கண்டி வீரன் யாழ் பயணம்: The Peacock Journey 2

Kandy

முதல் பாகம்…

யாழில் முசுபாத்திக்கு, மாலை, காலை, இரவு… என்று பாரபட்சம் காட்டாது குடித்த டீ கூட அருமையாகத்தான் இருந்தது. ஒருவேளை கண்டி டீ அவ்வளவு மொக்கையோ? டீல என்னய்யா பிரதேசவாதம். எங்க போனாலும் கொட்டிக்கொள்ள வெட்கப்பட்டதேயில்லை. மதுரன் அப்பா நல்லா டீ போடுவேர், என்று சஞ்சிகன் பிட்டு எடுத்துக் கொடுக்க. “அப்படியா…!” என்ற போலி ஆச்சரியத்துடன் கேட்க, சுடச்சுட டீயும் வந்தது. குடித்தால் உண்மையில்… என்ன சொல்வது, டீ என்றால் இதான் டீ.

ஆசுவாசமாக அமர்ந்து குடித்துக் கொண்டே கண்டி, மஹிய்யாவ மயான பூமி நினைவில் வந்து குறுக்கிட்டது. கண்டி மஹிய்யாவ காட்டுப்பள்ளிக்கு பின்னால் இருக்கும் பழைய மயான பூமியில் ஆங்கிலேயர் காலத்து கல்லறைகள் நிறைய உண்டு. கலைத்துவமாக கட்டப்பட்ட, உக்கிப் போன எழும்புகள் படுக்கும் இடங்கள் நிறைய அங்கு இருக்கும். அதில் ஜேம்ஸ் டெய்லரின் கல்லறையும் ஒன்று. இலங்கைக்கு தேயிலையை அறிமுகப்படுத்தியவன். கல்லறைக்கருகில் நின்று புகைப்படம் எடுத்தப்படி, பத்தாம் ஆண்டு வரலாற்று பாடத்தை மீட்டிக் கொண்டிருந்தோம்.

அதேநேரம்,

கண்டி போகம்பர சிறைச்சாலை கைதிகளை சிரமதானத்துக்காக மஹிய்யாவ மயான பூமிக்கு அழைத்து வந்திருந்தனர். அதில் ஒரு ஜெயிலர் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்று பார்த்துக்கொண்டேயிருந்தார். அருகில் வந்து,

“மல்லிலா மொகோ மெதன…?”

“இல்ல சும்மா, ஸ்கூலுக்கு புகைப்படம் எடுக்க வந்தோம்…”

“எஹமத… ஹரி மெயா கௌத? ஓகொல்லொன்கே நேதேயோத…?”

“இல்ல, இது ஜேம்ஸ் டெய்லர் கல்லறை… இலங்கைக்கு தேயிலையை அறிமுகப்படுத்தியவன்…”

“(சிங்களத்தில்) பாருங்களே… இந்த இங்கிலிஷ்காரனுவல் அறிமுகப்படுத்தி ஈக்கிற விசியங்கள… தேயிலை எவ்வளவு மனுசன சோம்பேறியாக்குது. அந்த காலத்துல எங்கட ஆக்கள் தேத்தண்ணிக்கி பதிலா பெலி மல் குடிச்சாங்க. பிலாக்கா (பலா) தின்டாங்க… அப்போ மக்கள் பெரிய பெரிய பாராங் கல்லெல்லாம் தூக்கிக் கொண்டு வந்து குலக்கோட்டன் குளங்கள் எல்லாம் கட்டினாங்க. இப்ப ஈர பிலாக்காவ தின்டு தெம்பில்லாம ஈக்கிறானுக…”

உண்மைதான். எங்கள் உணவுக்கலாச்சாரம், எமது இயற்கை சூழலுக்கு ஒவ்வாத அந்நிய தாவரங்களின் ஊடுறுவல் எல்லாம் மேலைத்தேயர்கள் ஆக்கிரமிப்பின் போது நிகழ்ந்தவையே. இல்லை நிகழ்த்தப்பட்டவை. பைன் மரங்கள், நிலத்தின் நீர்வளத்தை அப்படியே அழித்து விடும். யோவ், டீய குடிய்யா ஆறிட போவுது. பின்மண்டையில் விழுந்த அமானுஷ்ய அடியின் பின்னரே என்னால் யாழிற்கு மீள முடிந்தது.

