The Wailing (2016)

reviewwailing03

“See my hands and my feet, that it is I myself. Touch me, and see. For a spirit does not have flesh and bones as you see that I have.” Luke 24:37-39

பேயெழுத்தில் எப்பொழுதும் ஒரு விடயத்தைப் பற்றி அடிக்கடி எழுதிக்கொண்டிருப்பேன், அது நம் மரபில் இருந்தே ஏன் பயத்தின் அழகியலை உருவாக்கக் கூடாது, வேர்விட்டு கிளைபரப்பி பழங்காலந் தொட்டு இருந்துவரும் நாட்டார் மரபுகளில் இருந்து நாம் திரைமொழியில் சாதிக்க முடியுமான களங்கள் எத்தனை இருக்கின்றது, இவற்றை கொஞ்சம் ஊன்றி ஆராய்ந்து வந்தோமானால் படைப்புலகில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

நான் சிறுவனாக இருக்கும் போது கேட்டு வளர்ந்த கதைகள் ஏராளம். முதியோர்களிடத்திலும், வயதில் மூத்த பெரியவர்களிடத்தில் இருந்தும் ஏராளமான கதைகளை கேட்க முடிந்தது. அது தவிர கிராமத்தில் அப்பொழுது நடந்த சில பேயோட்டும் சம்பவங்கள், சூனியம் செய்பவர்கள், சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் கதைகள், நம்பிக்கைகள் எல்லாம் அதிகமாக பரவியிருக்கும். இவையெல்லாம் நம் வாழ்வுடன் கலந்த விடயங்கள். நகர்புறங்களில் இவ்வாறான நம்பிக்கைகளை அதிகம் பார்க்க முடிவதில்லை. அங்கு கதைகள் சொல்வதற்கு யாரும் இல்லை. சடத்தில் மூழ்கி, கான்க்ரீட்டில் மரித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் அவர்கள். இந்த நம்பிக்கைகள் காலப்போக்கில் காணாமல் போய்விட்டாலும் அவை விட்டுச் சென்ற சுவடுகள் இன்னும் இருப்பது ஒருவகையில் ஆறுதல். இந்த நாட்டார் மரபுகளை பதிவு செய்யும் பணியின் அவசியம் ஒருபுறமிருக்க அவற்றை கலையுலகில் மீளுருவாக்கம் செய்ய வேண்டியதின் அவசியமும் இருக்கின்றது.

அப்படி ஒருமுறை எமது ஊரில் ஒரு இளைஞனுக்கு பேய்பிடித்தாட்டுகிறது என்ற கதை பரவியது. அது வயல் சார்ந்த ஒரு நிலப்பகுதி, அருகில் நீரோடையொன்றும் ஓடிக்கொண்டிருக்கும். குறுக்கு வழிப்பாதையென்று தலையைச் சுற்றி மூக்கைப் பிடிப்பது போல் ஒரு பாதை. நீரோடையின் முன்னால் இருந்த சிறிய மண்வீட்டில்தான் அந்த இளைஞன் வசித்து வந்தான். கூலி வேலை செய்வதுதான் அவன் தொழில். பேய்விரட்டுவதை பார்க்க வேண்டும் என்ற அவாவை விட பயம்தான் அதிகம் தொற்றிக் கொண்டது. அது நாங்கள் விளையாடப் போகும் பகுதியல்லவா. அந்த கதை இப்படி ஆரம்பிக்கின்றது, ஒருநாள் அந்த இளைஞன் வயலில் பட்டம் (காத்தாடி) விட்டுக்கொண்டிருந்திருக்கிறான், அப்பொழுது வயலில் ஒரு பாம்பு சட்டை இருந்திருக்கின்றது. ஆர்வமிகுதியால் அந்த சட்டையை தொட்டிருக்கிறான். பின்னர், மயக்கம் போட்டு விழுந்தவனை கண்டவர்கள் தூக்கிச் சென்று வீட்டில் விட்டிருக்கின்றார்கள். நாட்கள் செல்லச் செல்ல அவனது நடவடிக்கையில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கின்றது. பாம்பு போல் நெளிய ஆரம்பிக்கின்றான், இரவில் ஊர்ச் சுற்றச் செல்கிறான். இப்படி இது முற்றிச் செல்ல வீட்டில் உள்ளவர்கள் பதட்டமடைந்து ஓதிப் பார்க்க ஒரு ஹஸரத்தை நாடுகின்றார்கள். அந்த மனிதர் வந்து ஓதிப் பார்த்துவிட்டு, இவனுக்கு ஒரு ஜின் பிடித்திருக்கின்றது. அது பாம்பு தோற்றமெடுக்கும் ஜின் என்று கூறுகின்றார். இப்படியாக அந்த கதை பரவி, அவன் தோல் எல்லாம் பாம்பின் தோல் போல் இருக்கின்றது, என்பது வரைக்கும் வளர்ந்து நின்றது. இவ்வளவுக்கும் நானோ, இந்தக் கதையை வகுப்பில் வந்து கதை கதையாக சொன்ன நண்பனோ நேரில் கண்டு அறிந்ததில்லை. வாய்வழிக் கதைக்கு பின்னிணைப்புகள் சேர்த்து சொல்லப்பட்டவைதான் என அறிந்துகொள்ள எனக்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டது. அதன் பிறகு அவனுக்கு என்ன நடந்தது, பேய்விரட்டினார்களா என்றெல்லாம் தெரியாது. ஆனால், கொஞ்சகாலம் அவனை ஒவ்வொரு முறை பார்க்கும் போதெல்லாம் பாம்புத் தோல் ஜின்னாகத்தான் பார்த்துவந்தேன்.  இதுவரையில் அவனுடன் ஒருவார்த்தைக் கூட பேசியதில்லை.

