Song of the Sea

image

சினிமா பற்றிய பதிவொன்றை எழுதும் போது அது பற்றிய தகவல்களை சரிபார்த்துக்கொள்ள ஒன்லைனில் அலசிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தகவல் பிழை வந்து விடும். அந்தளவுக்கு எனது ஞாபகசக்தி அதிகம். எதற்கிந்த இன்டர்நெட் புலம்பல்? வீட்டு கம்ப்யூட்டரில் இன்டர்நெட் டவ்ன்… நீண்ட நாட்களாக பேயெழுத்தில் எதுவும் வரவில்லை. சில பல காரணங்கள் இருந்தாலும், சோம்பல்தான் பிரதான காரணியாக இருக்கின்றது. எப்பொழுதும் போல. விடயத்திற்கு வருவோமா? இல்லை இன்னும் கொஞ்சம் புராணம் பாடுவோமா? (கடைசியில் சேர்க்கின்றேன் இந்த அடைப்புக்குள் வசனத்தை, இந்த இன்டர்நெட் புலம்பல் பந்தி கட்டுரைக்கு எந்தவிதத்திலும் அவசியப்படவில்லை… இதனை நீக்கினால் கட்டுரையின் ஃப்லோ உடையும்… ஆங்)

ஈத் பெருநாள் கொண்டாடிவிட்டு, காலையுணவின் பின்னர் சற்று இளைப்பாற… ட்ரிங் ட்ரிங், விருந்தாளிகள் வருகை என்னைத் தூங்கவிடவில்லை. பின்னே பெருநாள் என்றால் நன்றாக தின்றுவிட்டு, குப்புறபடுத்து நாளை கடத்துவதுதானே? முன்பெல்லாம் பெருநாள் என்றால் ஒரே கொண்டாட்டம்தான். சிறுவர்களாக இருக்கும் போது பெருநாளின் வருகைக்காக நாட்களை எண்ணிக் கொண்டே, “உம்மா எப்ப பெருநாள் வரும்… இன்னும் எத்துன நாள் ஈக்கி?” என்று இருப்பு கொள்ளாமல் துடித்த கணங்களை நினைக்கும் போது நாஸ்டல்ஜியா பீறிட்டுப் பாய்கிறது. இஸ்லாமிய கீதங்கள் ஒலிக்கும் தெருக்கள் இன்று மையவாடி போலிருக்கின்றது. முச்சந்தியில் உள்ளுர் இசைக்குழுவின் பாடல்களை கண்டுகளித்த நாட்கள் இன்றில்லை. என் பரம்பரைக்கு முந்திய பரம்பரை இதை விட பல கலாச்சார, கலை நிகழ்வுகளை பெருநாள் தினங்களில் கண்டு மகிழ்ந்திருக்கும்… எனக்கடுத்து வரும் பரம்பரை வெறும் கூகுள் இமேஜ் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டிருக்கக் கூடும். அறிகுறிகள் இப்பொழுது நன்றாகவே தென்பட ஆரம்பித்துவிட்டது. சோனக முஸ்லிம்களின் கலை, கலாச்சாரங்களை அழித்து தின்றுவிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கின்ற அரபுலகில் இருந்து இறக்குமதியான இயக்க சிந்தனைகள். விடுவோம், “கடல் சுமந்து வந்த பாடலை”ப் பாடும் போது எதற்கு பிரச்சினைக்குரிய பகுதிகள்.

அப்படித்தான் வீட்டிற்கு வந்த மனிதர், புத்தள வாசி. எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே என்பார்கள். (அதற்கு மொழியியல் அறிஞர்கள் வேறு விதமான சொற் – பொருட் பிரித்து விளக்கம் சொன்னாலும்… நம்மொழி நம்மொழியே) வந்தவர் எனது மச்சான். மிகவும் சுவாரஷ்யமான மனிதர். நாம் புத்தகங்களில் கதைகளைப் படித்திருப்போம், உலக இலக்கியம் துவங்கி அனைத்தையும் அறிந்திருப்போம். ஆயிரம் கதைசொல்லிகள் இருப்பார்கள்… எழுத்தாளர்களில். ஆனால், நேரடியாக கதைசொல்லிகளை காண்பது வெகு அரிது. என்னைப் பொறுத்தவரை, ஒரு தேர்ந்த கதைசொல்லி… தான் ஒரு கதைசொல்லி என்பதை அறியாதவனாகவே இருக்கும். நான் கண்ட மனிதர்களில், எந்த இலக்கியப் பிரதிக்கும் சளைக்காமல் வாழ்வனுபவங்களை சுவாரஷ்யமாக, சர்வசாதாரணமாக, பிரக்ஞையின்றி சொல்லிச் செல்லும் கதைசொல்லிகளைக் கண்டிருக்கின்றேன். அப்படியான ஒரு மனிதர்தான் அவரும். மிக சுவாரஷ்யமான மனிதர். கடற்தொழிலில் ஈடுபடுபவர். கடல் சுமந்து வரும் கதைகளை, ட்ராக்டரில் சுமந்து வந்து கொட்டுவார். மீன்கள், மனிதர்கள், ட்ராபிக் பொலிஸ்.. என்று எந்த விடயமும் அவரிடமிருந்து கதையாகவே பிறக்கும். வாழ்வில் அனைத்தையும் சுவாரஷ்யமாகவே அணுகும் ஒருவரில் கள்ளம்கபடத்தை காண முடியாது. இவர் போன்ற மனிதர்களின் நிம்மதியான தூக்கத்தை திருட முடிந்தால், அதுவே மரணம் வரை போதுமான சொத்தாக இருக்கும்.

