்களை ஐந்தாக பிரித்தால் அதில் ஒரு பங்கு ஜோம்பி படங்கள் இருக்கும் என்றால் மிகையாகா! உவமைக்கு. இப்படியாக வரும் படங்களில் முக்கால்வாசிக்கும் மேல் வெறும் pink (practical effect) இரத்தம் தெறிக்கும் காட்சிகளும், மனிதக் குடல்களை கடித்து தின்றுக் கொண்டிருக்கும் ஜோம்பிகளும், அந்த ஜோம்பிகளை அறுத்துக் கொல்ல ஒரு chainsaw இயந்திரமும் இருக்கும். பொதுவாக ஜோம்பிப் படங்களில் கதையென்று பெரிதாக எதுவும் இருக்காது. அப்படியிருந்தும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஜோம்பிப் படங்களும் உண்டு. இவை எந்தவிதத்திலும் பிற படங்களுக்கு சளித்தவையல்ல. சினிமாவின் ரசங்களில் தேர்ந்த படைப்பாளிகள் இருப்பது போல் ஜோம்பி Genreஇலும் தேர்ந்த ஜாம்பவான்கள் இருக்கின்றனர். அதில் முக்கியமானவர் George A. Romero இவரைப் பற்றி கட்டுரையில் சந்தர்ப்பம் வரும் போது பேசுவோம்.

ஜோம்பி மனிதன் இறந்த பின் அவனது உடல் மீண்டும் உயிர்த்தெழுவது (Undead), உயிர்த்தெழுந்த ப்ரேதங்களுக்கு எந்தவித மனிதத்தன்மையும் இருக்காது. அவற்றின் ஒரே நோக்கம் நரமாமிசத்தை (அல்லது மனித மூளை) உணவாகக் கொள்வது – பெரும்பாலும் உயிருடன். வெம்பயர் கதைகளில், வெம்பயர் ஒருவனை கடித்து பின்னர் அவன் இறந்து அடக்கப்பட்ட பின்னர் வெம்பயராக மாறி எழுவது போன்றுதான் இதுவும் என்றாலும் ஜோம்பிகள் கொஞ்சம் வித்தியாசமானவை. வெம்பயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால் ஜோம்பிகள் தொற்றுநோய் போன்றது ஒருவர் தாக்கப்பட்டால் அவர் ஜோம்பியாக மாறிவிடுவார் அல்லது சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருக்கும் பிணங்கள் Voodoo போன்ற மந்திரங்களால் (காஞ்சனா 2 படத்தில் இறந்த ஒரு உடலுக்கு சூனியத்தால் ப்ரேதனாக மாற்றப்படும் காட்சி இருக்கும்) எழுப்பப்பட்டு ப்ரேதர்களாக மாறி நரமாமிச ருசிக்காக அலைவார்கள். இந்தப் ப்ரேதர்களிடம் மாட்டிக் கொண்டவர்களுக்கு இரண்டு options இருக்கும், ஒன்று ஜோம்பியாக மாறுவது, இரண்டு ஜோம்பிகளுக்கு இரையாக மாறுவது. இரண்டும் உவ்வேக்!

ஆரம்பகால ஜோம்பி புனைவில் – புனைவென்றே இவ்விடத்தில் பாவிக்கின்றேன் ஏனெனில் சினிமாவில் மட்டுமின்றி புனைவெழுத்திலும் ஜோம்பிக்கள் வந்திருக்கின்றன. – சூனியம்தான் (Voodoo) ஜோம்பி உருவாவதற்கு காரணமாக காண்பிக்கப்பட்டது. பிற்பட்ட காலங்களில் வந்த படைப்புகளில் சூனியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அறிவியல்ரீதியான காரணம் புகுந்து கொண்டது. இப்பொழுது வரும் பெரும்பாலான ஜோம்பிப் படங்கள் வைரஸ், கதிரியாக்கம், நியூக்லியர், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் இன்ன பிற காரணங்களால் உருவாவதாகவே அதிகம் காண்பிக்கப்படுகின்றது.