the-wailing

இந்த கதை போன்று நிறைய கதைகள் ஊரில் அப்பொழுது பரவியிருந்தது, நீரோடை பக்கம் ஒளிந்திருந்து முனகும் மோகினி, சாதிக்காய் தோட்டத்தில் ஒவ்வொரு இரவிலும் வரும் ஆச்சி, தேவு, சங்கிலி மாடு, ஜின் வந்த கதை என்று நிறைய. இது தவிர எனது பாட்டி சொன்ன கதைகளும் உண்டு. இக்கதைகளை கவனித்து வந்தால் பலவிடயங்களை அவதானித்துக் கொள்ளமுடியும். திரைப்படங்களைப் போல் இவை ஆரம்பம், நடு, முடிவு என்று மூன்று அங்கங்களாக இருப்பதில்லை, மாறாக இவை கிளைபரப்பிக் கொண்டு செல்லும். ஒன்றுக்கொன்று தொடர்பான விடயங்களும் இருக்கும், முற்றிலும் தொடர்பறுந்த கதைகளும் இருக்கும். இவற்றின் கோர்வைதான் இந்த மரபு. இதையே சினிமாவாக மாற்றினால் எப்படியிருக்கும்? அப்படியான சினிமா எமது மரபுச் சினிமா உருவாக்கத்தில் எந்தளவிற்கு முன்னோடியாக இருக்கும்? அப்படியொரு சினிமாதான் the Chaser, the Yellow Sea போன்ற படங்களை எடுத்த Na Hong-jin இன் The Wailing. இரண்டரை மணித்தியாளங்களுக்கு ஓடும் இந்தத் திரைப்படத்தில் எமக்குக் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றன.

ஒரு சினிமா ரசிகனால் நீண்ட காலத்திற்கு ஹாரர் படங்களை ரசித்துக்கொண்டிருக்க முடியாது. எப்பொழுதும் அவன் பயந்துகொண்டு இருக்கப் போவதில்லை. ஏற்கனவே பல ஹாரர் படங்களை பார்த்தாயிற்று, சளிக்கும் அளவுக்கு க்ளிஷேக்களை உபயோப்படுத்திவிட்டார்கள், இப்பொழுதும் உபயோகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இன்று ஒரு ஹாரர் படத்தை உட்கார்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை எளிதாக சொல்லிவிட முடியும். ஹாரர் சினிமா தன்னளவில் பரிணாம மாற்றம் காணவேண்டிய தருணம் இது. இந்த வகையறாவில் வரும் சில புதிய முயற்சிகள் பயத்தின் அழகியலை மிக நுணுக்கமாக உள்வாங்கி ஹாரர் வகையறாவையும் தாண்டி நிலைத்துவிடுகின்றது. அந்தவகையில் ஹாரர் சினிமாவின் அடுத்தக் கட்ட நகர்வாக The Wailing படத்தைக் கூறலாம்.