வீட்டுக்கு வந்த மனிதர் என்ன சொன்னார் என்று சொல்லுங்க மக்கா…

எழுத்தின் ஓட்டத்தை அணைகட்டி, கடிவாளமிட்டு கட்டுக்குள் கொண்டுவருவது அவ்வளவு எளிதில்லை மக்கா…

வலம்புரி சங்கின் கதை, கடல் வஸ்துக்கள் பெறுமதியானவை. இறைவன் அருட்கொடைகளில் மகா அற்புதங்களை எல்லாம் கடலில்தான் மறைத்து வைத்துள்ளான் போலும். கடல் பற்றிய கதைகளைப் படிக்கும் போது, தேடலும், ஆர்வமும், ஏக்கமும் பேரலை போல் எழுந்து, எழுந்து செல்லும். கடல் அருகில் இருக்கும் போது மிகத் தெளிவான ஒன்றாக, வெளிப்படையான ஒன்றாக நம்மை வரவேற்கின்றது… ஆழம் செல்லச் செல்ல அது மறைத்து வைத்திருக்கும் மர்மங்கள் ஏராளம். இருளின் நிஜ அர்த்தத்தை கடலின் ஆழம் சென்றால் அறிய முடியுமாய் இருக்கும். இன்னும் கண்டுபிடிக்க முடியாத அற்புத ஜீவராசிகள் எத்துனை இருக்கும். பண்டைய உலக வரைபடங்களில் ஒவ்வொரு கேந்திரங்களிலும் வரையப்பட்டிருக்கும் ராட்சச ஜீவிகள் உண்மையாகவே இருக்கலாம். இருக்கின்றது. கடலில் மிக மிக அடியாழத்தில், ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் கடலில் அமிழ்ந்து போன ஒரு எரிமலை குகையுள்… நூற்றாண்டுகளாக ஒரு ராட்சச ட்ராகன் உறங்கிக் கொண்டிருக்கின்றது. என்பது எவ்வளவு அழகான, அற்புதமான விடயம். அதனால் அது என் உலகில் யதார்த்தமான ஒன்றாக இருக்கின்றது. நான் அதனை நம்புகின்றேன்.

கடல் உயிரிகள் பௌதீக காரணிகளுக்காக தங்கள் வாழ்விடங்களை விட்டு கரை நோக்கி வருவது வழக்கமான ஒன்று. பெரும் பெரும் திமிங்கிலங்கள் இவ்வாறு வருவதை அடிக்கடி காணலாம். அப்படித்தான் வலம்புரி சங்கு சோடிகள் (ஆண் சங்கு – பெண் சங்கு) இறைவனின் அன்பும் கருணையும் வாய்க்கப்பெற்ற வீட்டை நோக்கி வரும். வந்து வீட்டு வாசலில் இருந்து ஒரு வித ஒலியெழுப்பி கத்தும். அவற்றை காணும் வீட்டுக்காரர்கள் அவற்றை வெள்ளைத் துணியால் மூடி வைத்துக்கொள்வார்கள். வலம்புரி சங்கு முத்தை விட பெறுமதியான ஒன்று. இலங்கையில் அவற்றை பிடிப்பது தடை செய்யப்பட்டிருக்கின்றது. இலட்சங்கள் பெறுமதியான இந்த சங்குகள் தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளை நோக்கி வருவது, பௌதீக காரணியில் இருக்கும் சுவாரஷ்யத்தை விட அம்மக்களின் ஐதீகத்தில் இருக்கும் சுவாரஷ்யம் அதிகம்.

வலம்புரி சங்கு கடலின் ஓலத்தை தன்னுள் ஒளித்துக் கொண்டிருக்கின்றது. அதை ரகசியமாக காதில் வைத்து கேட்டால், கடலின் மர்மங்கள் உங்களுக்கு துலங்களாம். அடுத்த கடற் பயணியாகுவதற்கு வாய்ப்புண்டு. பைரட்ஸ் ஆஃப் தீ இந்தியன். மண்டையோட்டு கருப்புக் கொடியை ஏற்றினால் நீங்களும் ஜாக் ஸ்பரோதான்.