சூனியமும் ஜோம்பிகளும்

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹெய்டியில் (கரிபியன் பகுதி) Voodoo சூனியம் ஒரு நாட்டார் மரபு. இந்த மரபில் இறந்தவர்களை உயிர்ப்பித்தல் (அல்லது கிட்டத்தட்ட இறந்தவர்கள்), ஏவல் போன்ற சூனிய யாகங்கள் பயிலப்பட்டு (practice) வருகின்றன. உதாரணமாக voodoo இன் மூலம் எழுப்பட்ட ப்ரேதம் மந்திரவாதியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். இந்த மரபில் இருந்துதான் ஜோம்பி கன்சப்ட் தோன்றுகின்றது. எல்லா தேசங்களிலும் இலக்கியங்களும் கலைகளும் அவர்களது தொன்மம் மற்றும் நாட்டார் மரபிலிருந்தே தோற்றம் பெருகின்றன. லத்தின் அமெரிக்க இலக்கியம், கலை மற்றும் சினிமாவில் அவர்களது நாட்டார் கதை வடிவம் மெஜிக் ரியலிஸமாக மாறி தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை அவதானித்தால் இது புரியும். என்னைப் பொறுத்தவரையில் இந்த சங்கிலித் தொடரிலிருந்து வரும் இலக்கியம் மற்றும் கலை வடிவங்கள்தான் செறிவுமிக்கதாக, கொண்டாடத்தக்கதாக இருக்கும். இந்த சங்கிலித் தொடர் உடையும் போது கலை இலக்கிய இயக்கம் தொய்வடைந்து தமது தன்மைகளில் இருந்து விலகி பிற தேசங்களை நோக்கி பாதையை அமைத்துக்கொள்கின்றது. ஹெய்டியின் நாட்டார் மரபினை உள்வாங்கி ஹாலிவூட் ஜோம்பிப் படங்களை எடுத்துத் தள்ளியது.

ஆரம்பகால ஜோம்பி படங்கள் (1930 – 1960) ஹெய்டியின் Voodoo மந்திரத்தின் மூலம் எழுப்பப்பட்ட ப்ரேதன் மந்திரவாதியின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு தீய வேலைகளை செய்வான். இப்படியாகத்தான் அக்கால ஜோம்பிப் படங்கள் இருந்தது. இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய படம் White Zombie. இதில் ஹெய்டி மந்திரவாதியாக மன்ஸ்டர் பாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற Bela Lugosi நடித்திருப்பார். White Zombie மூலம் புறப்படத் துவங்கிய அலை எக்கச்சக்கமான ஜோம்பிப் படங்கள் உருவாக காரணமாக அமைந்தது. அக்காலத்தில் X-Rated ஹாரர் படங்களை எடுத்துக் கொண்டிருந்த Hammer Films Productions வரிசையாக ஜோம்பிப் படங்களை எடுத்துத் தள்ளியது.

ஆரம்ப ஜோம்பி படங்களில் மனித மாமிசம் உண்பது போன்ற காட்சிகள் இருக்கவில்லை, மந்திரவாதியின் ஏவலுக்கு ஏற்ப சுயநினைவற்ற, ஆன்மாவற்ற ப்ரேதர்கள் தீய காரியங்களை செய்வது போல்தான் காண்பிக்கப்பட்டு வந்தன. ஹாலிவூடிற்கு ஜோம்பிகள் சும்மா நடமாடிக்கொண்டு தீய செயல்களை செய்து கொண்டிருப்பதில் திருப்தியிருக்கவில்லை. பசி. பசி… அதுவரையில் பசியில் அலைந்த ஜோம்பிகளுக்கு மனித மாமிசம் வழங்கப்பட்டது. இன்றுவரை இந்த விருந்தோம்பல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

