Hayao Miyazaki: கனவுகளின் ராஜ்ஜியம்

கனவுகள் விசித்திரமானவை. அவை தீட்டிச் செல்லும் உலகங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. டிராகன்கள், பறக்கும் குதிரைகள், முதுகில் தீவை சுமந்து செல்லும் ஆமை கனவு ராஜ்ஜியத்தில் மாத்திரமே உலாத்தும். சுதந்திரமாய். வர்ண ஜாலங்களில் சஞ்சரிக்கும் கனவுகளாக இருந்தாலும் சரி, இருண்மை சூழ்ந்த துர்சொப்பனங்களாக இருந்தாலும் சரி அற்புத கனவுகளின் ராஜ்ஜியத்தை யதார்த்த உலகிற்கு சுமந்து வருபவர்கள் மகா கலைஞர்கள். அந்த கலை வாய்ப்பது வெகுசிலருக்கே.

கதைசொல்லல் வடிவம் உலகில் எப்பொழுது தோன்றியது என்பதெல்லாம் தீர்க்கமாக சொல்ல முடியாது. ஒருவேளை மனிதன் முதன் முதலில் நெருப்பைக் கண்டுகொண்டு, அதைப்பற்றி தனது சகாக்களுக்கு சொல்ல முயற்சித்த போது தோன்றியிருக்கலாம். முதல் கதை எதைப்பற்றியதாக இருக்கும். நிச்சயம் பயம் பற்றியதாய்தான் இருக்கும். நெருப்பு மூட்டி, அதனைச் சுற்றி அமர்ந்து பயமுறுத்தும் கதைகள் பேசியிருக்கின்றான் மனிதன். நெருப்பு ஜ்வாலைகளினூடே விசித்திர ஜந்துகளும், பேய்களும் அவர்தம் கண்முன் தோன்றி ஆழப்பதிந்து போனது. உண்மை – பொய் இந்த இரண்டுக்கும் நடுவில்தான் கதைகள் இருக்கின்றன. கதைகள் உண்மையைக் கோருவதில்லை. பொய்யைச் சொல்வதுமில்லை. கதைகள் கதைகளாகவே இருக்கின்றன. மனித இனம் பல்கிப் பெருகி, இனங்களாகி உலகெங்கும் பரந்து சென்றது. அவற்றில் ஒரு மனித இனம் ஒரு இடத்தில் தனக்கான ஒரு பரப்பை உருவாக்கிக் கொண்டது. அவர்களுடன் டிராகனும், டிராகனின் நண்பர்களும் குடியேறினர். இந்த இடம் பின்னாட்களில் ஜப்பான் என்றழைக்கப்பட்டது.

பண்டைய – கொலம்பஸ் மற்றும் அவனது சகாக்கள் ஆக்கிரமிப்பதற்கு முந்தய – அமெரிக்க நாட்டார் மரபுகள், ஆபிரிக்க நாடுகளின் நாட்டார் மரபுகள், ஜப்பானிய நாட்டார் மரபுகள், ருஷ்ய நாட்டார் மரபுகள், இந்திய தொன்மங்கள் என்று நீண்டு செல்லும் இந்த கதை மரபு ஓய்ந்து போவதில்லை. யுகங்கள் கடந்தாலும் அவை புதிய வடிவங்கள் எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த கதை மரபுப் பரிணாமத்தில் கடைசியாக வந்த கலை வடிவம்தான் சினிமா. தொன்மங்கள், நாட்டார் மரபுகள் சினிமாவாக வந்திருக்கின்றன, வந்து கொண்டிருக்கின்றன. நேரடியாக அவற்றை தழுவி எடுப்பது ஒன்று, மீளுருவாக்கம் செய்வது இன்னொன்று.

ஜப்பான் என்றதும் உடனே மனதிற்கு வருவது டிராகன். டிராகன் இல்லாத அனிமி திரைப்படங்கள், டீவி அனிமிக்கள் இருப்பது அரிது.  ஜப்பானிய நாட்டார் மரபு – தொன்மம் மிகவும் செறிவுமிக்கது. பேய்களும், மன்ஸ்டர்களும் அதிகமிருக்கும் மரபே ஜப்பானிய நாட்டார் மரபு. ஜப்பான் ஆவியுலகில் ஒரு சனத்தொகை கணக்கெடுப்பு நடாத்தினால் ஒரு டெலிபோன் டைரக்டரி அளவிற்கு பெருகிவிடும்.

