கூபோவின் அற்புதப் பயணம்!

முன்குறிப்பு: படம் வந்த புதிதில் சஞ்சிகையொன்றிற்காக எழுதிய கட்டுரை. சில சிக்கல்கள் காரணமாக குறித்த சஞ்சிகை வெளிவரவில்லை. 

இன்றைய சிறுவர்களுக்கு சாகாசக் கதைகள் கூற யாரும் இல்லை, அப்படியே இருந்தாலும் அவற்றையெல்லாம் கேட்கும் மனோநிலையை இந்த உலகம் உருவாக்கவிடுவதில்லை. முன்பெல்லாம் மின்சாரம் துண்டிக்கப்படும் இரவுகளில் லந்தர் விளக்கைச் சுற்றி அமர்ந்துகொண்டு பாட்டி சொல்லும் கதைகளை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருப்போம். அப்பொழுதெல்லாம் ஏழு கடல், ஏழு மலை தாண்டி அரக்கனிடமிருந்து இளவரசியை மீட்டு, ஊருக்குள் வரும் போது அங்கு உலாத்திக் கொண்டிருக்கும் பேய், பிசாசுகளை எதிர்கொண்டு இரவுகளில் நீந்திச்சென்ற நினைவுகள் நிறைய உண்டு. உலகம் எந்திரமயமாகி, பின் இலத்திரனியல் காடாகிப்போன இந்தக் காலத்திலும் கதைகளுக்கான தேவையை மனிதன் உணர்ந்திருக்கின்றான், அந்த உணர்வின் வெளிப்பாடுதான் சினிமா.

கலையின் புதிய குழந்தையான சினிமா எப்பொழுதாவது பாட்டியின் இடத்தை நிரப்புவதுண்டு. அப்படியான படைப்புகள் வெகுசிலவே என்றாலும் அவற்றின் பங்களிப்பு அளப்பரியது. பாட்டி சொன்ன கதைகளை, அந்த கதையுலகை, அந்த நினைவுகளை ஒரு சினிமா மீட்டிப் பார்க்கச் செய்தால் அந்த படைப்பின் இயக்குனன் பாட்டியின் அந்தஸ்த்தை அடைகிறான். கியர்மோ டெல் டோரோ, ஹயோ மியசாகி போன்ற இயக்குனர்கள் இந்த கதையுலகை உருவாக்குவதில் விற்பன்னர்கள். இது அவர்கள் பற்றிய கட்டுரை அல்ல, ஸ்டொப்மோஷன் திரைப்படமான Kubo and the Two Strings இன் கதையுலகை பற்றியதே இது.

அனிமேஷன் திரைப்படங்களில் ஸ்டொப்மோஷன் எனும் வகையுண்டு, இது ஒரு பொருளை விகாரப்படுத்துவதன் (manipulate) மூலம் அதன் ஒவ்வொரு அசைவுகளையும் ஒவ்வொரு ஃப்ரேமாக பதிவு செய்து அதனை திரையில் இயக்கவிடுவதுதான் ஸ்டொப்மோஷன். இதனை ஒரு உதாரணத்தைக் கொண்டு பார்ப்போம். ஒரு விளையாட்டு இராணுவவீரனை எடுத்துக்கொள்ளுங்கள். (சிறுவயதில் குட்டி குட்டியாக நிறைய இராணுவவீரர்கள் இருக்கும் விளையாட்டு செட் பலருக்கும் ஞாபகம் இருக்கலாம்.) ஒரு மொபைல் கேமராவை தயார் செய்துகொள்ளுங்கள். அந்த இராணுவவீரனை நேராக நிறுத்தி ஒரு புகைப்படமும், வலப்புறமாக திருப்பி ஒன்றும், திரும்ப நேராக நிறுத்தி ஒன்றும், பிறகு இடப்புறமாக நிறுத்தி ஒன்றும் எடுத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது இந்த நான்கு படங்களையும் வேகமாக ஸ்லைட் செய்து பாருங்கள், அல்லது ஏதாவது GIF App அல்லது இதற்கென்றே பிரேத்தியேகமாக இருக்கும் Stop Motion App ஒன்றினை தரவிறக்கி இந்த சிறிய ஸ்டொப் மோஷனை செய்து பாருங்கள். இந்த நான்கு ஃப்ரேமும் வேகமாக இயக்கப்படுவதன் மூலம் ஏற்படும் அசைவுதான் ஸ்டொப் மோஷன். ஒரு செக்கனுக்கு 25 ஃப்ரேம் வீதம் ஒரு திரைப்படத்திற்கு ஸ்டொப் மோஷன் எடுக்கப்படுகிறது. சில படங்கள் இதனையும் விட குறைவான வீதத்தில் எடுக்கப்படுகின்றது. இப்பொழுது கற்பனை செய்து பாருங்கள் ஒன்றரை மணித்தியால ஸ்டொப் மோஷன் படத்திற்கு எத்தனை ஃப்ரேம்கள் எடுக்கப்படவேண்டும் என்று.