ஜோர்ஜ் ஏ. ரோமேரோ – நவீன ஜோம்பிகள்

இவ்வளவு காலமும் மந்திரவாதியின் கட்டுப்பாட்டில் இருந்த ஜோம்பிகள் கட்டுக்களை அவிழ்த்து எந்தவித மனிதத் தன்மையும் அற்று, ஒரே இலக்கு மனித மாமிசம் (குறிப்பா மூளை) என்று மாறி ஜோம்பி படங்களில் ஒரு புரட்சி வெடித்தது. ஜோம்பி படங்கள் மாத்திரமல்ல ஹாரர் genre இலும் ஒரு அலையை ஏற்படுத்திய படம் வெளிவந்தது. ‘Father of Zombie Genre’ George A. Romero இன் Night of the Living Dead வந்து பார்வையாளர்களை பீதியில் ஆழ்த்தியது. நவீன ஜோம்பி படங்களுக்கு இவர்தான் முன்னோடி. நவீன ஹாரர் படங்களுக்கும் இவர்தான் அடித்தளமிட்டவர் என்றும் சொல்லாம்.  

Night of the Living Dead படத்தில் ஆரம்பக் காட்சி இப்படியிருக்கும்: ரேடியோவின் மூலம் பல்வேறு இடங்களில் சமீபத்தில் இறந்துபோன பிணங்கள் எழுந்து நடமாடுவதாகவும் இந்த மன்ஸ்டர்கள் மனிதர்களை தாக்குவதாகும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான காரணம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை என்று கூறும் அறிவிப்பாளர், விஞ்ஞானிகள் இனம்புரியாத கதிர்வீச்சுதான் இதற்கு காரணம் என்றும் கூறுகின்றார்.

இப்படத்தில் வரும் இக்காட்சியின் மூலம் ஜோம்பிகள் உருவாக அறிவியல் காரணமாகின்றது. படத்தில் ஜோம்பி என்ற பதம் ஒரு இடத்தில் கூட உச்சரிக்கப்படுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது. படம் ஏற்படுத்திய அலையின் மூலம் இந்த ப்ரேதர்களுக்கு ஜோம்பி என்று பெயர் உண்டானது.

George A. Romero எடுத்த Night of the Living Dead ஒரு cult classic ஆகவே இன்று மாறிவிட்டது. ஒன்றல்ல இரண்டல்ல சாரை சாரையாக ஜோம்பிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். ஒரு பத்து ஜோம்பிகளை கொல்லலாம், இரத்த வாடையினால் ஈர்க்கப்பட்டு நூற்றுக்கணக்கில் வந்து கொண்டிருக்கும் ஜோம்பிகளை என்ன செய்வது? இங்கிருந்தான் ‘Zombie Apocalypse’ கன்சப்ட் உருக்கொள்கிறது. இப்படத்தின் முக்கிய விடயம் ஹாரர் சம்பவங்கள் சாதாரண மனிதர்களுக்கு நடைபெறுவதுதான். பழைய ஹாரர் படங்களின் நாயகர்கள் யாதார்த்த உலகுடன் ஒட்டாத பாத்திரங்களாகவே இருந்து வந்தார்கள். படங்களும் பயங்கர பங்களா, மாளிகையில் நடப்பவையாக இருக்கும். இந்த படத்தின் மூலம் அவ்விதியை உடைத்து பயத்தை இன்னும் ஆழமாக விதைத்தார் ரோமேரோ. Night of the Living Dead படத்தில்தான் முதன்முறையாக ஒரு ஹாரர் படத்தில் கறுப்பு நடிகர் (Duane Jones) நடித்தார். படம் வெளிவந்த 60களில் கறுப்பு நடிகர் ஒருவர் படத்தின் நாயகனாக நடிப்பது controversial விடயமாகவே இருந்தது. படத்தில் அவர் கொல்லப்படுவது ஒரு அபத்த நாடகம்.

