The Witch: A New-England Folktale (2015)

 

422168851_20160225101459

சூனியம் சாத்தானின் வேதம். வரலாற்றின் எல்லாக் காலகட்டங்களிலும் இது இருந்துவந்துள்ளது. இதன் தோற்றம் பற்றி பல்வேறு கருத்துக்கள், கதைகள் இருந்தாலும் அரசர் சாலமானின் காலத்தில் இருந்ததாக கருதப்படும் சாத்தான் எழுதிய இருண்ட கலைகள் பற்றிய புத்தகம்தான் சூனியத்தின் அடிப்படை என்ற கதைதான் இந்த தீய பயிற்சியின் மூலமாக கருதப்படுகின்றது. சாத்தான் – கடவுளின் எதிரி நல்லது – தீயது எனும் பைபிளின் கோட்பாடு சாத்தானை கடவுளுக்கு எதிரான ஒன்றாக பார்க்கின்றது. இஸ்லாமிய நோக்கில் இந்த இரு எதிர் கட்டமைப்பு இல்லை. இறைவன் சகல வல்லமையும் பொறுந்தியவன், சாத்தான் (ஷைத்தான்) அவன் படைப்புகளில் ஒன்று என்றே கூறுகின்றது. அரசர் சாலமான் இந்த சாத்தான் எழுதிய சூனியம் குறித்த புத்தகத்தை அழித்துவிட்டதாக கதைகள் கூறுகின்றன. எவ்வாறோ அதன் பிரதியை மையப்படுத்தி எழுதிய பிரதியொன்றை வைத்துதான் இப்பொழுது உள்ள சூனியக்கலை வளர்ந்தது என்ற கருத்தும் இருக்கின்றது. கடவுளுக்கு எதிராக சாத்தானை கட்டமைப்பது போல் இறை வேதத்திற்கு எதிராக இந்த சூனியப் புத்தகத்தை கட்டமைக்கின்றார்கள்.

ஐரோப்பாவின் இருண்ட யுகத்தில் மத பீடங்களுக்கு எதிராக இந்த சாத்தான் வழிபாடு இருந்து வந்தது. அக்காலத்தில் கண்டமெங்கிலும் சூனியக்காரர்களை ஒடுக்கும் வேலைகளை அரசுகளுடன் இணைந்து இந்த மதபீடங்கள் செய்தது. சூனியக்காரிகள் வேட்டையாடப்பட்டனர். எரிக்கப்பட்டனர். மக்களின் பீதியில் இவ்விரண்டு துருவங்களும் தங்களை வளர்த்துக் கொண்டது என்பதே சரியாக இருக்கும். இந்த பின்னணியில் வந்திருக்கும் திரைப்படம்தான் the Witch.

The Witch, சூனியம் மற்றும் சாத்தான் வழிபாடு போன்றவற்றை மையப்படுத்தி பதினேழாம் நூற்றாண்டின் இங்கிலாந்து குடும்ப அங்கத்தவர்களை பாத்திரங்களாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் ஒரு திரைப்படம். படத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் வசனங்கள் அனைத்தும் அக்கால பேச்சு வழக்கிலும், பைபிளின் வசனங்களுமாக இருக்கின்றன. மூடுபனி சூழ்ந்த காட்சியும், அதன் ஒளிக்கீற்றுகளும் பதினேழாம் நூற்றாண்டின் பின்னணி இசையுடன் எம்மை மெல்ல மூடிக்கொண்டே செல்கின்றது. இயக்குனர் Robert Eggersஇன் முதல் திரைப்படம் என்பது எங்கும் துருத்திக் கொண்டு தெரியவில்லை. தனது சிறுவயது முதல் சூனியக்காரிகள் மீது இருந்த ஈடுபாடுதான் இத்திரைப்படத்தை எடுக்கக்காரணம் என்று அவர் கூறுகின்றார். கியர்மோ டெல் டோரோவின் the Devil’s Backbone படம் அவரது சிறுபராயத்தில் ஏற்பட்ட ஒரு அமானுஷ்ய அனுபவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதுதான். இந்த இரண்டு படமும் அதன் கலைத்துவமான திரையாழ்கையின் மூலம் தனித்து நிற்கின்றது. இப்படத்தைப் பார்த்த பின்னர் எனக்கு இன்னொரு திரைப்படமும் ஞாபகத்திற்கு வந்தது. Nosferatu, Werner Herzog இயக்கிய டிராகுலாவின் கதை பயத்தினை ஆழமாக விசாரனை செய்கின்றது. The Witch தீய ஆன்மாவினை மெல்ல மெல்ல வெளிக்கொணர்கின்றது.