இரண்டாம் நாள் காலையில் குடித்த டீக்கு பின்னால் இவ்வளவு அரசியல் இருக்கா? சொல்லவேயில்ல.

யாழ் நகரும் வெயிலும் ஒன்றுக்கொன்று கூடிக்குழாவிக் கொண்டிருந்தன. நடுவில் சிலபல ஆச்சரிய தருணங்களில் ஆழ்ந்துகொண்டிருந்த என்னால் அதனை உணரமுடியவில்லை. திங்களன்று போனதால் யாழ் நூலகத்தை வெளியில் இருந்துதான் காணமுடிந்தது. வெளியில் இருந்து ஃபோட்டோக்களை எடுத்துக் கொண்டு வந்ததுதான் மிச்சம். பேஸ்புக்கும், உலகமயமாக்கலும் எங்களுக்குத் தந்ததென்னவோ ‘selfie’ வெறியையும், ‘focus’ பண்ணி எடுக்கும் பூக்களையும்தான். பயபுள்ளைங்க ஃபோட்டோகிராபி என்ற பெயரில் பூக்களைத்தான் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த பூக்களுக்கு பின்னால் வியாப்பித்து நிற்கும் அழிவின் அடையாளங்கள், மனிதர்கள், தெருக்கள் எதுவும் கண்களுக்குத் தெரியவில்லையா மக்கா? இந்தப் பந்தியை பார்த்து கூட வந்தவன் கடுப்பாகாமல் இருந்தாச் சரிதான்.

நூலகத்தை முழுதாக வாசிக்க முடியாமல் போன கவலையில் நான்கு பேரும் இளநீ வாங்கிக் குடித்தோம். இளநீ இனிப்பாக இருக்கவில்லை. அப்பொழுதுதான் மழைக்காலம் முடிந்திருந்ததால் அப்படியிருக்கலாம். கோடையில் இளநீயின் சுவையோ தனி. இளநீ மட்டுமல்ல கோடைக்காலத்தில் வரும் பழங்கள் அனைத்தும் குளுமையான குணாம்சங்களைக் கொண்டாதாகவேயிருக்கும். இறைவன் படைப்பில் எத்துனை ஆச்சரியங்கள். றப்புல் ஆலமீன்!

யாருமில்லாமல் காய்ந்து கிடந்த யாழ் கோட்டைக்குள் ஐஸ்கிறீம் சகிதம் உட் புகுந்தோம். யாழில் குளிர் பாகும் ரொம்ப பேமஸ் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இது கொஞ்சம் ஏமாற்றமே. என்னமோ இவுரு பெரிய இத்தாலியன் ஐஸ்கிறீம் குடிச்சி வளர்ந்த மாதிரி கதை. போவியா, குடிக்கிறது ஓசி ஐஸ்கிறீம் இதுல சாரு எஃபெக்ட்.

கோட்டையில் காலடி எடுத்து வைத்தகணம் என்னுள் ஒரு வைப்ரேஷனை உண்டுபண்ணியது, நரம்பெல்லாம் புடைத்து வெடித்து… ஹம் நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கின்றேன், இந்த பற்று, உத்வேகம், தேசியம் எதுவும் வரமாட்டேங்குது. என்ன கொடுமை. யாருமற்ற யாழ் கோட்டையை சுற்றிப் பார்த்துவிட்டு நகர்ந்தோம். பகலுணவு ஒரு கடையில் கொத்து.