நகர் – கிராமம் சார்ந்த பகுதி. வனப்பு மிக்க வனம். மலைகள். மழை. ஒரே ஊர். ஒரே பொலிஸ் நிலையம். கொலை போன்ற குற்றச்செயல்களை காணாத ஊர். குற்றங்கள் குறைவான இடத்தில் பொலிஸ்காரன் எப்படியிருப்பான். முதல் காட்சியிலேயே பொடுபோக்கான ஒரு பொலிஸ் பாத்திரத்தை நம்முன் வைத்தாயிற்று. கொலை என்று கூறிய பின்னரும் காலையுணவை உண்டு விட்டு செல்ல வேண்டிய நிலையில் அவன். மகள், மனைவி, தாய் மற்றும் ஊர் என்று வாழும் பாத்திரம் தொடராக நடக்கும் மரணங்கள் என்ன செய்கிறது என்பதைத்தான் திரைமொழி கூறுகின்றது.

தொடர் மரணங்கள், மர்மம், பொலிஸ் விசாரணை, அமானுஷ்யம் என்று கதையில் சுவாரஷ்யமான விடயங்கள் இருந்தாலும் எம்மை அது சுவாரஷ்யமாக அனுபவிக்க விடுவதில்லை. படத்தின் நாயகன் Jong-goo எப்படி அலைக்கழிக்கப்படுகிறானோ அப்படியே நாமும் அலைக்கழிக்கப்படுகின்றோம்.

file_749623_wailing1

“See my hands and my feet, that it is I myself. Touch me, and see. For a spirit does not have flesh and bones as you see that I have.” Luke 24:37-39 பைபிள் வாசகத்துடன் ஆரம்பிக்கும் திரைப்படம் எவ்வாறு அந்த வாக்கியத்துடன் பொறுந்திப் போகின்றது என்பதை படத்தின் முடிவில் அறிந்துகொள்ள முடியும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சிதறடிக்கப்பட்ட காட்சிகள், பின்னர் அது கோர்க்கப்படும் விதம், நாம் தெளிவடைந்து வருவது போல் தோன்றினாலும் மீண்டும் ஒரு மூலையில் நம்மை இழுத்து வீசி விடுகின்றது. பற்றி எரிந்து போன வீட்டை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அறிமுகமாகும் மர்மமான பெண், அவள் பெயர் Moo-myeong – கொரிய மொழியில் “பெயர் அற்ற” என்று பொருள்படும். இப்படி ஊரினுள் மர்மமாக பரவும் ஒரு தொற்றுநோயும், அதனுடன் தொடர்பாக நிகழும் மரணங்கள் எல்லாம் மர்மம்தான், இவற்றினிடையில் ஒரு மர்ம மனிதன் (?) வனத்தில் சுற்றித் திரிந்துகொண்டு பச்சையாக மிருகங்களை உண்கிறான் என்றும் அவனொரு பிசாசு என்றும் கதை பரவிக் கொண்டிருக்கின்றது.

ஒரு கட்டத்தில் தனது மகளுக்கு அந்த தொற்றுநோய் பரவிக்கொண்டு செல்ல, அது தொற்றுநோய் அல்ல ஒரு அமானுஷ்யத்தின் வேலை என்று கணித்து, அதனை விரட்ட ஒரு மந்திரவாதியை நாடுகின்றான். இது பிரச்சினையை மேலும் வலுவடையச் செய்கின்றது. இதற்கு மேலும் கதையின் சம்பவங்களை நோக்கிச் செல்லாமல், நாட்டார் மரபிற்கும் இந்த படைப்பிற்கும் என்ன தொடர்பு என்று சற்று பார்ப்போம்.