பதினேழாம் நூற்றாண்டின் இங்லாந்தில் ஒரு குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கின்றது மதபீடம். இந்த தண்டனையை ஏற்றுக்கொண்டு இருண்ட காட்டின் எல்லையில் தன் மனைவி, மகள், மகன் மற்றும் இரட்டையர்கள் சகிதம் குடியேறுகிறான் கணவன். குடியேறிய கொஞ்ச நாட்களிலேயே மனைவி ஒரு மகவை பிரசவிக்கிறாள். மகவைப் பார்க்கும் பொறுப்பு மூத்த மகளிடம் வருகிறது அச்சந்தர்ப்பத்தில் குழந்தை காணமல் போகிறது. பலி மூத்த மகளின் மேல் விழுகின்றது. பின்னர் வரும் காட்சியில் காணமல் போன குழந்தையை ஒரு சூனியக்காரிதான் தூக்கிச் சென்றிருக்கிறாள் என்று விளங்குகின்றது. அக்காட்சி அந்தக் குழந்தையை அவள் கொன்று அந்த இரத்தத்தைக் கொண்டு பறக்கும் ஆற்றலை பெற்றுக்கொள்கிறாள். இது படத்தின் ஆரம்பக் காட்சிகள். தீவிர மதப்பற்று கொண்ட குடும்பம், தாம் செய்த பாவத்தின் விளைவே இதுவெல்லாம் என எண்ணி தம் கரை போக்க திணறிக் கொண்டிருக்கின்றது. பாவமும் – தீமையை நோக்கிய ஈர்ப்பும் – மதப்பற்றும் மோதிக்கொள்கின்றன. இதில் சாத்தானியம் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது. படத்தில் இந்த தீய இழை அப்படியே படர்ந்து எம்மையும் ஈர்த்துக் கொள்கிறது. நாஸ்பெராடு படத்தில் பயம் விசாரணைக்குட்படுத்தப்படுவது போல இங்கு தீய (Evil) ஆன்மா அலசப்படுகின்றது.

Witchcraft குறித்த திரைப்படங்களைவிட the Witch தனித்து விளங்கக் காரணம் அமானுஷ்யத்தினை யதார்த்தத் தளத்திற்கு கொண்டுவந்தமை என்றே குறிப்பிடவேண்டும். தும்புத்தடியில் பறப்பது, சாத்தானை காட்சிப்படுத்துவது, சூனியம் எவ்வாறு ஊடுருவி ஆழப்பாய்கிறது என்பதை துல்லியமாக காட்டியது என்பன மூலமும் படம் சிறப்பாக இருக்கின்றது. நாட்டாரியல், பதினேழாம் நூற்றாண்டின் ஆவணங்கள், பழைய ஏற்பாடு போன்றவற்றை மூலமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கின்றது. கதாபாத்திரங்கள் அக்காலத்தைய மனிதர்களின் மொழியை பேசுவது யதார்த்தத்தன்மையை மேலும் மெருகூட்டுகின்றது.

ஏனைய திகில் திரைப்படங்களில் இருந்து இது மாறுபடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நல்ல திகில் என்பது பயத்தின் அழகியலை மொழியில், திரையில் சிறப்பாக கொண்டுவருவது என்பதே. இதை கச்சிதமாக செய்யத புனைவுகள், சினிமாக்கள் வெகுசிலவே. அதனால்தான் என்னவோ திகில் சினிமா எனும் வகையறா இன்றும் கூட மூன்றாம்தர சினிமாவாகவே பார்க்கப்பட்டு வருகின்றது. ஒரு திகில் சினிமா எப்படியிருக்க வேண்டும் என்று திரையுலகம் (பார்வையாளர்களையும் சேர்த்துதான்) சில விதிமுறைகளை கட்டமைத்து வைத்திருக்கின்றது. கொடுக்கும் பணத்திற்கு இதயம் படபடக்க பயங்கொள்ள வேண்டும், இதுதான் அடிப்படை. இந்த விதியை தமக்குத் தாமே விதித்துக் கொண்டு படத்தைப் பார்த்த பின் “பயமே இல்லை வேஸ்ட்…” என்று சொல்பவர்களை அதிகம் பார்க்கிறோம். பயமென்பது ஆளுக்கு ஆள் வேறுபடும் என்பது உளவியல் கூறும் உண்மை. இப்படியிருக்க திகில் திரைப்படங்களில் பயமில்லையெனில் எதற்கு திகில் திரைப்படங்கள்? இக்கேள்வி ஏன் திகில் திரைப்படங்களுக்கு மாத்திரம் கேட்கப்படுகின்றது என்பதுதான் இன்னும் புலப்படவில்லை. The Devil’s Backbone, Nosferatu, The Omen போன்ற படங்களில் இதயம் பதறும் நொடிப் பய்த்தினை எதிர்பார்க்க முடியாது, மாறாக ஆன்மாவினுள் சென்று ஆதி உணர்வான பயத்தை ஆராயும் இப்படங்கள். இந்த விசாரணையின் போது ஏற்படும் உரசல்தான் பயத்தின் அழகியல். The Witch.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s