ஹிருதயம்

Untitled-2

நள்ளிரவின் சப்தங்கள் எப்பொழுதும் விநோதமாகவேயிருக்கும் அஸீஸுக்கு. வேலைப்பளுவும், இணையமும் அவன் கனவுலகில் சஞ்சரிப்பதை விரும்பவில்லை. இரவுகளை தொலைத்து பல நாட்களாகிறது. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் அவனுக்கு இந்தப் பிரச்சினை. கனவுகள் அற்ற இரவுகளைப் பற்றி அவன் கவலைகொள்ளவில்லை. கனவு காணும் மனிதன் நிம்மதியான தூக்கத்தில் ஆழந்திருக்கிறான். அஸீஸ் தூக்கத்தை தேடிக்கொண்டிருந்தான். சமயத்தில் தூக்க மாத்திரைகளை விழுங்கவும் பார்த்திருக்கிறான். ஆனால், ஆங்கில மருத்துவத்தின் மீதிருக்கும் எதிர்ப்புணர்வால் அவற்றை தவிர்த்தே வந்தான்.

சரியாகத் தூங்கிய நாள் கூட அவனுக்கு மறந்துவிட்டிருந்தது. இரவில் நெடுநேரம் இணையத்தில் உலாத்துவதைத் தவிர அவனுக்கு வேறெந்த வழியும் இருக்கவில்லை நேரத்தை கடத்துவதற்கு.

லப் டப் டப் டப்.

இதயம். அதேதான். அஸீஸின் காதுகளில் உயிருள்ள இதயத்தை யாரோ ஒளித்து வைத்துவிட்டார்கள். விழிகள் அகல விரிந்திருந்தது. தூக்கமின்மையின் கடைசிப் பொழுதில் கேட்ட அந்த சப்தம், மரித்திருந்த ஆன்மாவை திடுக்கிட்டு எழச் செய்தது.

மணி 1.50.

இதுவொரு பிரமாண்ட இதயம் போல. இன்னும் பலமாக அவனுள் அதிர்வை ஏற்படுத்த கடைசி நொடி தூக்கமும் களைந்து போனது.

லப் டப் டப் டப்.

கால் முளைத்த இதயமொன்று பலகை நிலத் தரையில் அதிவேகமாக ஓட கீழ்மாடியில் உறங்கிக் கொண்டிருந்த கிழவன் விழிகள் எப்படி வெளிரிப்போயிருக்குமோ அப்படியிருந்தான் அஸீஸ். கட்டிலை விட்டு இறங்கவில்லை. காற்றும் குளிரும் சலனமற்றிருந்தது. வெட்கைக்கும் குளிரிற்கும் நடுவில் இன்னும் நிசப்தமாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான்.

இல்லை. இது பிரம்மையாக இருக்கும். கற்பனையிலும் சப்தங்கள் கேட்பதுண்டு. நிதானமாக இருந்த இரவில் மீண்டுமொருமுறை அந்த சப்தத்தை மீட்டிப் பார்த்தான். இல்லை இது என் கற்பனையே.

அவன் வசிக்கும் புறநகர்ச் சூழலுக்கு கோடை பெரிதாக தன் உக்கிரத்தை காட்டிக் கொள்ளவில்லை. நகரத்தை அண்மிய பகுதியென்றாலும் இரைச்சலும், புகைச்சலும் குறைவாகவே இருந்தது. கிராமம்தான். கிட்டத்தட்ட.

வேண்டாம் வீண் சிந்தனை. இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தான். வெட்கை ஆரம்பித்திருந்தது. ஆனாலும் பௌதீக நியதிகளை பொருட்படுத்தாமல் இன்னும் இறுக்கமாக போர்த்திக்கொண்டான்.

இரவு பேஸ்புக்கிலிருந்து லாக் அவுட் ஆகும் போது மணி 11.00 ஆக இருந்தது. ஹார்ட் டிஸ்கில் நிறைந்திருந்த படங்களை ஒரு அலசு அலசிவிட்டு, கடைசியில் ஒரு ஒன்றிற்கும் உதவாத படத்தைப் பார்த்து அழித்தான். தூங்க சென்ற நேரம் நினைவில் இல்லை.

