மரணத் திருவிழா: the Fiesta of Colors…!

THE-BOOK-OF-LIFE-TEASER-QUADமரணத்தின் பின்னரான வாழ்வு, மறுமை, மறுஜென்மம், இறந்த பின் மனிதன் என்னவாகிறான், ஆவியுலகு, சுவர்க்கம் – நரகம், இறுதிநாள், தீர்ப்புநாள், தீய ஆன்மா, கெட்ட ஆன்மா, உலகம் அழியும் வரையான மரித்த ஆன்மாக்களின் உலகு… இப்படி மரணத்தின் பின் மனிதன்? என்ற மனித ஆழ்மனக் கேள்விக்கு செமித்திய மதங்கள் (Semitic Religions), பழங்குடி வழிபாடு (Paganism), இந்திய மதங்கள், விஞ்ஞானம், ஆவியுலக கோட்பாடு (Animism) என்று பலதும் பல விதங்களில் கோட்பாடுகளை, தத்துவங்களை, விளக்கங்களை வைத்துள்ளன. பல்வேறு கலாச்சார, நாகரீக, பழங்குடி மரபுகளில் மரணம் இன்னொரு உலகிற்காக வாயிலாகவே கருதப்பட்டு வந்திருக்கின்றது. எகிப்தியர்கள் தங்கள் பரோக்கள் மறுவுலகில் ராஜ மரியாதையுடன் வரவேற்கப்பட வேண்டும் என்பதற்காக தங்கங்களுடன் புதைத்தார்கள். மம்மிகளாக்கப்பட்டனர். மரித்தவர்களை புதைப்பது, எரிப்பது, மம்மியாக்கப்படுவது, கடலில் கல்லைக் கட்டி போடுவது போன்ற பாரம்பரியங்கள் அவற்றிற்கு பின்னால் தத்துவங்களை கொண்டிருக்கின்றன. இவ்வாராய்ச்சிக்கெல்லாம் போக வேண்டியதில்லை.

மரணத்தின் பின் பல்வேறு சமூகங்களின் சடங்குகளை உற்றுநோக்கும் போது கொண்டாட்டமாகவும், துக்கரமானதாகவும் இருப்பது விளங்கும். தமிழ்நாட்டில் சாவு குத்து ஒரு கொண்டாட்ட கலாச்சாரம். அதேவேளை ஒப்பாரி சோக அம்சம் பொருந்திய ஒன்று. ஆனால் மரணித்தவர் குடும்பத்திற்கு அந்தநாள் சோகநாள் என்பதில் கலாச்சார, நாகரீக வேறுபாடுகள் கிடையாது. நல்ல காரியங்களின் பின்னால் தொன்மங்கள், மரபுகள் இருப்பது போலவே (திருமணம், விளைச்சல், அறுவடை) துர்நிகழ்வுகளுக்கு பின்னாலும் நாட்டார் வழக்குகள் இருக்கின்றன.

சரி எதுக்கு இந்த பில்டப்பு?

tumblr_ndmmc9nd8n1qi3p46o2_500
La Muerte and Xibalba

லத்தின் அமெரிக்காவில் – மெஹிக்கோவில் “மரணத் திருவிழா – Day of the Dead” என்றொரு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. எழும்புக்கூடுகள் போன்று உடையணிந்து கொண்டு, முகத்தை மண்டையோடு போல் ஆக்கிக் கொண்டு (முகமூடி அல்லது பூச்சு) நகர்வலம் வருவார்கள். Easter Eggs போல மண்டையோடுகளை அலங்கரித்திருப்பார்கள். இந்நிகழ்வில் பழங்கதைகள் கூறும் வழக்கமும் உண்டு. நாட்டார் வழக்குகளில் Puppet Show (இதை எப்படி தமிழ்ப்படுத்துவது?), தெருக்கூத்து போன்றவை விசேசமானவை. பழைய ராஜா – ராணி கதைகளை puppet showவாக மாற்றி கண்டுகளிப்பார்கள்.

லத்தின் அமெரிக்கா ஒரு கலர்ஃபுல் தேசம். கார்னிவெல். அந்த தேசத்தின் மரண திருவிழாவை வண்ணமயமாக காட்டியிருக்கின்றது The Book of Life திரைப்படம். நாம் வாழும் உலகம், நினைவிலிருப்பவர்களின் உலகம் (Land of the Remembered), நினைவில் நின்றும் அகன்றவர்களின் உலகம் (Land of the Forgotten), இவ்வுலகங்களை balance செய்யும் Candle Maker உலகம் என்று நான்று உலகங்களை அற்புதமான தீட்டியிருக்கின்றார் Jorge Gutierrez. படத்தை தயாரித்திருப்பது கியர்மோ டெல் டோரோ. அவரது கைவண்ணம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. Tim Burton இன் Nightmare Before Christmas, உண்மையில் அவர் எடுக்கவில்லை. Henry Selick தான் எடுத்தது. ஆனால், டிம் பர்டனின் படம் என்றுதான் அத்திரைப்படம் அறியப்படுகிறது. இத்திரைப்படம் அவ்வாறு இல்லாவிட்டாலும் கியர்மோவின் முத்திரையை கொண்டிருக்கும் ஒரு படைப்பாகவே இருக்கின்றது.