இதற்கிடையில், எங்கு போனாலும் அப்பகுதியில் ஏதும் புத்தகக் கடை இருக்கின்றதா என்று உலாத்துவது வழக்கம். அப்படி பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு சென்ற நேரம் சரியில்லை போலும், எல்லோருக்கும் புத்தகங்களை பரத்தி அடுக்கிக் கொண்டிருந்தார்கள். கொழும்பில் உள்ளது அங்கு எதுவும் இருக்கவில்லை. கேட்ட புத்தகங்கள் பற்றி எந்த அறிவும் அவர்களுக்கு இருக்கவில்லை. இலங்கை புத்தகசாலைகளின் ஏகோபித்த சட்டவிதி இதுவாகத்தான் இருக்கும். புத்தகசாலையில் வேலைசெய்பவர்களுக்கு புத்தகங்களைப் பற்றிய எந்த அறிவும் இருப்பதில்லை. ஒரு புத்தகத்தைக் கேட்டால் ஏதோ ஏலியனைப் பார்ப்பது போல் பார்க்கின்றார்கள். தலைவிதி.

இந்த கட்டுரை நான்-லீனியர் வடிவத்தில் சென்கின்றது. முன் பின் மாறி மாறி நிகழும் காலக்குழப்பத்தையும், எனது நினைவாற்றலையும் இன்னொரு வகையில் நான்-லீனியர் என்றும் சொல்லலாம். அந்திநேர தென்றல் காற்றும் வீச நல்லூர் கந்தசுவாமி கோவிலை மொய்த்தோம். அந்தநேரம் பார்த்து கோவிலை மூடிவிட்டார்கள். சரி, வந்ததுதான் வந்தோம் ஒரு ஓரமாக ஒதுங்குவோம் என்று நான், ஷனாஸ், மதுரன், சஞ்சீகன், கழுதை சகிதம் கோவில் மணலில் அமர்ந்துகொண்டு கதையாடிக் கொண்டிருந்தோம். கழுதை மட்டும் பேசவேயில்லை. யாழில் மாலை வேளையில் சுடச் சுட வைக்கும் சுண்டலுக்கா சஞ்சீகன் உயிரைக் கொடுக்கலாம். அவித்த கடலை, அதற்கு மேல் சோஸ் மாதிரி சம்பல், அதற்கு மேல் பக்கோடா, மறுபடியும் சம்பல், தேங்காய்த் துருவல். ஆனந்த வெள்ளத்தில் சுடச்சுட தின்றோம். ஒரு பிரதேசம் என்றால் அதற்கேயுரிய உணவுக்கலாச்சாரம் ஒன்று இருக்கும். பயணங்களின் போது எனக்கு விருப்பமான செயற்பாடு போகும் இடத்தில் இருக்கும் உணவுகள். அவை அந்த பிரதேசத்தில் அதிகம் விளைச்சலைத் தரக்கூடிய உணவு வகைகளில் இருந்தோ, அல்லது சுவாத்தியத்திற்கு அமைய வளரும் மரங்களில் இருந்தோ பெறப்படுபவையாக இருக்கும். கிழக்கு மற்றும் புத்தளம் பகுதிகளில் மரவள்ளி – சில்லறைக் கறி கொத்து கிடைக்கும் என்பார்கள். அதனை சுவைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் அவா. இந்த கடைசி ஆசை மட்டும் நிறைவேறாமல் போனால் ‘மரவள்ளி முனி’யாக அலைவேன்.

(தொடரும்…)

Advertisements

3 comments

  1. அருமை…..(சில இடங்களில் வழுச் சொற்கள் தவிர்த்து………..[அதாம்ப்பா………..பிழை.])

  2. ஐஸ்க்ரீமுக்கு புலிகள் வைத்த தமிழ்ப் பெயர் “குளிர்களி” என்று நினைக்கின்றேன்.
    பேக்கரிக்கு வெதுப்பகம் என்றும், பாணுக்கு வெதும்பி என்றும் பெயர் வைத்து இருந்தார்களாம்.

    ஒராபி பாஷாவுடன் வந்தவர்களான பஹ்மி பாஷா உட்பட சிலரின் கல்லறைகள் மகியாவை பள்ளியில் இருப்பது தெரியும், ஆனால் மகியாவையில் ஜேம்ஸ் டைலரின் கல்லறை இருக்கும் விடயம் தெரியாமல் போய்விட்டதே. A/L காலத்தில் அடிக்கடி லுஹர் தொழுத பள்ளிவாசல் அது, அந்த ஏரியாவே மயானங்கள் நிறைந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s