கடல் சார்ந்த நாட்டாரியல் மரபுகளில் இருக்கும் கதைகள் மிகவும் சுவாரஷ்யமானவை. ஒவ்வொரு பகுதிக்கும் விசேடமான கதைகள் உண்டு. என்னைப் போன்ற மலைநாட்டான்களுக்கு கிடைக்காத பாக்கியம் பெற்றவர்கள் இந்த கடல் சார்ந்த மக்கள். பாக்கியமோ இல்லையோ… நாட்டார் மரபுகளில் நாட்டமின்றி, பொருளாதர அடிமைகளுக்கு எந்த சுவாரஷ்மும் இல்லை. அவர்கள் பாக்கியசாலிகளும் இல்லை. அதனால் நான் க்ரேட்.

Song of the Sea, Tomm Moore (The Secret of Kellas) இயக்கிய அற்புதமான ஐரிஷ் அனிமேஷன் திரைப்படம். திரைப்படம் என்பதை விட அற்புதமான தாலாட்டு என்பதே மிகவும் சரி. இத்திரைப்படம் பாரம்பரிய 2டீ அனிமேஷனில் எடுக்கப்பட்டிருக்கின்றது. ஐரிஷ் கடல் சார்ந்த நாட்டாரியல் கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கின்றது இத்திரைப்படம். செல்கிகள் எனும் தொன்ம – நாட்டார் மரபு உயிரி ஒன்றினைப் பற்றிய கதைதான் இது. செல்கி, கடலில் சீல் ஆகவும், கரையில் மனித உருவிலும் வாழும் ஒன்று. அப்படியான செல்கி ஒன்றிற்கும், ஒரு லைட் ஹவுஸ் காப்பாளன் ஒருவனுக்கும் இடையில் மலரும் அன்பில், பிணைப்பில், திருமணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கிடையிலான் பாசப் போராட்டம், மிக அழகாக நாட்டாரியல் கதைகளுடன் கோர்க்கப்பட்டு திரையில் அற்புத ஓவியங்களாக ஆர்ப்பாட்டமின்றி ஜாலமிடுகின்றது. சத்தியமாக இசையிலும், ஓவியங்களிலும் மனது ஒன்றித்துப் போவதை தவிர்க்க முடியவில்லை. மிகவும் அற்புதமான திரைப்படமொன்று.

வலம்புரி சங்கு ஒலித்து வைத்திருக்கும் கடலின் ஒலிகள் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், எத்தனை தூரம் கடலில் இருந்து பிரிந்து சென்றாலும் கரைந்து போவதில்லை. அதேபோல்தான், அன்பில் பிரவகிக்கும் தாயின் தலாட்டு என்றும் இதயத்தில் இருந்து அழிந்து போவதில்லை. நாம்தான் அதனை கேட்க மறுக்கின்றோம். கதையின் மையமாக இருப்பது தாலாட்டும், கடலின் இசையும்… இரண்டையும் சுமந்து கொண்டுச் செல்லும் வலம்புரி சங்கு. இத்திரைப்படத்தைப் பார்த்ததில் இருந்து இதைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டேயிருந்தேன். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் அது தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. இன்று காலை அந்த மனிதர் வலம்புரி சங்கின் கதையை சொல்லும் வரை. அல்லாஹ் அவருக்கு அருள்பாலிக்கட்டும். இதயங்கள் அனைத்தும் பார்க்க வேண்டிய திரைப்படம், இந்த கடல் சுமந்து வரும் பாடல்.

Advertisements

One comment

  1. எந்த ஒரு எழுத்தோ அல்லது படமோ அது படித்து முடித்துவிட்ட பிறகு பார்த்துவிட்ட பிறகு அது நம்மை அதைப் பற்றி தெரிந்துகொள்ள அதைப்பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள தூண்ட வேண்டும். அப்படித் தூண்டுவதுதான் படைப்பு. இந்த படமும் அதை செய்கிறது, உங்களது பதிவும் அதை செய்கிறது. அருமை அது. தொடர்ந்து எழுதுங்கள். ( கடவுள் நம்பிக்கையற்றவன் நான். ஆகையால் பதிவின் கருத்தில் அதைப்பற்றிய தகவலில் உடன்பட முடியாது. அது தனி விவாதம்)

    மற்றும் அப்படிப்பட்ட கதைசொல்லிகள் என்றே தெரியாத தேர்ந்த கதை சொல்லிகளை நானும் வாழ்க்கையில் கடந்து வந்திருக்கிறேன். அப்படி பல கதைசொல்லிகள் நம்மில் பலர் உண்டு.

    அவரைப்பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s