The Exorcist (1973)

dps863tyh76

Why Exorcist? சினிமா ஆர்வலர்கள், ஹாரர் சினிமா ஆர்வலர்கள் அனைவரினாலும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படத்தைப் பற்றி, நன்றாக அறியப்பட்ட ஒரு திரைப்படத்தைப் பற்றி ஏன் நோக்க வேண்டும்? என் நோக்கம் அறிந்திராத படங்களை அறிமுகப்படுத்துவதல்ல. இணையத்தில் தேடினால் நிறைய ஹாரர் படங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு திரைப்படம் அது தன்னளவில் எவ்வாறு வேறுபட்டு அதன் genreல் அல்லது அதனையும் தாண்டி சிறந்து விளங்குகின்றது என்பதை அலசுவதே எனது நோக்கம். இதுவரையில் வந்த அனைத்து ஹாரர் திரைப்படங்களை வைத்து ஒப்பிட்டு பார்த்தால் Exorcistஇன் இடம் எங்குள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.

ஏற்கனவே பல தடவைகள் முயற்சித்து எடுக்காமல் விடப்பட்ட ஒரு கதைதான் the Exorcist. Stanley Kubrick கூட இக்கதையை எடுக்க எத்தனித்தது தனிச் செய்தி. இப்படத்தினைப் பற்றி பார்க்கும் முன்னர், இப்படத்தைச் சுற்றி கூறப்படும் பல அமானுஷ்ய சம்பவங்களை கொஞ்சம் பார்ப்போம். ஏற்கனவே பல இயக்குனர்கள் முயற்சித்தும் எடுக்க முடியாமல் போனது, துர்ச்சம்பவங்கள், இப்படம் சாபத்திற்குள்ளாகியிருக்கின்றது, அதனுடன் தொடர்பானவர்களுக்கு ஏதேனும் துர்சம்பவங்கள் இடம்பெற்றது என்று பல உப கதைகள் இப்படத்தைச் சுற்றி அமைந்திருக்கின்றன. இவற்றின் ஆதாரத்தன்மைப் பற்றி இங்கு ஆராயவில்லை, ஆனாலும் இப்படியான கதைகள் ஒரு படத்தைச் சுற்றி அமைகின்றது, அது மக்கள் மனங்களில் ஆழமாக பதிந்தும் விடுகின்றது என்றால் இத்திரைப்படத்தின் ஆன்மா எந்தளவுக்கு மக்களிடம் கடத்தப்பட்டிருக்கின்றது என்பதை அறிய முடியும்.

மறைவான விடயங்கள் குறித்து மனிதனுக்கு இருக்கும் பயத்தைப் பற்றி ஆராய்கின்றது the Exorcist. வைத்தியர்கள் அதீத மனப்பிறழ்வின் காரணமாகத்தான் இந்த சிறுமி இப்படி விகாரமாக நடந்துகொள்கிறாள் என்று கூறுகின்றனர். ஆனால், அவளின் தாய்க்கு இது சாதாரண பிரச்சினையல்ல என்று விளங்குகின்றது. இரண்டு பாதிரிகள் இந்த அமானுஷ்யத்தை – தீயசக்தியை – விரட்ட எத்தனிக்கும் செயற்பாடுகளே இத்திரைப்படம். படம் இந்த exorcismத்தை சுற்றியே அமைக்கப்பட்டிருக்கின்றது. 1973இன் special effects காட்சிகள் இன்றும் பேசப்படும் அளவிற்கு கதையுடன் ஒன்றிப் போயிருக்கின்றது. சிறுமி அமானுஷ்ய விகாரநிலையை நடிப்பில் கொண்டுவந்திருக்கும் முறை அற்புதம்.

exorcist-1

நம்பிக்கை – நம்பிக்கையில் சந்தேகம், பாசம், இவற்றுக்கிடையில் ஊசலாடும் அமானுஷ்யம் (Demon) இவையெல்லாம் இப்படத்தைப் பார்க்கும் போது நம்மையும் பிடித்தாட்டுகின்றன. நிச்சயம் இப்படத்தை முதன்முறை பார்க்கும் ஒருவரால் அது தரும் பயத்தில் இருந்து விடுபட நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். இப்பொழுது இது போன்ற படங்கள் அதிகம் வருகின்றது என்பதால் அப்படியான உணர்வு வருவதற்கு வாய்ப்பில்லை என்றாலும், ஏனைய படங்களை விட இது சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் கேள்விகளை எழுப்பும்.