ஒரு மியூசியத்தை பார்வையிட வரும் சிறுவர்களை அழைத்துச் செல்கிறாள், அங்குள்ள மியூசிய வழிகாட்டி. மெஹிகோவின் தொன்மங்கள், நாட்டார் கதைகள் கொண்ட அப்பகுதியில் ஒரு புத்தகம் இருக்கின்றது. அது உலகிலுள்ள அனைத்துக் கதைகளையும் கொண்ட புத்தகம். அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தில், மனாலோ மற்றும் ஹாகீன் என்ற இரண்டு சிறுவர்கள் மரியாவிற்காக விளையாட்டுச் சண்டை பிடித்துக் கொள்கிறார்கள். இந்த இயல்பான முக்கோண காதல் கதையின் போக்கை மாற்றுவதற்கு, Land of the Remembered ஐ ஆளும் தேவதை La Muerte, மற்றும் Land of the forgotten ஐ ஆளும் தேவன் Xibalba பந்தயம் கட்டுகிறார்கள். இக்கதையின் போக்கை மாற்றி தனது வெற்றியை நிலைநாட்டிக் கொள்ள சிபல்பா குறுக்குவழிகளை ஏற்படுத்துகின்றான். மரியாவை அவளது தந்தை படிப்பதற்கு வெளியே அனுப்புகிறார். மனாலோ காளைச் சண்டை வீரப்பரம்பரையில் வந்த ஒரு இசைப் பிரியன். காளைச் சண்டையை விட இசையை அதிகம் நேசிப்பவன். ஹாகீன் (உச்சரிப்பு சரியோ தெரியாது) ஊரைக் காப்பாறிய வீரத் தந்தையின் மகன். ஊரே அவருக்கு சிலை வைத்துக் கொண்டாடுகிறது. இந்த இரண்டு துருவங்களும் மரியாவின் காதலுக்காக அலைபாய்கிறது.

ம்யூரெடே, மனோலோவிற்கு எப்பொழுதும் மாறாத தீர்க்கமான இதய சுத்தியை வரமாக கொடுக்கிறாள். ஹாகீனுக்கு சிபால்பா எந்த வித ஆபத்திலிருந்தும் அழிவு ஏற்படாத சகாவரத்தை அணிவிக்கின்றான். (அதாவது ஒரு மெடல்) ஒரு கட்டத்தில் மனாலோ காதல் ஜெயிக்கின்றது. இதனால் பந்தயத்தில் தோற்றுவிடுவோம், தோற்றுவிட்டால் Land of the Remembered ஆள முடியாமற் போய்விடும் என்று சதியின் மூலம் மனோலோவை மரியாவிற்காக Land of the Remembered இற்கு அனுப்பிவிடுகிறான். அதான் சாவடிக்கிறான். இந்த சதியில் இருந்து எவ்வாறு சுபம் போடப்படுகிறது என்பதுதான் மீதிப் படம்.

ஒரு டார்க் தீமுடைய திரைப்படத்தை கார்னிவெல் அனுபவமாக மாற்றியிருப்பதுதான் இந்த அனிமேஷன் டீமின் வெற்றி. நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட வண்ணமயமான திரைப்படம். எப்படிச் சொல்வது அற்புதமான வண்ண ஜாலங்களை நிகழ்த்திச் செல்கிறது. Book of Life is a fiesta of colors…!

நான்கு தளங்களை கொண்ட கதையமைப்பை நான்-லீனியர் இன்றி நேரடியாக சொல்லியிருப்பது புதிர்தன்மை அற்று இருக்கின்றது. அனிமேஷன் என்பதாலோ இந்த நேரடி புனைவு முயற்சி? இருக்கலாம். ஆனால், கதை Pan’s Labyrinth போல புதிர்ச் சுழல்களை வைத்து உருவாக்கப்பட்டிருக்கக் வேண்டியது. கதைக்குள் கதை, கிளைப் பரப்பிச் செல்லும் கதை, கதைக்குள்ளிருந்து விதைகள் முளைப்பது போல் முளைக்கும் புதுக்கதைகள் போன்ற புனைவுலகங்கள் லத்தின் அமெரிக்கா, இந்தியா, அரேபியா மற்றும் கிழக்காசிய நாடுகளிலேயே அதிகம் இருக்கின்றன. மகாபாரதம், ஆயிரத்தோர் இரவுகள், நாட்டார் கதை மரபுகள் இவ்வாறான புனைவம்சங்களை கொண்டமைந்தவை. அதனால்தாான என்னவோ லத்தின் அமெரிக்க கதைசொல்லிகளின் புனைவுகள் புதிர்ச்சுழற்பாதைகளில் ஓடித்திரியும் அரூப விலங்குகள் போல் இருக்கின்றன. போர்ஹேஸின் “புத்தகம்” இவ்விடத்தில் ஞாபகத்திற்கு வருகிறது.

இந்த திரைப்படத்தைப் பார்க்கும் போது ஒரு பாரம்பரிய நாட்டார் மரபு இன்னொரு வடிவத்திற்கு எவ்வாறு நகர்த்தப்பட்டிருக்கின்றது என்பது விளங்குகின்றது. அதுதான் சினிமா. லத்தின் அமெரிக்காவின் தொன்மம் சினிமாவி நிகழ்த்தியிருக்கும் அற்புதம்தான் the Book of Life. இவ்வாறான பல கதைகள் எமது மரபுகளிலும் உண்டு. நாம்தான் அதனை கவனிக்காமல் முகத்தை ஹாலிவூட் பக்கம் திருப்பிக் கொண்டிருக்கின்றோம். எமது பணியை எமக்கு உணர்த்தும் இப்படைப்பை ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s