கூபோ ஸ்டொப் மோஷன் மற்றும் CG இரண்டையும் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ஒரு சாகாசத் திரைப்படம். இந்த படத்தை தயாரித்திருப்பது Laika நிறுவனம், இதே நிறுவனத்தின் மூலம் இதற்கு முன்னர் வெளிவந்த ஸ்டொப் மோஷன் திரைப்படங்களைப் பார்த்தால் எவ்வளவு உழைப்பு இந்த படைப்புகளின் பின்னால் இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முடியும். ஸ்டொப் மோஷன் என்பது ஆரம்பகால சினிமா உத்திகளில் ஒன்று. இப்பொழுது இருக்கும் அனிமேஷன் வளர்ச்சியடைந்திருக்காத காலகட்டத்தில் எல்லாம் இந்த உத்திதான் சினிமாவில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டது. க்ளேயினால் (clay) உருவாக்கப்பட்ட மிருகங்களை இந்த உத்தியின் மூலம் நடமாடவிடப்பட்டன. இணையத்தில் stop motion என்று தேடி ஆரம்பகால சினிமாக்களை பார்க்க முடியும். இந்த உத்தியைப் பயன்படுத்தி நிறை திரைப்படங்களும் வந்திருக்கின்றது. காலப்போக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சயினால் இதன் உபயோகம் குறைந்துகொண்டே வந்தது. ஆனால், இன்றும் பல இயக்குனர்கள் இதை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். பல இயக்குனர்களுக்கு இந்த முறையில் படமொன்றை எடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வமும் இருந்துகொண்டேதான் இருக்கின்றது.

சிறுவயதில் விளையாட்டுப் பொருட்களை பாத்திரங்களாகக் கொண்டு கதைகளை உருவாக்கியிருப்போம், மெழுவர்த்தியின் ஒளியில் கைகளால் உருவங்கள் அமைத்து கதைகள் சொல்லக் கேட்டிருப்போம், ஜப்பானிய காகிதக் கலையான ஒரிகாமி பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? வெற்றுக்காகிதத்தைக் கொண்டு என்ன செய்யமுடியும்? அவற்றில் எழுதி கதைகள் உருவாக்க முடியும்… ஒரிகாமி என்பது அந்த கதையில் வரும் பாத்திரங்களை காகிதத்தில் வடிக்கும் கலை. நாரை, நாய், வண்ணத்துப்பூச்சி, தவளை, கப்பல், விமானம் என்று எண்ணற்ற உருக்களை காகிதத்தைக் கொண்டு செய்ய முடியும் என்றால் யோசித்துப்பாருங்கள், ஒரிகாமி கலைஞன் நிச்சயம் ஒரு மந்திரவாதியாகத்தான் இருக்க முடியும். கூபோவும் ஒரு மந்திரவாதிதான். உக்கிரமாக அலையெழுப்பும் கடல்பயணமொன்றை மேற்கொள்ளும் ஒரு பீடில் வாசிக்கும் பெண்ணுடன் கூபோவின் கதை ஆரம்பிக்கின்றது. இயற்கையின் சீற்றத்தை அவள் பீடில் வாசித்து எதிர்கொள்கிறாள். கவனம் சிதைய சீற்றங் கொண்ட அலை அவளை ஒரு தீவில் ஒதுக்கி விடுகின்றது. அவளுடன் அவள் கைக்குழந்தை மகனும் தனித்துவிடப்படுகிறார்கள். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் இரவில் மாத்திரமே அவளுக்கு நினைவுகள் ஞாபகத்தில் இருக்கின்றன, பகலில் பித்தம் பிடித்தவள் போல் சிலையாகிவிடுவாள். ஒவ்வொருநாள் இரவும் தாய் கூறும் கதையை சுமந்துகொண்டு கிராமத்திற்கு சென்று, பீடில் இசைத்து ஒரிகாமி உருக்களை நடமாடவிட்டு கதைகளை கூறுவான், ஒருபோதும் அவன் கதைகள் முடிவதேயில்லை. என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. பாட்டி சொல்லும் கதைகளும் இப்படித்தானே. அவற்றுக்கு முடிவேது?

கூபோவின் கதை ஜப்பானிய நாட்டார் மரபுப் பாணியை ஒட்டி எடுக்கப்பட்டிருக்கின்றது. ஒரிகாமி, குரங்கு, ஜப்பானிய பீடில் இசை, நாட்டார் மரபு நம்பிக்கைகள், ஆவியுலகம் என்று கதை முழுக்க ஒரு செறிவுமிக்க மரபு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு முந்தய லைக்கா நிறுவனத்தின் ஸ்டொப் மோஷன் படங்களான Caroline, Paranorman, Boxtrolls போன்றவை அதிக இருண்மையை கொண்டிருந்தன. கூபோவில் அது கொஞ்சம் குறைவாகவே காணப்பட்டது. கதையில் ஒரிகாமி, மந்திரம் இரண்டிற்கும் இருந்த முக்கியத்துவத்தைப் போல இசைக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இசைக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படாதது ஒரு குறையே. இவற்றைத் தாண்டி படத்தில் வரும் ஒரிகாமி நடனம் மிகவும் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது. நல்ல கதையம்சமுள்ள படத்தைப் பார்க்க விரும்புவர்கள் இப்படத்தை பார்க்கலாம்.

“உங்கள் இமைகளை மூடவேண்டும் என்றால் இப்பொழுதே மூடிக்கொள்ளுங்கள்…” என்று கதைசொல்ல முன்னர் கூபோ கூறுவான், பாட்டி கதை சொல்ல ஆரம்பிக்கும் போதும் அப்படித்தான் எம்மைச் சுற்றி இருக்கும் உலகம் எம் கண்களைவிட்டு அகன்றுவிடும் பின்னர் பாட்டி கூறும் உலகம்தான் எமதும் உலகம். அது எல்லையில்லா சாத்தியங்களைக் கொண்ட உலகம். இந்த உலகை எமக்குள்ளே வைத்திருப்பதும், அழித்துவிடுவதும் எங்கள் கைகளில்தான் உள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s