கண்டி வீரன் யாழ் பயணம்: The Peacock Journey

Kandy

யாழ் பயணக் கட்டுரைக்கு the Peacock Journey என்று தலைப்பிடலாம் என்று கண்டி – யாழ்ப்பாண பஸ் பயணத்தின் போதே நினைத்துக் கொண்டேன். ஆனால் யாழில் ஒரு மயிலையேனும் காணவில்லை. (வேறு மயில்கள் நகர்ப்புறங்களில் ஜாலமிட்டது தனிக் கதை) இருந்தாலும் கட்டுரைக்கு முன் தீர்மானிக்கப்பட்ட தலைப்புக்காக வேண்டி வவுனியாவில் கண்ட மயிலை சுட்டுக்கொண்டேன்.

அதிகாலையிலேயே பயணம் துவங்கி, தூங்கு தூங்கு என்று தூங்கி, விழித்துப் பார்க்கும் போது ஏதோ ஒரு மாவட்டத்தில் இருந்தோம். எந்தவித களைப்பையும் உணர முடியவில்லை. இதே கொழும்புப் பயணமாக இருந்தால் முகமெல்லாம் கறுப்பு அப்பிக் கொண்டிருக்கும். (இருந்தாலும் வெள்ளையாக்கும்?) இரு மருங்கிலும் வனப்புடன், பச்சைப் பசேலென இருந்த காடுகள், வயல் வெளிகள் என்று வர்ணிக்கத்தான் ஆசை. என்ன செய்ய, தூக்கக் கலக்க கண்களும், முதலாளித்துவமும் இவற்றை மறைத்து விட்டன. ஐ-பாட் பாடல்களும் ஒரு காரமாணமாக இருக்கலாம்.

வன்னியை அடைந்ததில் இருந்து குறுந்தகவு பரிமாற்றம் ஆரம்பித்து விட்டது.

“எங்க?”

“வன்னி”

“Now Where?”

“New Forest”

“What New Forest?”

“புதுக்காடு”

இந்த இடத்தில் நான் தனியனாக பயணிப்பது மாதிரியே ஒரு ஃபீலிங் வருகிறதல்லவா? Discovery Channel காடு பயண நிகழ்ச்சிகளை முன்வைத்து ஒரு விமர்சனம் எழுந்தது. அது ஆட்களே புகமுடியா இருண்ட வனாந்திரங்களில் எப்படி இந்தப் படக்குழுவினால் மாத்திரம் புக முடிந்தது? அதற்கு பல மழுப்பல் பதில்கள் கிடைத்தாலும் கடைசியில், அப்பகுதி பழங்குடிகளே வழிகாட்டிகளாக இருந்து செயற்பட்டார்கள் என்ற உண்மை வெளியாகியது. அப்படித்தான் இதுவும். நானும் நண்பன் ஷனாஸும் போன பயணத்தை, நான் மட்டும் போன மாதிரியே சித்தரித்துக் கொண்டுவருகின்றேன். காலனித்துவத்தின் வேர்கள் எங்கெல்லாம் ஊடுருவியிருக்கின்றது என்று பார்த்தீர்களா? இருக்கட்டும்.

பச்சிலைப்பள்ளி (பாம்பு “ல” பல்லியோ?) என்கிற பளையில் இறங்கிய போது, பட்டாசு, மாலை ஒன்றும் இருக்கவில்லை. என்ன அநியாயம்? இருந்தாலும் கற்பூரம் வைக்காத பூசணிக்காய் கண்டு பூரிப்படைந்தேன். பேயைக்கண்டு அரண்டவன் போல் வரவேற்றான் சஞ்சீகன். அந்தளவுக்கா பேய்க்காட்டுகிறோம்? பிசாசுக் கதைகள், நல்லூர், யாழ் கோட்டை, ஒடியற் கூழ், சுண்டல், யுத்த அழிவு அடையாளங்கள், யாழ் நூலகம்… என்று சில பல கனவுகளுடன் பளையில் ஒரு பாழடைந்த வீட்டினுள் தஞ்சம் புகுந்தோம். பகலுணவுக்காக குளித்து ரெடியாகி சென்றமர்ந்த போது, பொறித்த மீனும், கணவாய்க் கறியும் காத்திருந்தது. இதுவல்லவோ அமிர்தம். சஞ்சீகன் அம்மாவுக்கு தங்க வளையல் போட வேண்டும் என்று தோன்றியது. ஆனால், பின்னாட்களில் தங்க வளையல் செட் ஒன்றே போட வேண்டிவரும் என்று அப்பொழுது என் “யானக் கண்ணுக்கு” புலப்படவில்லை. அத்தருணத்தில் புத்திசாலித்தனமாக “சஞ்சீ, உங்க அம்மா கைக்கு என் கணக்குள வளையல் ஒன்று போட்டு விடு. பிறகு அக்கவ்ன்டில் போட்டு விடுகிறேன்.” என்று கூறிவிட்டேன். அதை மனதில் வைத்துக் கொண்டு இரவு “கொத்தில்” வைத்தான் சஞ்சீகன் ஆப்பை.

இந்த சுவையுணவை ரசித்து ருசித்துக் கொண்டிருக்கும் போதே “டைமிங் என்டர்” கொடுத்தான் “யாழ் வீரன்” என்று பெருமக்களால் போற்றப்படும் மதுரன். அந்த பொழுதில் கலங்கிய என் கண்களுக்கு ஒரு பின்நவீன விமரிசகன் உரப்பு, உணவுக்கு ஆப்பு, ஆனந்த கண்ணீர் என விளக்கமளித்தான். உணவுடன் உரையாடலும், உறவாடலும் ஆரம்பித்தது.

