பொடி அப்புஹாமி

art-demon-beggar-1029551

பொடி அப்புஹாமிடையும், மாரியம்மாவுடையும் கதைகள் அந்த ஊர் முழுக்க பரவிப் போயிருந்தது. அந்த ஊர் என்று பொத்தம் பொதுவாக பொடி போட்டு பேசுவதால் அந்த ஊருக்கு களங்கம் ஒன்றும் வந்துவிடப் போவதில்லைதான். கதைகளில் ஊர்ப் பெயர் தவிர்ப்பது நலம்பயக்கும் என்பது முன்னோர் கருத்து. அப்படித்தான் ஒருநாள் பொடி அப்புஹாமி, மாரியம்மா காதல் கதைகள் ஊரின் ஒரேயொரு ப்ளேன்டி கடையில் அடிபட்டது. ஐந்து ரூபாய் பெட்டிஸை சட்டபடி போடுவார்கள். மஹிந்த அரசின் வரிகள் அந்த ஊரை எட்டிப்பார்க்கவில்லை போலும். இறந்தகாலம் நமக்கெதற்கு.

பொடி அப்புஹாமி மண்ணின் மைந்தன். ஊரின் செல்லப்பிள்ளை. அனைவரும் அவனிடம் வேலைகளை குறைந்த விலையில் செய்து கொள்வதற்கு அன்பாய்ப் பழகுவார்கள். ஒரு வேளை சாப்பாடும், ப்ளேன்டியும்… “ஹா… இந்தா வெச்சுக்கோ… கடய்ல பெட்டிஸ் வாங்கி தின்னு” என்ற பெருமானம் கொண்ட கூலியும் (?) கொடுத்தால் ஓன வெடகட ஒட்டு (வேண்டிய வேலை செய்வான்) இந்த சில்லறை இழிச்சவாயன் ஒன்றும் சின்னப் பையன் கிடையாது. ஏழு கழுதை வயசு. படிப்பறிவு இல்லாவிட்டாலும் வாழ்க்கைச் சக்கரத்தை பெடல் பண்ணிவிடலாம். ஆனால், இந்த பொடி அப்புஹாமிக்கு ஒரு எழவும் தெரியாது. புத்தக அறிவும் மண், உலக அறிவும் மண். முன் பல் செட் அவ்வளவும் விழுந்து இழிக்க மட்டும் தெரியும். இழிச்சவாயன் பற்கள் எல்லாம் அப்படித்தான் போலிருக்கின்றது. (நல்லவேளை என் பற்கள் அப்படியே இருக்கின்றன)

மாரியம்மா வெற்றிலை பாக்கு வாய் எப்படியிருக்குமோ அப்படி இரத்தச் சிவப்பில் வாய் கொண்டு அலைபவள். பகல்வேளையில் யார் கண்ணுக்கும் தென்படாமல் இருப்பவளை, இரவானால் கூட அவ்வளவு எளிதில் பார்த்துவிட முடியாது. ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருக்கும் ஒரு வீட்டில் குடிகொண்டிருக்கும் இரவு தேவதையவள். அழகி என்று பலர் சொன்னாலும் கண்டவர் எவருமில்லை. மாரியம்மா ஒரு மர்மப் பெண்ணாகவே அவ்வூரில் அலைந்து திரிந்து வந்தாள். அவளை ஒரு முறையேனும் காணாமல் கதைப்பவர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால், கண்டவரில் ஒருவர் கூட அவள் பற்றி கதைப்பதில்லை. அப்படியே மூச்சடைத்துவிடும் அவர்களுக்கு. ஊரின் மிக அழகான பெண் – என்றால் ஆபத்தானவள் என்றும் அர்த்தம் வருமில்லையா?

மாரியம்மாவை பார்க்க வேண்டும் என்ற தீரா அவாவில் திரிந்தான் பொடி அப்புஹாமி. அப்படியொருநாள் ஒரு வீட்டில் வேலை செய்து கொடுத்துவிட்டு அளவுக்கு அதிகமாக கூலி வாங்கிக் கொண்டான். அவன் ஒருபோதும் இல்லாத அளவுக்கு அதிகமாக “பத்து ரூபா தாங்க மொதலாளி…” என்று கேட்ட போது அவர் திக்குமுக்காடித்தான் போனார். சரி என்ன குறைந்தா போய்விடப் போகிறது. இந்த கதை நடக்கும் போது பத்து ரூபாய் என்பது ஒருநாள் ஃபெமிலி பட்ஜட் எனக்கொள்க. “என்னடா மாரியம்மாவுக்கு பெட்டிஸ் வாங்கப் போறியா… பாத்து கடிச்சிடப் போறா?” மொதலாளி சரியாகத்தான் ஊகித்து இருக்கிறார்.

நேராக பத்து ரூபாயை எடுத்துக் கொண்டு சுடச் சுட பெடிஸ் வாங்கினான். ஒரு பேக் நிறைய… ஊரின் ஒதுக்குப்புறத்தை அடைந்து காத்துக்கிடந்தான். எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது. பசி. மாரியம்மாவா? பசியா? என்ற சிந்தனைச்சிக்கல் அவனை ஆற்கொண்டது. மாரியம்மாவை மிகைத்து பசி அவனைக் கிள்ளியது. சரி ஒரு பெட்டிஸ்தானே.

கடைசி பெடிஸ் மட்டும் ஏங்கிக் கிடந்தது. இதை மட்டும் என்ன செய்ய வீசவா? அதையும் உண்டான். அந்த தருணத்தில், நிலவொளியில் பட்டுத் தெறித்த தேவதைச் சிரிப்பில் மாரியம்மா அவன் பின்னால் நின்றிருந்தால்… இவன் புன்சிரிப்புதான் ஈஈஈஈஈஈ ஆயிற்றே.

“என்னடா… எனக்கு ஒன்டும் வெக்கலியா? எல்லாத்தையும் தின்டு போட்டியா…”

“இல்ல பசி…”

“என்ன பெரிய பசி… இப்ப என் பசிக்கு என்ன செய்றது? உன்னத்தான் திங்கனும்.”

“ஈஈஈஈஈஈஈஈஈஈ”

அதிகாலை இரத்தம் கக்கி இறந்து கிடந்த பொடி அப்புஹாமியை பார்க்க ஊர் கூடியது.

நாளைக்கு சின்ன குப்புசாமியும் மாரியம்மாவும் கதை சொல்றேன்.

நள்ளிரவுகள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s