ஹயோ மியசாகி பற்றி எழுதாமல் இப்படி நாட்டார் மரபு என்றெல்லாம் எழுதிக்கொண்டு செல்வது சரியா? மியசாகியை புரிந்துகொள்வதற்கு ஜப்பானிய நாட்டாரியல் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். எந்தவித பின்னணி அறிவும் இல்லாம் ஒரு விடயத்தை புரிந்துகொள்வதற்கு கலை ஒன்றும் அவ்வளது எளிதானதில்லை. சினிமா அப்படியல்ல என்று ஒரு கருத்தும் உண்டு. இது நுகர்வு சினிமா உருவாக்கி வைத்திருக்கும் கருத்தியல். சிலநேரம் ஒரு படைப்பை விளங்கிக்கொள்ள பின்னணி அறிவோ, வாசிப்போ தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், நுகர்வுக் கலையைத் தவிர்ந்த ஏனைய அனைத்து (பெரும்பாலும்) கலைகளும் (பெரும்பாலும்) உழைப்பை கோருபவை. நுகர்வுக் கலை மனித மூளைக்கும், ஆன்மாவுக்கும், உணர்வுகளுக்கும் முக்கியத்துவமளிப்பதில்லை. மாறாக சிற்றின்பத் தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே உருவாக்கப்படுகின்றது. பார்வையாளன் புல்லரிக்கும் அனுபவத்தை பெற்று இன்னும் பத்து பேரை கூட்டிக்கொண்டு வந்தால் நுகர்வுக் கலையின் நோக்கம் நிறைவேறிவிடும். முற்றிலும் லாப நோக்கத்தை கொண்டே இவை இயங்குகின்றன. சமீப காலங்களில் வெளியாகும் அதிக சினிமாக்கள் துரித உணவுகள் போல ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட ஃபோமுலாவின் அடிப்படையில் எடுக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. சிறந்த உதாரணம் மார்வல் திரைப்படங்கள்.

ஜப்பானிய நாட்டார் மரபில் ஆன்மாக்களுக்கு (Spirits) அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. சொல்லப் போனால் ஜப்பானிய நாட்டார் மரபின் அனைத்து பேய்களும் மரித்தவர்களின் ஆன்மாக்களே. பழைய வீடுகளில் குடியிருக்கும் susuwatari எனும் தூசுப் பேய்கள் ஒரு உதாரணம். இவை அவ்வீடுகளில் மனிதர்கள் குடியேறிய பின்னர் காலப் போக்கில் அவ்விடத்தை விட்டு வேறொரு பாழ் வீட்டை நோக்கி சென்றுவிடும் என்பது நம்பிக்கை. உலகில் எந்த பேய் – மன்ஸ்டர்கள் பற்றிய நம்பிக்கை(கதை)களை எடுத்துக்கொண்டாலும், இந்த விசித்திர ஜீவிகள் இன்னொரு தனியுலகில் இருப்பதாகவே கருதுகின்றனர். ஆவியுலகம் (Spirit World) அவற்றில் ஒன்று. இங்கு மரித்தவர்களின் ஆன்மாக்கள் இருப்பதாக கருதுகின்றனர். இந்த ஆவியுலகிற்குள் மனிதர்கள் பிரவேசிக்க முடியாது. ஆனால், அவ்வுலகில் இருக்கும் பேய்களுக்கு எமது உலகினுள் பிரவேசிக்க முடியும். இது எல்லா மரபுகளிலும் இருப்பதுதான் இன்னும் ஆச்சரியம். பரிணாமக் கோட்பாட்டின் மூலம் இவற்றிற்கு அறிவியல் விளக்கம் சொல்ல முடியுமாக இருக்கும், ஆனால் அது பகுத்தறிவின் வன்முறையாக மாறிவிடும். இந்தக் கதைகள் எவ்வாறு தோற்றம் பெற்றன எனும் ஆராய்ச்சியெல்லாம் எமக்குத் தேவையில்லை.

ஆவியுலகைப் பொறுத்தவரையில் அது மனித ஆன்மாக்களின் உலகம். மனித உலகில் மனமும், அறிவும், வயதும் செல்லச் செல்ல தோற்றமும் மாறிக்கொண்டு செல்கின்றது. அவ்வாறே ஆவியுலகிலும் spirits விதம்விதமான, விசித்திரமான வடிவங்களில் இருக்கின்றன. இவற்றைக் கண்டு பயந்து மந்திரித்து ஓதுவதும், என்னைப் போன்று பேய்க் கதை எழுதுவதும் அவரவர் கைகளில்தான் இருக்கின்றது.

