Under the Shadow (2016)

hero_under-shadow-2016-4

ஈரானிய ஹாரர் சினிமா. உலகளவில் ஈரானிய சினிமாவிற்கு மிகுந்த மதிப்பு இருப்பது அனைவரும் அறிந்த விடயம். உள்நாட்டில் தடைசெய்யப்பட்ட திரைப்படங்கள், அரசினாலேயே திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி விருதுகள் வென்ற படங்கள் நிறையவே இருக்கின்றன. ஜஃபர் பனாஹி போன்று எக்ஸைலில் சினிமா எடுப்பவர்களும் உண்டு. வெளியுலகிற்கு தரமான சினிமாவை உருவாக்கும் நாடு என்ற மாயையை கட்டமைத்து, உள்நாட்டில் இறுக்கமான தணிக்கை, அரசின் ஒடுக்குமுறை, கட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் நாடுதான் ஈரான். அங்குள்ள படைப்பாளிகளின் படைப்புகளில் இருக்கும் இறுக்கத்தன்மை, சிறுவர்களை மையமாகக் கொண்ட படைப்புகள், குடும்ப அமைப்பு போன்ற கதையம்சங்களில் வெளிப்படும் அரசியல் என்பன அரசின் மீதான எதிர்ப்புணர்வின் வெளிபாடே. இப்படியான ஒரு சூழலில் இருந்து வெளிவரும் ஒரு ஹாரார் சினிமா எப்படியிருக்கும், Under the Shadow படத்தை ஈரானின் சமூக அரசியல் சிக்கல்களை அறிந்த ஒருவர் பார்க்கும் பொழுது இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.

80களின் ஈரான் – ஈராக் யுத்தப் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் கதை, புரட்சிக்கால பெண் பாத்திரமாக தாயும், அந்த காலகட்டத்திலேயே அரச சார்பாக நின்ற தகப்பனும், மகளுக்குமிடையேயான உறவில் உள்ள சிக்கல்களை மையப்படுத்திச் செல்கிறது. புரட்சியில் ஈடுபட்டதற்காக மருத்துவப் படிப்பை தொடர முடியாத கோபம், விரக்திநிலையில் தாய்ப் பாத்திரத்தை உணர்வுப்பூர்வமாக எடுத்து நடித்திருக்கிறார் Narges Rashid. ஒருவித emotional struggle / conflict நிலையிலான பாத்திரம் இவருடையது. இந்த சவாலை கச்சிதமாக எடுத்தாண்டிருக்கிறார் இவர். இந்த உறவுச் சிக்கலுக்கிடையில் யுத்தமும், அரசின் ஒடுக்குமுறையும் மெலிதாக பூசப்பட்டிருக்கின்றது. இந்த இறுக்கமான நிலையில் அமானுஷ்ய entity ஒன்று போர்த்திக்கொள்கிறது.

பெற்றோரின் அவசர வாழ்க்கைகிடையில் குழந்தைகள் தங்கள் தனிமையைப் போக்க உருவாக்கிக் கொள்ளும் புலப்படா நண்பன் என்ற உளவியல் காரணி போன்ற தோற்றத்தை கதை கொடுக்கின்றது. ஆனால், அது அப்படியான ஒன்று இல்லை என்பது பிற்பாடு தெரியவருகின்றது. பெற்றோர்கள் குழந்தைகளின் பேச்சுக்கு செவிசாய்ப்பதேயில்லை என்பதை அதிகமான ஹாரர் திரைப்படங்கள்தான் எமக்கு உணர்த்தியிருக்கின்றது. இந்த படத்தில் அமானுஷ்ய entityயாக ஜின் உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுவரையில் ஹாரர் சினிமாவில் மிகக் குறைவாகவே ஜின்கள் பாத்திரங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் எதுவுமே இந்த திரைப்படத்தில் உள்ளது போல் இல்லை என்பதே உண்மை. ஜின் பற்றிய நம்பிக்கைகள், தொன்மங்கள் ஈரான் போன்ற பகுதிகளில் அதிகம் இருப்பதாலோ என்னவோ இப்படத்தில் அது தத்ரூபமாக அமையப்பெற்றிருக்கின்றது. ஒருசில cheap thrill காட்சிகளை தவிர்த்து படத்தில் பயத்தின் அழகியல் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றது. பயமென்பது திடுக் தருணங்களை மாத்திரம் கொண்டதல்ல, அது பார்வையாளர்களிடம் இனம்புரியாமல் விதைக்கப்படும் போது படைப்பை தாண்டியும் ஆழப் பதிந்துவிடும். இப்படத்தில் அது கைகூடியிருக்கின்றது என்றே கூறலாம்.