ஏனைய ஹாரர், ஜோம்பி இயக்குனர்களுக்கு மத்தியில் ஜோர்ஜ் ஏ. ரோமேரோ தனித்து விளங்குவது அவரது பகிடிதான். அவரது ஜோம்பி படங்கள் வெறுமனே கிளுகிளுப்பூட்டும் ஹாரர் படங்களாக இருக்கவில்லை. ரோமேரோ தனது படங்களின் மூலம் ஏற்றத்தாழ்வு, அமெரிக்க வாழ்வு, வர்க்கப்பிரச்சினை போன்றவற்றை பதிவு செய்தார். இப்படங்களில் ஜோம்பி மற்றும் மனிதர்களுக்கிடையிலான போராட்டம் ஒரு Metaphor ஆகவே இருக்கும். Night of the Living Dead, Dawn of the Dead, Day of the Dead போன்ற படங்களைப் பார்த்தால் இது புரியும்.

ரோமேரோவை ‘Godfather of Zombie Movies’ என்று அழைப்பார்கள். இதை அவரே தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். உண்மைதான். ஏற்கனவே சினிமாவில் இருந்த ஒன்றை மீட்டுருவாக்கம் செய்தவர். இன்னும் மெருகேற்றி வெறித்தனமான ஒரு genreஆக உருமாற்றியவர். இன்னொருவகையில் பார்த்தால் ஜோம்பி வகையறாவை உருவாக்கியவர் இவர்தான் என்றும் கூறலாம். அதை அவரே விளக்குவார், அவரது படங்களின் மூலம்தான் ஜோம்பிகள் என்ற புது மன்ஸ்டர் இனம் தோற்றம் பெறுகிறது. அதுவரைக் காலமும் மந்திரவாதியின் கட்டுப்பாட்டில் இருந்த ஜோம்பிகள் மரித்து எழுந்தவைகள் அல்ல, கிட்டத்தட்ட கோமா நிலையில் வைத்து ஏவப்பட்டவை. ஆனால் தோற்றம் என்னவோ வெளிரிய நிறத்தில்தான் இருந்தது. ப்ரேதம் போல். Night of the Living Dead படத்தின் மூலம் அவற்றிற்கு ஒரு புது ஒரிஜினை கொடுத்தார். மிக அண்மையில் மரித்த ப்ரேதங்கள்தான் எழுந்து வரும். பழைய ப்ரேதங்கள் உக்கிய நிலையில் இருக்கும் என்பதால் அவற்றால் ஜோம்பிகள் செய்யும் காரியங்களை செய்ய முடியாமல் போகும். ப்ரேதங்கள் என்பதால் அவை மெதுவாகவே நடக்கும். வேகமாக ஓடி, விரட்டி விரட்டி வேட்டையாடுபவை எல்லாம் ஜோம்பிகள் அல்ல. இவை ஏன் எழுந்து வருகின்றன எனக் கேட்டால்… எமலோகத்தில் இடப்பற்றாக்குறை அதனால்தான் என்கிறார் மாஸ்டர் ரோமேரோ!

ஜோர்ஜ் ஏ. ரோமேரோ பல்வேறு தரப்பினராலும் கொண்டாடப்படும் ஒருவர். இன்று இருக்கும் பல ஹாரர் இயக்குனர்கள் இவரை தமது ஆதர்ஷமாகவே கொள்கின்றனர். கியர்மோ டெல் டோரோ ரோமேரோவை கொண்டாடுவார். ஹாரரை உன்னதக் கலையாக நோக்கும் சிலராலேயே ரோமேரோ போன்ற மாஸ்டர்களை புரிந்துகொள்ளமுடியும். ரோமேரோ அவரது Dead series இல் இதுவரை ஐந்து படங்களை எடுத்துள்ளார், அதில் Night of the Living Dead, Dawn of the Dead, Day of the Dead மற்றும் நீண்ட இடைவேளைக்கு பின்னர் எடுத்த Land of the Dead, Diary of the Dead.