மன்ஸ்டர்களின் உலகம் இன்னும் விசித்திரமானது. பண்டைய கட்டிடங்கள், குகைகள், கல்வெட்டுகள், நாகரீகங்களின் எச்சசொச்சங்களில் இருக்கும் மன்ஸ்டர் ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவற்றில் இவை சிதிலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. டிராகன், பறக்கும் குதிரை, யுனிகோர்ன், இரத்தக் காட்டேரிகள், ராட்சத அரக்கர்கள் என்று பரந்திருக்கும் உலகமது. இப்படி ஆவியுலகம், மனித உலகம், மன்ஸ்டர்கள் உலகம் என்று நோக்கும் போது மல்டிவெர்ஸ் தியறிதான் ஞாபகத்திற்கு வருகின்றது.

இயற்கைக்கும் – அமானுஷ்ய உலகிற்கும் இணைப்பு இருக்கின்றது என்பதே மியசாகியின் நம்பிக்கை. மரங்களின் அசைவிற்கும் – மரத்துடன் தொடர்பான ஆன்மாக்களுக்கும் தொடர்பிருக்கின்றது, திடீரென்று ஏற்படும் புயல்காற்றிற்கும் – ராட்சத பூனை வாகனத்திற்கும் தொடர்பிருக்கின்றது. இயற்கையுடன் இயைந்து போகின்ற மனிதர்கள் இவற்றை உணர்கின்றார்கள். இதுதான் மியசாகியின் உலகம். மனிதன் – இயற்கை இரு எதிர் துருவங்களாக சித்தரிக்கும் முதலாளித்துவ நுகர்வுக் கலைக்கும் மனிதன், இயற்கை இரண்டும் இணைபிரிக்க முடியா ஆன்மாக்கள் எனும் மியசாகியின் கலையுலகிற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை உணர வேண்டுமானால் முற்றிலும் திறந்த மனதுடன் மியசாகியின் படைப்புலகை அணுகவேண்டும்.

ஹயோ மியசாகி ஜப்பானின் டிஸ்னி என்றழைக்கபடுகிறார். இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. டிஸ்னி ஒரு வியாபாரி. இயல்பான மனித உணர்வுகளைக் கடந்த படைப்புகளை உருவாக்கியவர். ஒரிஜினல் நாட்டார் கதைகளை மாற்றி “கடைசியில் இளவரசன் இளவரிசியை கைபிடித்து நீடூழி வாழ்ந்தான்…” என்று முடியும்படி செய்தவர். ஆனால் நாட்டார் கதைகள் நாமறிந்த சில டிஸ்னி தேவதைக் கதை கார்டூன்களின் அசல் நாட்டார் வடிவம் மிகவும் பயங்கரமானது. மியசாகியை தனித்து அடையாளம் காண்பதே பொறுத்தம் என்று நினைக்கின்றேன். டிஸ்னி போன்றல்லாது மியசாகி இயல்பான மனித உணர்வுகளை தன் படைப்பில் வரைந்தார். பதின்பருவ சிறுமிகளே அவர் உலகின் பிரதான பாத்திரங்கள். அனிமி உலகில் மியசாகி ஒரு பிகாசோ அல்லது வான்கோ. 20ற்கும் மேற்பட்ட (குறும்படங்களையும் சேர்த்து) அனிமி படங்களை இவர் இயக்கியிருக்கிறார்.

ஏனைய அனிமேஷன் படங்களைப் போலல்லாமல் மியசாகியின் அனிமி மிகவும் நுணுக்கமாகவும், துல்லியமான டீடைலுடனும் வரையப்பட்டிருக்கும். ஓடிக்கொண்டிருக்கும் நதியும் அதனுள் இருக்கும் கற்கள், உடைந்த பக்கட், சிறு மீன்களின் அசைவு என அனைத்தையும் பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார் அவர். இயற்கைக் காட்சிகளை மியசாகியின் அசையும் ஓவியங்களாக பார்க்கும் போது கிடைக்கும் ரம்மியம் அலாதியானது. பின்னணிக் காட்சிகளாக இருக்கும் இயற்கையும் மியசாகியின் பாத்திரங்களின் மனோநிலையை – இயல்பை பிரதிபலிப்பவயாகவே இருக்கின்றன. இயற்கைக்கும் மனிதனுக்குமிடையிலான உறவை தனது கதை மாந்தர்களான பதின்பருவ சிறுமிகளின் பார்வையில் பதிவு செய்திருப்பார் மியசாகி.