ஒரு பெட்டி வரைந்து அதை கோணல் மாணலாக நான்காப் பிரித்து ஒன்றை எடுத்துக் கொண்டால் அவனது அறை வரும். ஏனைய பகுதிகளாக வீட்டின் இதர பாகங்கள் இருந்தது. ஒற்றை ஜன்னல் வழியாக பார்த்தால் கட்டில், கம்யூட்டர் மேசை, அதில் புத்தகங்கள், இன்னபிறக்கள், யுத்த களத்தில் சிதறிப் போயிருக்கும் பிணங்கள் போல் ஆடைகள் அங்குமிங்கும் இறந்து கிடக்கும். அறையின் பெரும்பாலான பகுதிகளை அவன் பொருட்டாகவே கொள்வதில்லை. அவனுக்கு தேவை கட்டில், கம்ப்யூட்டர் மற்றும் இரண்டையும் இணைக்கும் ஒரு ஹெட்செட்.

கோடை நாட்களில் சிறியதொரு போர்வையைத்தான் வைத்திருந்தான் போர்த்துவதற்கு. ஜன்னலும் திறந்தேயிருந்தது. காற்றில் அசைந்து உடம்பில் கூசிச் செல்லாமல் இருக்க திரைசை்சீலைகளை ஜன்னல் கம்பிகளில் இறுக்கமாக கட்டியிருந்தான்.

இவ்வளவு இருந்தும் ஒரு நைட் பல்ப் கூட அவன் அறையில் இல்லை. கும்மிருட்டுக்கும் ஆழ்ந்த உறக்கத்திற்கும் நெருங்கிய பிணைப்பு உண்டென்று அவன் நம்பிக் கொண்டிருந்தான்.

உடலில் மெல்லப் படர்ந்த குளிர்க் காற்று அவன் கால்கள் போர்த்தப்பட்டிருக்கவில்லையென்பதை உணர்த்தியது.

லப் டப் டப் டப்.

அசையவில்லை. இம்முறை மிக அதிகமாவே கேட்டது. காதுகளுக்குள் சென்று பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தான். இடப்பக்கம் படுத்திருந்தவன் சப்த்தத்தை கவனிக்காது போன்று பாசாங்கு செய்தான். முடியவில்லை. என்ன சப்த்தம். திரும்பிப் பார்க்கலாம். என்ன நடந்துவிடப் போகிறது. நாயாக இருக்கும். கள்ளனை நாய் விரட்டியிருக்கலாம். தேங்காய்க் கள்ளனாக இருக்கலாம். மரத்தில் வேறு நிறைய காய்கள் இருக்கின்றது. ஒருவேளை வௌவால்? வௌவால் எப்பொழுது நிலத்தில் ஓடியது. வௌவால் சிறகடிக்கும் சப்தம் இதே போலத்தானே கேட்கும். அறைக்குப் பக்கத்தில் இருக்கும் பலா மரத்தில் நிறைய வௌவால் வருவதுண்டு. அவனுக்கும் பலா என்றால் மிகவும் பிடிக்கும். அடுத்த வீடு கூட காலியாக இருக்கின்றது. பல வருடங்களாக. வீட்டு சொந்தக்காரர் கடைசியாக துப்பரவு செய்தே ஒரு வருடம் தாண்டியிருக்கும்.

லப் டப் டப் டப்.

மரண பயத்தில் இருக்கும் ஒருவனின் இதயத்துடிப்புதான் அது.

என்ன நடந்தாலும் கட்டிலை விட்டு அசைவதில்லை என்றே முடிவெடுத்திருந்தான். இதுவென்ன ஆங்கில ஹாரர் படமா நடுஇரவில் கேட்டுக்கும் சப்த்ததிற்கெல்லாம் போய் மூக்கை நுழைப்பதற்கு.