உலகளவில் நாட்டாரியல் செழிப்புடன் இருக்கும் பகுதி கிழக்காசிய நாடுகள்தான். அமெரிக்காவின் ஹாரர் படங்கள் பயங்கர க்ளிஷேவாக, இரத்தம் சார்ந்ததாக மாத்திரம் இருக்கும் பொழுது, தென்கொரியா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளின் ஹாரர் திரைப்படங்கள் பல்வேறு கருக்களில், கதையம்சங்கள் நிறைந்ததாக, பிசாசுகள் நிறைந்ததாகக் காணப்படுவதற்குக் காரணம் இப்பகுதிகளில் உள்ள நாட்டார் மரபுகள்தான். அப்படிப் பார்த்தால் இந்தியாவில் இதே அளவிலான (குறைந்தோ – கூடியோ) நாட்டார் மரபு இருக்கின்றது. ஆனால், ஏன் இவ்வாறான படைப்புகள் வருவதில்லை? இதற்குத் தீர்வு இக்கேள்வியை திருப்பித் திருப்பித் கேட்டுக்கொண்டிருப்பதே.

thumb

சரி, The Wailing அதிகமதிகம் ஹாரர் திரைப்படங்கள் வெளிவரும், அதிலும் சிறப்பாக உருவாக்கப்படும் தென் கொரியாவில் எடுக்கப்பட்டாலும், ஹாரர் சினிமாவில் ஒரு முக்கிய படைப்பாக விளங்கக் காரணம் அது மரபுக் கதையை கையாண்ட விதம்தான்.

இந்த கிழக்காசிய நாடுகளின் படங்கள் அவர்களின் மரபுகளில் நின்று வெளிப்பட்டாலும் மேலைநாட்டு சினிமாக்கலையின் நிழலில் நின்று முற்றிலும் விலகிச் செல்லவில்லை. ஆனால், The Wailing மரபின் வேர்களில் நின்று கதை சொல்கிறது. பேய்விரட்டும் காட்சி, மந்திரவாதி, அமானுஷ்ய சக்தி எல்லாம் எமது ஊரில் நடப்பது போலவே இருப்பதுதான் இதன் விசேடம். எங்கள் ஊரில் நடுப்பகல் நேரம் – ஊர்மநேரம் – சில பகுதிகளில் நடமாட வேண்டாம் என்று சொல்வார்கள், நள்ளிரவு நடமாட்டத்தை விட இது பயங்கரமானது. யாழ் – பளையில் சுற்றிக்கொண்டிருக்கும் போது வைரவர் நடுப்பகலில் நடமாடுவதாகவும், காட்டுப் பகுதியில் சுற்றுபவர்களை எங்காவது கொண்டு சென்றுவிடுவதாகவும் கதைகள் கேட்டிருக்கின்றேன். அப்படித்தான் இந்த படத்தின் அமானுஷ்யம் பகலில்தான் அதிகம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த காட்சிப்படுத்தலானது இரவைவிட அதிகம் எம்மை பயத்தின் அருகில் கொண்டு செல்கிறது. இங்கு ஹாரரின் பிரதான விதி மிகச் சரியாக மீறப்படுகின்றது. மிகச் சரியாக என்பதின் மூலம் கூறவிளைவது இதற்கு முன்னரும் இப்படியான முயற்சிகள் சில இருந்தாலும் அவை இந்தளவிற்கு இல்லை என்பதே.

படத்தில் வாய்வழியாகப் பரவும் கதையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதில் உண்மை – பொய், யதார்த்தம் – புனைவு எதுவென்று எம்மால் பிரித்தறிய முடிவதில்லை. நான் மேலே சொன்ன பாம்பு கதையும் இவ்வாறான ஒன்றுதான். அதில் வாய்வழியாக மாறி மாறி வரும் கதையும் இருக்கின்றது, உண்மையும் இருக்கின்றது. ஆனால், பிரித்தறிவதுதான் கடினமானது. நாயகனின் நண்பர்கள் வழியாக இக்கதைகள் விவரிக்கப்படும் போது அவை தனிக் கதைகளாக உருக்கொள்கின்றது. இவற்றில் உண்மை, பொய் என்பதைவிட எமது புரிதல்தான் இதில் முக்கிய அம்சமாக இருக்கின்றது.