இயற்கை – மனிதன் – இயந்திரங்கள் இந்த விநோதப் பிணைப்பை தனது படைப்புகளில் உருவகித்துச் செல்லும் போது மனதில் ஏற்படும் ஒருவித சலனம் – ஜென்நிலை மியசாகியின் உலகில் மாத்திரம்தான் கிடைக்கும். Nausicaä of the Valley of the Wind (1984) வந்த அனிமி திரைப்படம், Tolmekia எனும் ராஜ்ஜியம் ராட்சத பூச்சியினங்களை அழிக்க எத்தனித்திருக்கும் வேலை அவற்றை எப்படியாவது அழிவிலிருந்து காப்பாற்றும் இளவரசி Nausicaäவின் போராட்டமே கதை. இக்கதையில் இயற்கை – மனிதன் – இயந்திரங்களுக்கிடையிலான உறவு சொல்லப்பட்டிருக்கும். இப்படத்தில் பெரும் போரொன்றால் நச்சாக்கப்பட்ட பூமி சித்தரிக்கப்பட்டிருக்கும். இயற்கை மீது செலுத்தப்படும் அதிகாரத்தினால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பாரதூரமானவை. ஒரு பழங்குடி மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான உறவென்பது பிரிக்க முடியாதது. அவன் தன்னையும் இயற்கையையும் பிரித்து நோக்குவதில்லை. அதனால் அவன் அதனை ஆழ நினைப்பதுமில்லை. இதுவே மியசாகியின் இயற்கை பற்றிய பார்வையுடன் ஒப்பிடத்தக்க கருத்தாக இருக்கின்றது.

மியசாகியின் அசையும் ஓவியங்கள் மிக மெதுவாகவே நகர்கின்றது. பல சந்தர்ப்பங்களில் அப்படியே நின்றும் விடுகின்றது. ராட்சத உயிரிகள் மிக மெதுவாகவே நகர்கின்றன. ஸ்பிரிடட் அவே படத்தில் வரும் ஆவியுலக ரயிலில் பேசாமல் அமர்ந்திருக்கும் ஆன்மாவும் பத்து வயது சிறுமி Chihiro Ogintoவும் இதற்கொரு சிறந்த உதாரணம். அதிரடி நிகழ்வுகளையும், விறுவிறுப்பான த்ரில்லர் காட்சிகளையும் கண்டு பழக்கப்பட்ட கண்களுக்கு இவை அழுப்பாக இருக்கும் என நினைத்தால் அது தவறு. அங்குதான் மியசாகி ஏனைய படைப்பாளிகளிடமிருந்து வேறுபடுகிறார். நாம் மியசாகியின் உலகில் பிரவேசித்த கணமே எம்மை அப்படியே ஒப்படைத்துவிடுகிறோம். நீண்ட நேரம் ஒரே காட்சி அப்படியே மெதுவாக நகர்கின்றது என்ற உணர்வு எமக்கு வருவதில்லை. பேசாமலேயே இரண்டு பாத்திரங்களும் எதை நாடுகின்ற என்பது எமக்கு புரிகிறது. இயற்கையின் மௌனத்தை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கின்றோம். இந்த நிலைக்கு ஜென் என்று பெயரிருந்தால் அப்படியே இருக்கட்டும்.

மியசாகி திரைப்படங்களை உருவாக்கிய காலத்தில் வந்த அனிமி திரைப்படங்கள் அதிரடி – வன்முறைமிக்கதாகவே இருந்தது. ஹாலிவூட் படங்களின் சண்டைக் காட்சிகளையும் விஞ்சக் கூடிய மேக்கிங்கில் இப்படங்களின் காட்சியமைப்புகள் இருக்கும். அப்படியான தருணத்தில் இயல்பான மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் படங்களை அவர் உருவாக்கினார்.