Under the Shadow, யுத்தச் சூழல் – அரசியல் நெருக்கடி – அமானுஷ்யம் – மனித உணர்வுகள் என்று மிக நுணுக்கமாக பின்னப்பட்டிருக்கின்றது. படம் கியர்மோ டெல் டோரோவின் The Devil’s Backbone பாதிப்பில் இருக்கின்றது என்பதை கதையம்சத்தையும், ஒரு காட்சியில் வந்து விழும் மிசைல் ராக்கட்டையும் அது வெடிக்காமல் எப்பொழுது வெடிக்கும் என்ற அச்சத்தை வைத்தும் கூறலாம். கியர்மோவன் Spanish Civil War திரைப்படங்களான Pan’s Labyrinth மற்றும் The Devil’s Backbone இரண்டும் இப்படத்தின் கோர்வையை கொண்டிருப்பவை. தொன்மத்தையும், யுத்தம் அரசியல் – அரசியல் நெருக்கடி, மனிதம் போன்றவற்றை கோர்த்து அற்புதமான படைப்பாக மாற்றும் ஜீனியஸ்தனம் கியர்மோவிடம் அதிகமாகவே இருக்கின்றது. கற்பனையாற்றல், சினிமா பற்றிய ஆழமான புரிதல் தாண்டி தனக்கேயுரிய visionஐ கொண்டிருந்தால் மாத்திரமே இம்மாதிரியான படைப்புலகை உருவாக்க முடியும். பீட்டர் ஜாக்சனின் Lord of the Ring படத்திற்கும் Pan’s Labyrinth படத்திற்குமிடையில் இருக்கும் வித்தியாசம் இதுதான். சமகால ஹாரர், டார்க பென்டசி இயக்குனர்களை அதிகம் பாதித்த சினிமா ஆளுமையாக கியர்மோவைக் கூறலாம். அந்தவகையில் Babak Anvari இன் Under the Shadow சிறப்பாக இந்த கோர்வையைக் கையாண்டிருக்கின்றது.

சமீபத்தில் வெளிவந்த The Babadook படமும் இது போன்ற ஒன்றே. Babadook அரசியல் பேசவில்லை என்றாலும் emotional struggle இற்கு உள்ளான தாய் – மகன் உறவுடன் அமானுஷ்யம் சார்ந்த உளவியலை பேசுகின்றது. Under the Shadow படத்தின் தாய் – மகள் emotional conflict / struggleஐ Babadook உடன் ஒப்பிடலாம். இதுபோன்ற emotional content உள்ள முக்கியமான படம் பொலன்ஸ்கியின் Repulsion. Babak Anvari, Repulsion திரைப்படம் தன்னை பாதித்த, படைப்பிற்கு காரணமான படங்களில் ஒன்றென குறிப்பிடுகின்றார்.

normal_under_the_shadow-thumb-860xauto-54861

ஈரானின் ஜின் தொன்மத்தையும், யுத்தகால சூழலையும் வைத்து அரசியலை பேசுகின்றது இந்த திரைப்படம். வீட்டினுள் சுதந்திரமாக இருப்பது போன்ற நிலையும், வெளியில் செல்லும் போது இறுக்கமான கட்டுபாடுகளும், அரசியல் – ராணுவ கெடுபிடிகளும் ஒரு தளத்தில் பயமுறுத்துகின்றன. இன்னொரு தளத்தில் அமானுஷ்ய ஜின்னின் பயமுறுத்தல். இரண்டையும் ஈர்ப்புடன் இணைக்கும் நடிப்பு. அடுத்து எப்பொழுதும் போல் இசை The Wailing படத்திற்கு பிறகு இப்படத்தில் திகிலிசை அற்புதமாக கையாளப்பட்டிருக்கின்றது. ஈரானிய இசை பயத்தின் இசையாக மாறும் தருணங்கள் சிறப்பு. திரும்பவும் கூறுகின்றேன், படத்தில் நடிப்பு மிகப்பெரும் பலமாக அமையப்பெற்றிருப்பது மேலும் பயத்தினுள் எம்மை ஈர்த்துவிடுகின்றது.

The Devil’s Backbone, Repulsion, The Tenant, Rosemary’s Baby, Pan’s Labyrinth போன்ற படங்களை வைத்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. இலங்கை போர்ச்சூழல் – அரசியல் நெருக்கடி, யுத்தத்திற்கு பிறகான மனித வாழ்வு சார் பிரச்சினைகள், emotional struggle / conflict, நாட்டார் மரபு, தொன்மங்கள், யுத்த கால கட்டத்தில் பரவிருந்த அமானுஷ்ய கதைகள் போன்றவற்றை நுணுக்கமாக கையாள்வதன் மூலம் தனித்துவமான படைப்புகளை உருவாக்க முடியும். அது குறுகிய நோக்கற்ற, விசாலமான பார்வையும், வீரியமிக்க படைப்பாற்றலும் இணையும் போது வெளிப்படும். மாறாக அமானுஷ்யம், ஹாரர் சினிமா, பென்டசி போன்ற கலை வெளிப்பாடுகள் இந்த நிலத்திற்கு, இலங்கை படைப்புலகிற்கு ஒவ்வாத ஒன்று என மறுதலிக்கும் பார்வைகள் என்று தட்டிக்கழிப்பது படைப்பியக்கத்தின் குறுகிய சிந்தனையையே வெளிப்படுத்தும். வெறுமனே யதார்த்த சித்தரிப்புகள், இறுக்கமான முகங்கள், இந்திய தமிழ் சினிமாவின் அரைவேக்காட்டு மறுவுருவாக்கங்களால் மாத்திரம் இலங்கை தமிழ் சினிமாவை கட்டியெழுப்பிவிட முடியாது. இது இயங்கிக் கொண்டிருக்குமு் ஈழத்து படைப்பாளிகளுக்கும், தமக்கான சினிமா உலகை உருவாக்க துடித்துக் கொண்டிருக்கும் இளம் முஸ்லிம் படைப்பாளிகளுக்கும் பொறுந்தும் ஒன்றே. Under the Shadows போன்ற படைப்புகள் சிறந்த படிப்பினையாக அமையக்கூடும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s