குளிர் காற்று அவன் உடலை ஆக்கிரமித்திருந்தது. அசைவற்று இருந்தான். தான் ஏற்படுத்தும் சிறிய அசைவும், உன்னிப்பான கவனிப்பை திசை திருப்பிவிடும். டப் டப் டப் டப் டப் டப். காதுகளுக்குள் என்ன நடக்கிறது? இல்லை என் பின்னால்தான் இந்த சப்தம் வருகிறதா? மேலதிகமாக எதையும் யோசிக்க எத்தனிக்கவில்லை அவன். மேலதிக கவனமென்பது இன்னும் பயத்தைத் தூண்டிவிடும். பயம் பிரச்சினையல்ல என்றாலும் அதீத சிந்தனை எழும்பிச் சென்று என்னவென்று பார்க்க வைத்துவிடும். நிஜவாழ்வில் விபரீத நிகழ்வுகள் ஏதும் நள்ளிரவில் சம்பவிப்பதில்லையென்பதால் பிரச்சினையில்லை. என்றாலும் மனிதனல்லவா. காதுகளும் இதர உறுப்புகளும் சங்கிலியால் கட்டிப் போட்டது போல் இருக்க, கண்கள் மாத்திரம் பின்னாடி என்ன என்று பார்க்கச் சொல்லிக் கொண்டேயிருந்தது.

இடப்புறக் காதுக்கு எதுவும் கேட்கவில்லை. அது தலையணை மீது ஆழப் பதிந்திருந்தது.

கை மொபைலைத் தேடியது. அவசரப்பட்டு பட்டனை அழுத்தி, வெளிச்சம் கும்மிருட்டை இந்த நேரத்தில் குழப்புவதை விரும்பவில்லை. போர்வைக்குள் மொபைலை ஈர்த்து, அழுத்த, மணி 2.30.

தூக்கம் அவன் கண்களை விழுங்கிக் கொண்டிருந்தது. இரவின் மௌனமும், சலனமற்ற மரங்களும் இல்லாத சப்தங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது.

லப் டப் டப் டப்.

இப்பொழுது சப்தம் முழுவதுமாக அடங்கியிருந்தது. இருந்தும் அந்த ஒலி அவன் ஆன்மாவில் ஆழமாக பதிவாகிவிட்டது. பால் கிணற்றினுள் ஒளிந்திருக்கும் பூதமொன்றின் சப்தமாக அது உருவெடுத்திருந்தது.

அஸீஸின் அறைக்கு எதிர்புறத்தில் இருக்கும் காலிவீடு இப்பொழுது இரவு ஜீவராசிகளின் வசிப்படமாக மாற்றப்பட்டிருந்தது. பெருச்சாளிகளும், எலிகளும், வௌவால்களும், ஒரு புனுகு பூனையும் அதனுள் வாழ்ந்து கொண்டிருந்தது. இரவின் ஜீவராசிகளை யாரும் கவனிப்பதில்லை என்பதால் அவற்றுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடவில்லை. எப்பொழுதாவது இரவில் அவற்றின் சத்தங்கள் கேட்பதுண்டு. புனுகு பூனை என்பது உண்மையில் இருக்கின்றதா என்ற சந்தேகம் வேறு அவனுக்கிருந்தது. அதன் ஒலிதான் விநோதமானதாக இருந்தது. புதிதாய் பிறந்த மகவு மரணித்து அடக்கம் செய்தபின் அழும் ஓசையை அது எழுப்பியது. அது எதிரொலியாக பரிணமித்து, வௌவால்களின் சிறகடிப்பில் பட்டுத் தெறித்து செவிகளை அடையாமல் நேரடியாக இதயத்தினுள்ளே ஊடுறுவும். லப் டப் டப் டப், அம்மாதிரியான சத்தமல்ல. அது தனித்து கேட்டது. எந்தவித கலப்பும் இல்லாத தனித்த சத்தம்.