ஆன்மாக்கள் இயற்கையினூடு மனிதனுடன் உறவாடுகின்றன. ஆன்மாக்களை சிறுவர்களே காண்கின்றனர். அவர்களே அவற்றுடன் கதைக்கின்றனர். இந்தக் கதையாடல் மொழிகளற்ற வெளியிலேயே நடக்கின்றது. நாம் பெரியவர்களானதும் அவற்றுடன் கதையாட முடிவதில்லை, புறகாரணிகளும், வழுக்கட்டாயமாக எமக்கு நாமே போட்டுக் கொண்ட கற்பிதங்களும் இவற்றை மறுக்கின்றன. வெறும் தொன்மங்களாகிவிட்ட இந்தக் கதைகளை பெரியவர்கள் சிறுவர்களுக்குச் சொல்கின்றார்கள் நம்பிக்கையின்றி. சிறுவர் உலகில் இந்தக் கதைகள் உண்மை. ஆனால் பெரியவர் உலகில் இவை வெறும் எச்சங்களாகிவிட்டன. மியசாகி இந்த இழப்பை தனது படைப்புகளில் ஆழமாக உணர்த்துகின்றார். எந்தவித திணிப்பும் இல்லாமல். My Neighbor Totoro (1988) படத்தில் சொல்லிச்செல்வது இதுதான். பத்து வயது சிறுமி, அவள் தங்கை மற்றும் தந்தையுடன் ஒரு கிராமப்புறப் பகுதிக்குச் செல்கிறார்கள். தாய் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தந்தை – சிறுமிகளை பார்த்துக்கொள்வது ஒரு தாய் பார்த்துக்கொள்வதைப் போலல்ல. இங்கு அது கொண்டாட்டமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

My Neighbor Totoro படத்தில் முதன் முறையாக பழைய வீட்டிற்கு வரும் சிறுமிகள் வீட்டைக் கண்டவுடன் துள்ளிச் சென்று விளையாடுகின்றார்கள். அப்பொழுது ஒரு வீட்டுத் தூண்டு உடைந்து விழப்பார்க்கின்றது. இதுவே ஹாலிவூடாக இருந்தால் சஸ்பென்ஸ் காட்சியாக மாறியி தூண் இடிந்து விழுந்து சிறுமி ஒருத்தியின் காலில் விழுந்திருக்கும். ஆனால் அந்த தூண் விழுவதேயில்லை. படத்தில் வீடும் அதனைச் சுற்றியிருக்கும் ரம்மியமான இயற்கையும் மனதிற்கு இதமாக இருக்கும். வீட்டை அண்மித்து வளர்ந்திருக்கும் ராஜ விருட்சம் இயற்கைக்கு முன் நாமெல்லாம் எம்மாத்திரம் என்று உணர்த்துகின்றது.

மியசாகியின் படைப்புலகில் போன்று மனிதர்களை மிகத் துள்ளியமாக, நுணுக்கமாக காட்டுவதை வேறெந்த அனிமேஷன் படைப்பிலும் காண முடியாது. My Neighbor Totoro படத்தில் குட்டிச் சிறுமி குட்டிப் பிசாசுகளை துரத்திக் கொண்டு பின்னால் போகும் காட்சியின் தத்ரூபம்… அற்புதம்.

மியசாகியைப் பற்றியும் அவர் படைப்புளைப் பற்றியும் பேசுவதென்றால் இந்தக் கட்டுரைக்கு முடிவென்று ஒன்று இருக்காது. மியாசிகிக்கு கிடைத்த விருதுகள் அங்கீகாரம் என்று ஒரு பந்தியை போட்டு இக்கட்டுரையை நீட்ட விரும்பவில்லை, அதை இன்டர்நெட்டில் தேடினாலே அறிந்துகொள்ள முடியும். மியசாகி உலகில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர். ஆனால் சேர்ஜியோ லியோனி போல் “சிறந்த” பட்டியலில் வரமாட்டார். இந்தக் கலையுலகம் ஐரோப்பிய அழகியல் கோட்பாட்டிற்குள்ளோ, ஹாலிவூட் ரொமான்டிஸித்திற்குள்ளோ வராதபட்சத்தில் அவர்களை தேர்ந்தவர்களாக ஏற்றுக்கொள்ளாது. கடைசியாக மறைந்த சினிமா விமர்சகர் Roger Ebert (இவர் மியசாகியின் முக்கிய படைப்புகள் அனைத்திற்கும் விமர்சனம் எழுதியிருக்கிறார்)இன் வாக்கியத்தோடு முடித்துக்கொள்கின்றேன், “வரலாற்றில் ஆகச்சிறந்த அனிமேஷன் திரை இயக்குனர்தான் மியசாகி.”

இக்கட்டுரை “கரவொலி” சஞ்சிகைக்காக எழுதப்பட்டது. 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s