இப்பொழுதும் exorcism படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன, அவற்றில் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள், புனைவுகளை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் என்று வகைப்படுத்தலாம். பெரும்பாலான exorcism படங்கள் நிகழ்ந்த சம்பவங்களை வைத்து அல்லது அதனை ஒட்டியே எடுக்கப்படுகின்றன. இப்படியான சம்பவங்களை சினிமாவாக்கும் பொழுது அது விவரணப்படமாக மாறிவிடும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன, உண்மைச் சம்பவமாயினும், புனைவிலிருந்து எடுக்கப்படும் படமாயினும் அது சினிமாவாக இருக்க வேண்டும் மாறாக வெறுமனே ஒரு documentary ஆக அமைந்துவிட்டால் அதில் உயிர்ப்பு இருக்காது. சமீபத்தில் நான் பார்த்த அதிகமான exorcism படங்கள், the Exorcist (1973) இற்கு அருகிலும் வரவில்லை. ஆனால், இந்த படத்தின் பாதிப்பை நிறைய exorcism படங்களில் காணலாம்.

ஹாரர் படங்களிற்கு புதிய இலக்கணங்களை அமைத்துக் கொடுத்த the Exorcist படத்தை மீண்டும் மீண்டும் அலசுவதன் மூலம் ஹாரர் சினிமா குறித்த எமது பார்வையை தீட்டிக்கொள்ளலாம். திகில் திரைப்படம் எடுக்க எத்தனிப்பவர்கள் இப்படத்தை நன்றாக ஆராய்ந்து, உள்வாங்கி தங்கள் படைப்புலகை மீள்விசாரணை செய்து கொள்வது பிரயோசனமளிக்கும். திகில் திரைப்படமொன்றில் திடுக் பய தருணங்களை மாத்திரம் உருவாக்கிவிட்டால் மாத்திரம் போதாது, அப்படியான தருணங்கள் க்ளிஷேவாக மாறி பார்வையாளர்களை படத்தில் இருந்தும் விலகச் செய்துவிடும். ஹாரர் திரைப்படங்கள் காலப்போக்கில் அழுத்துவிடுவதற்கு காரணம் இதுதான். வருடா வருடம் ஓக்டோபரில் தவறாமல் வந்துவிடும் ஹாரர் திரைப்படங்கள் அப்பொழுதே மறைந்தும் விடும். அப்படியும் காலம் தாண்டி மறக்காமல் மனங்களில் நிற்கும் திகில் திரைப்படங்கள் வெகுசிலவே. இந்த listஇல் ஒரு வருடத்திற்கு ஒன்று கூட தேராது என்பதே நிதர்சனம். the Exorcist போன்று காலம் தாண்டி நிலைத்து நிற்க வெறுமனே ஸ்பெஷல் எஃபெக்ட்ஸும், திடுக் பயமும் மாத்திரம் போதாது, அதையும் தாண்டி அந்த திகில் சினிமா பார்வையாளர்களை பீடித்துக் கொள்ள வேண்டும் அதற்கு எப்படி எடுக்கவேண்டும் என்பதை இம்மாதிரியான திகில் க்ளாசிக்குகளை பார்க்க வேண்டும், இலக்கியங்களைப் படிக்க வேண்டும்.

exorcist-horror-movies-18854465-1680-1050

The Exorcist படத்தைப் பற்றி பேசும் அதன் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பற்றி பேசாமல் இருக்க முடியாது. அக்காலத்தில் பின்மண்டைப் பக்கம் சுழன்று நிற்கும் தலை, பேய்ப்பிடித்தாட்டும் காட்சிகள், சிறுமிக்கு ஏற்படும் சித்திரவதைகள், பேய்விரட்டும் காட்சிகள் எல்லாம் நிஜமான exorcism ஒன்றை கண்முன் கொண்டுவந்தது போல் இருக்கும். இதனை மேலும் உண்மைப்படுத்த பாத்திரங்களின் நடிப்பு, நீண்ட exorcism செய்யும் வசனங்கள், இசை போன்றன பெரும் பங்காற்றியிருக்கும். படத்தின் இயக்குனர் William Friedkin பார்வையாளர்களை திடுக்கிடச் செய்ய வேண்டும் என்ற குறுகிய எண்ணம் ஏதும் இல்லாமல் ஆறுதலாக, நிதானமாக மனங்களை தோண்டி பயத்தை விதைத்திருப்பார். விதை மரமாகி விருட்சமாவது வீடு சென்ற பின்னர்தான்.

சமகாலத்தில் திரைப்பட தொழில்நுட்ப அபாரமாக வளர்ச்சியடைந்திருக்கின்றது, சீஜி, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், ஒலி – ஒளி தொழில்நுட்பம் எல்லாம் இன்னும் இன்னும் முன்னேறிக் கொண்டுதான் செல்கின்றது, ஆனால் The Exorcist, நாஸ்பெராடு, Innocents போன்ற ஒரு படத்தையேனும் ஏன் வழங்க முடியாமல் இருக்கின்றது இந்த தொழில்நுட்பத்தால்? சினிமாவிற்கு தொழில்நுட்பம் தேவையா, தொழில்நுட்பம் தெரியும் என்பதற்காக சினிமாவா? இக்கேள்விக்கான தேடலை அடுத்த கட்டுரையில் நோக்கலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s