காலி வீட்டிற்கும் அறைக்கும் நடுவே சென்றது ஒற்றையடிப்பாதை. ஒரு முடிவில் பலாவும், மறு முடிவில் மாவும் இருந்தது. இரண்டிலும் காய்கள் இல்லை. அவன் பிறப்பதற்கு முன்பிருந்தே இப்படித்தான். ஒருமுறை அவனது அப்பா, அவையிரண்டும் சாபமிடப்பட்ட மரங்கள் என்றார். உண்மைதான் போலும், அவற்றிற்கு பக்கத்தில் இருக்கும் மரங்களில் காய்கள் காய்த்து தொங்கும் போது இவற்றில் மாத்திரம் ஏன் காய்ப்பதில்லை? தொழில், அறிவு வளர்ச்சி அவற்றை காலப் போக்கில் மறக்கடிக்கச் செய்துவிட்டது.

ஒற்றையடிப்பாதை, வீடுகள் கட்டப்படுவதற்கு முன்பிருந்தே இருக்கிறது. அப்போது இந்த நிலங்கள் கோப்பி மரங்கள் நிறைந்த தோட்டமாய் இருந்தது. அந்தப் பாதை நேராக ஒரு கிணற்றில் போய் முடியும். இப்போது அப்படியில்லை, கிணறும் காடு மண்டி காணாமல் போய்விட்டது.

லப் டப் டப் டப். இம்முறை சத்தம் அவன் இதயத்தினுள்ளே கேட்டது.

இதயம் வெளியே எங்காவது இருக்குமோ? ஒருவேளை என்னுடைய இதயம்தான் வெளியே உலாத்துகிறதோ? எல்லாம் பிரம்மையாக இருக்கும். அறையின் இருளும் வெளியின் இருளும் ஒன்றுடன் ஐக்கியமாகிக் கொண்டிருக்க சுவரெனும் பிறிகோடு மெல்ல அகன்று கொண்டிருந்தது. சுவற்றிலா இல்லை இருளெனும் சடத்திலா இந்த இரத்தக் கோடுகள் வடிகின்றது? மெல்ல எழுந்து இருளை பிராண்டினான். சுவரில்லை இருள் மாத்திரம் கிழிந்துகொண்டு வந்தது.

எழுந்தான். இம்முறை தெம்பாக எழுந்துவிட்டான். அறையில் கதவுகளைக் காணவில்லை. ஜன்னல் ஒன்று மாத்திரம் தென்பட்டது நெருங்கிச் சென்றான். கைக்கு எட்டவில்லை. ஜன்னல் சிவப்பால் வலிந்தோடிக் கொண்டிருந்தது. ஜன்னலுக்கு அருகேயிருந்த கட்டிலை நோக்கினான். என்ன சப்தம் என்று எப்படியும் பார்த்துவிட வேண்டும். பயத்தில் அவனது இதயம், கால் முளைத்த இதயமொன்று பலகை நிலத் தரையில் அதிவேகமாக ஓடுவது போன்று ஒலித்துக் கொண்டேயிருந்தது. இப்பொழு அவன் இதயம் துடிக்கும் சப்தத்தை யாராவது கேட்டால் பயத்தில் வெளிரிப் போவார்கள் என்பது திண்ணம். ஜன்னலை நெருங்கினான்.

கட்டிலில் போர்த்திப் படுத்திருப்பவன் யார்? யாரோ பயத்தில் நடுங்கிச் செத்துக்கொண்டிருக்கிறான். கிட்ட நெருங்கினான். கிட்ட நெருங்க நெருங்க இவன் இதயவொலி தூங்கிக் கொண்டிருந்தவனை இன்னும் பயத்தில் ஆழ்த்தியது. இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தான் அவன். என் கட்டிலில் யாராக இருக்கும்?

Advertisements

One comment

  1. இந்த கதையில வர்ர எல்லாமே ஒங்கலொட வீட்டை அண்டிய இடம் என்பது வாசிக்கும் போது தான் புரிந்து கொண்டேன்
    பால் வீடு
    மா மரம்
    பலா மரம்
    நான் கண்ட உங்கள் வீட்டு இடம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s