ரோமேரோவில் துவங்கிய இந்த பயணம் இப்பொழுது கண்டமாதிரி போய்க் கொண்டிருக்கின்றது. ஜோம்பி கன்சப்டை சரியாக உள்வாங்கி சிறப்பாக படங்களைக் கொடுத்தவர்கள் மிகக்குறைவு. Dawn of the Dead படம் வந்த காலகட்டத்தில் supermarket கலாச்சாரம் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. மக்கள் நுகர்வு வெறிபிடித்து ஓடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. நுகர்வுவெறியை கதையோட்டத்தின் பின்புலமாகக் கொண்டு அத்திரைப்படத்தை எடுத்தார் ரோமேரோ. அத்திரைப்படமும் வழக்கம் போல ஒரு independent படம்தான். இத்திரைப்படத்தின் remake 2004இல் வெளிவந்தது. Zack Snyderஇன் முதல் திரைப்படம். இந்த ரீமேக் அசல் படத்தின் அரசியலை புரிந்துகொள்ளாமல் வெறுமனே ஒரு ஜோம்பி படமாக மாறிவிட்டது. இரண்டு படங்களும் காமடியில் சிறப்பாகத்தான் இருக்கும். கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் ஒரு படைப்பின் அசலை நகல் செய்யும் போது அதன் உள்ளார்ந்த தரிசனங்கள், தன்மைகள், அரசியல் நீக்கப்பட்டுவிடுகின்றன என்பதே யதார்த்தம். டாரன்டீனோவை உள்வாங்கி அவர் பாணியில் திரைப்படமெடுப்பவர்கள் எவ்வாறு அவரது தொழில்நுட்பம், அழகியல் போன்றவற்றை மாத்திரம் எடுத்துக்கொண்டு அரசியலை தவிர்த்தார்களோ அல்லத அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பார்வை இவ்வாறான படைப்புகளை உருவாக்குகின்றது என்பதே நிதர்சனம்.

சில முக்கியமான ஜோம்பி படங்கள்

Night of the Living Dead படத்தின் மூலம்தான் ஜோம்பி Genre தோற்றம் பெறுகின்றது என்பதை மேலே கட்டுரையில் பேசிய விடயங்களை வைத்தே கூற முடியும். Dawn of the Dead, Land of the Dead இவையிரண்டும் முக்கியமான ஜோம்பிப் படங்கள். ரோமேரோ நிறைய படங்கள் எடுத்திருந்தாலும் ஜோம்பி படங்களின் மூலம்தான் அறியப்படுகிறார். மேலும் ஜோம்பி படங்களை பேசும் போது அவர் பெயரை தவிர்க்க முடியாது. ஆணிவேர் இல்லாமல் மரமில்லை!

Land of the Dead நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரோமேரோ எடுத்த ஜோம்பிப் படம். அந்த இடைவேளையில் நிறைய ஜோம்பிப் படங்கள் வந்துவிட்டன. வேகமாக நகரும் ஜோம்பிப் படங்களும் இதில் அடக்கம். Return of the Dragon மாதிரி அவரது பாணியிலேயே எடுத்த Land of the Dead பெறும் வரவேற்பைப் பெற்றது. அதில் Zombie Apocalypse நடந்து நீண்ட காலத்தின் பின்னர் மனிதர்களும் – ஜோம்பிகளும் சூழலுக்கமைய பரிணமத்திருக்கின்றார்கள். இத்திரைப்படத்தில் முதலாளித்துவம், வர்க்கப் பிரச்சினை இரண்டையும் பதிவு செய்திருப்பார் ரோமேரோ.

28 Days Later ‘Zombie Outbreak’ குணப்படுத்த முடியாத ஒரு வைரஸ் பரவிய நான்கு வாரங்களின் பின்னர் நடக்கும் கதை. Danny Boyleஇன் இத்திரைப்படத்தின் தாக்கத்தை இப்பொழுது வரும் பல படங்களில் பார்க்கலாம்.

Re-Animator இறந்த ப்ரேதங்களை உயிர்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு மருத்துவ மாணவனின் கதை. இது நேரடியாக H.P. Lovecraft இன் சிறுகதையொன்றை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டது. பல ஜோம்பி படங்களில் Lovecraftஇன் தாக்கம் இருக்கும்.