ஹாரர் சினிமாவில் இசைக்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் போன்று வேறெதற்கும் இல்லை என்றே கூறவேண்டும். சைகோ படத்தில் குளியலறை காட்சியில் இசையின் பரிமாணத்தை இதற்கு உதாரணமாகக் கூற முடியும். அந்த இடத்தில் “இளங்காற்று வீசுதே, இசை போல பேசுதே…” பாட்டைப் போட்டு நினைத்துப் பாருங்கள்!? இந்த படத்தில் உபயோகப்பட்டிருக்கும் இசை நாட்டுப்புற இசை. பேய்விரட்டும் காட்சியில் நாட்டுப்புறக் கருவிகள், கூச்சல், மந்திர உச்சரிப்புகள் எல்லாம் சேர்ந்து தரும் அனுபவம் உச்சக்கட்டம். இசையும் – காட்சிகளும் சேர்ந்து ஆடுவது, தாண்டவம்.

கதை பயத்தின் அழகியலை (இந்த பதத்திற்கு விரிவான விளக்கம் எதுவும் இல்லை, எப்படி இதனை புரியவைப்பது என்ற திறமையும் என்னிடம் இல்லை. ஆனால், இந்த படத்தினை பார்க்கும் பொழுது அதனை உணரமுடியும். இது ஒருவகையில் எனக்கு சாதகமாகவும் அமைந்துவிட்டது.) இத்திரைப்படம் அதிகம் முன்னிறுத்தி தன் மொழியினை அமைத்துக்கொண்டிருப்பதனால் முழுமையான ஒரு முடிவுறும் கதையாக, தெளிவான கதையாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. அதற்கான அவசியமும் இப்படத்திற்கு இல்லை.

கிழக்கின் தொன்மம், மேற்கின் தொன்மம், நல்ல சக்தி – தீயசக்தி இம்மூன்றும் எவ்வாறு இப்படத்தில் கோர்க்கப்பட்டிருக்கின்றது என்பதை ஊன்றிக் கவனித்தால் புரியலாம். ஒரு தேர்ந்த படைப்பாளியினால் மாத்திரம் இது சாத்தியப்படும்.

இயக்குனர் Na Hong-jin தனது பிற படங்களைப் போலவே இதனையும் ஒரு சவாலாகவே முன்வைத்திருக்கிறார். பரிசோதனை முயற்சிகள் போல் கூடத்தில் அடைபட்டுவிடாமல் மக்கள்மயப்பட்டு வெற்றியும் பெற்றிருக்கின்றது இந்தத் திரைப்படம். இப்படம் தவரவிடக் கூடாதது மாத்திரம் அல்ல சினிமா ஆர்வலர்கள், ஹாரர் திரைப்படத்தில் ஈடுபாடுள்ள அனைவரும் திரும்பத் திரும்பப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

The Wailing பற்றி கூற நிறைய விடயங்கள் இருக்கின்றது, ஆனால் அதற்கு நிறைய வாசிக்க வேண்டி இருக்கும். மீண்டும் சந்திப்போம்!

Advertisements

2 comments

  1. நண்பரே, தற்பொழுதுதான் இந்தப்படத்தை பார்த்து முடித்தேன். நிறைய குழப்பிவிட்டது, இப்படத்தின் முழுக்கதை விளக்கம் தமிழில் (கூகுளில் இல்லை) தேடி சலித்துவிட்டேன் ஆங்கிலத்தில் அத்தனை புலமையில்லை உதவ முடியுமா?

    • நண்பரே, இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல் இத்திரைப்படத்தின் கதையை புரிந்துகொள்வதை விட அது தரும் அனுபவம்தான் முக்கியமானது. மீண்டுமொரு தடவை பார்த்தால் புரியும் என நினைக்கின்றேன். வழக்கமான ஹாரர் சினிமாவில் இருக்கும் கதையம்சத்தை இதில் காணமுடியாமல் இருப்பதும் ஒரு காரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s