Dead Snow & Dead Snow 2 ‘Nazi Zombies’ இந்த கன்சப்ட்டை வைத்துக் கொண்டு பழைய ஜோம்பி படங்கள், Evil Dead, நடுக்காட்டில் ஒற்றை வீடு கன்சப்ட்களை வைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட அட்டகாசமா படங்கள்.

Wyrmwood: Road of the Dead மிகவும் ரசித்த ஜோம்பி படம். எல்லா ஜோம்பிப் படங்களினதும் கலவை.

Shaun of the Dead – ஒரு காமிகல் ஜோம்பி திரைப்படம் Edgar Wrightஇன் விளையாட்டில் நிகழ்ந்த ஒரு அபத்த ஜோம்பி நாடகம்.

IMDB இல் வரும் லிஸ்ட்டைப் பற்றியெல்லாம் போடப் போனால் இந்தக் கட்டுரை இந்த நூற்றாண்டில் முடியாது. இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

எல்லா ஹாரர் படங்களுக்கும் ரிஷிமூலமாக மேரி ஷெல்லியின் ப்ராங்கின்ஸ்டீன் இருப்பது போல ஜோம்பி படங்களுக்கும் அதுதான் மூலம். இறந்த பின் மனிதன் என்ன ஆகின்றான் என்ற அண்டப் பெரும் வினாவினை விவாதித்த தத்துவஞானிகள், விஞ்ஞானிகள் எல்லாம் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்க இலக்கியவாதிகள் மட்டும் கள்ளச்சிரிப்புடன் படைப்புகளை உருவாக்கினார்கள். அதில் காலம் தாண்டியும் நிற்கும் படைப்பே ப்ராங்கின்ஸ்டீன். அற்புதமான நாவல். திரையில் நடமாடிய முதல் ஜோம்பி ப்ராங்கின்ஸ்டீனின் மன்ஸ்டராகவே இருக்கும். பின்னர் படிப்படியாக முன்னேறி தனி மன்ஸ்டராக பரிணமித்து அதிலும் பல பரிசோதனை முயற்சிகள் செய்து வித்தியாசம் வித்தியாசமான ஜோம்பிகள் உருவாகின. வேறெந்த மன்ஸ்டரிற்கும் இல்லாத சுதந்திரம் ஜோம்பிகளுக்கு வழங்கப்பட்டது. படைப்பாளிகளின் கற்பனைக்கேட்ப அவற்றை வடிவமைத்துக் கொள்ளலாம். ரோமேரோவின் ஜோம்பி, Resident Evil படத்தில் வரும் ஜோம்பி, World War Zஇல் வருபவை என்று ஏராளமான வகைகள் இதில் உண்டு.

ஹாரர், விஞ்ஞானப் புனைவு, பென்டசி போன்ற genreகளில் ஜோம்பிகளைக் காணலாம், ஆனால் இன்று ஜோம்பி திரைப்படங்கள் தனி genreஆகவே பார்க்கப்படுகின்றது. இந்த ஒரு காரணமே போதும் ஜோம்பி வைரஸ் எந்தளவிற்கு ரசிகர்களை ஆட்டிப்படைக்கின்றது என்று. எல்லா வகையான திரைப்படங்களிலும் மொக்கையானவையும், சிறப்பானவையும் வரத்தான் செய்கின்றன. அவற்றில் மிகச் சிறந்தவை மாத்திரம் எல்லாத் தரப்பினரையும் கவர்ந்து நிலைத்துவிடுகின்றன. இக்கட்டுரையில் பெரும் பகுதியை ஜோர்ஜ் ஏ. ரோமேரோ பிடித்துக் கொண்டார். அவரைத் தவிர்த்துவிட்டு ப்ரேதர்களைப் பற்றி எழுத முடியாது. இந்தக் கட்டுரையின் தலைப்பு ப்ரேதன் கதை: The Story of Z Movies. ரோமேரோதான் இக்கதையில் வரும் ப்ரேதன்!

Advertisements

3 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s