சஞ்சீகன் வீட்டுக்கு பின்னால் விடுதலைப் புலிகளின் கன்ட்ரோல் சென்டர் அமைந்திருந்தது. நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த இந்த பாதாள கட்டுப்பாட்டு அறையை தகர்க்க இலங்கை இராணுவம் எவ்வளவு முயற்சித்தும் பலனளிக்கவில்லை. அவ்வளவு கடினமான கான்க்ரீட் கோட்டையாக அது கட்டப்பட்டிருந்தது. பங்கரினுள் இறங்கி போகத் தயாரானோம். அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. ஆள் நடமாட்டமின்றி பல ஆண்டுகள் வெறிச்சோடிப் போயிருந்த கட்டிடம் தற்பொழுது பேட்மேனின் “Bat Cave” ஆக உருமாறியிருந்தது. பேட்மேன் அவனது குகையில் எப்படித்தான் தன் இரவுகளை கடத்துகின்றானோ தெரியவில்லை, அவ்வளவு நாற்றம். வௌவால் எச்சங்கள் நாசிகளை நாசம் செய்திடும் அளவுக்கு நாற்றமடிக்கும். அசிட். சூரிய ஒளி புக முடியா கட்டிடம் முழுதும் கும்மிருட்டு அப்பிக் கொண்டிருந்தது. நண்பர்கள் கூட்டம் தைரியத்தை அணிந்துகொண்டு களத்தில் இறங்கியது. கும்மிருட்டை துலக்க, ஸ்மார்ட் ஃபோன் டார்ச்சை ஆன் செய்ததுதான் தாமதம்… பட படவென்று வௌவால்கள் முகத்தை நோக்கி பறந்து வெளியேறியது. ஒன்றிரண்டு அடிகளைத் தவிர வேறெதையும் உள்ளே வைக்க முடியவில்லை. பயானகம்.

வீராப்புடன் போனவர்கள், “ஆவ்வ்…” என்று வெளியேறியதுதான் மிச்சம். அடுத்த தடவை முறையாக திட்டமிட்டுக் கொண்டு வருவோம் என்று, பளையின் பற்றைக் காடுகளை நோக்கி நகர்ந்தோம். குளம், பனை, மா, நாவல், பளை மரங்கள், தனிக் காளை, கரையில் கிடந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வீடு சென்றோம். என்ன செய்வது நாம் போன காலம் அப்படி, யாழின் காய் கனிகள், பனை எதுவும் சீசனில்லை. ஒரு நாவற்பழத்தையேனும் காணக் கிடைக்காதது பெரும் ஏமாற்றமே. யாழில் அப்பகுதிக்கேயுரிய தனித்துவமான மரங்கள், உணவுகள் என்று ஏராளமாக இருக்கின்றது. நாம் அனுபவித்தது கொஞ்சமே. கண்டி போன்ற பகுதிகளில் தனித்துவமான எதுவும் இல்லை. ஆனால் கண்டியே ஒரு தனித்துவமான பகுதி என்பது வேறு விடயம்.

முதல் நாள் இரவு பளையில் பேய்கள், வைரவர், வைரவரின் நாய் சகிதம் நாமும் ஊசலாடினோம். பளையில் சஞ்சீகன் வீட்டுப் பகுதி பழைய வீடுகளும், இடிபாடுகளுக்குள்ளான கட்டிடங்களும், பல பழ மரங்களும் நிறைந்தாக இருந்தது. செல்லடிபடாத தென்னை, பனை ஒன்றையும் காணமுடியவில்லை. யுத்தம் மனிதர்களிடம் மட்டுமல்ல, மரங்களிடமும் இரக்கம் காட்டவில்லை.

இராக் கதைகள் பேசிக் கொண்டிருக்கும் போது யாழ் சிறு தெய்வங்கள் பற்றிய பேச்சு வளர்ந்தது. வீரபுத்திரர், தம்பூரான், முனியப்பர், அண்ணாமார், நாச்சிமார், வைரவர் போன்ற சிறுதெய்வ வழிபாட்டு மரபு குறித்து அறிய முடிந்தது. மேற்சொன்ன சிறுதெய்வங்கள் பெரும்பாலும் உக்கிர தெய்வங்களாகவே இருந்தன. வைரவர், வீரபுத்திரர் இருவரும் காவல் தெய்வங்களாக அறியப்படுபவர்கள். யாழில் பெருதெய்வ வழிபாட்டு மரபு தன் வேர்களை ஆழமாக பரப்பியிருந்தாலும், சிறுதெய்வ நம்பிக்கைகள் அங்கு இன்னும் இருப்பது ஆச்சரியமளித்தது. எனக்கு. நல்லூர் கந்தசுவாமி கோயிலை விட எனக்கு வைரவர் கோயிலைப் பார்க்க வேண்டும் என்ற அவாவே அதிகம் மேலிட்டது.

வைரவர் பற்றிய கதைகளை மனதுள் கொண்டு துர்சொப்பனத்தில் ஆழ்ந்தேன்.

(தொடரும்…)

Advertisements

4 comments

  1. ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களை படிப்பதற்கு முன்பு அந்த எழுத்தாளனை புரிந்துகொள்வது அவசியம் என்பது என் திண்ணமான கருத்து. அதுபோலவே அந்த எழுத்தாளரும் தன் கருத்துக்கள் எப்படி இருக்கும் தன் பார்வை எத்தகையது என்பதை வெளிப்படுத்தாமல் எழுத்து ஒன்றாய் தான் வேறாய் இருப்பதை என்னால் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களை நான் படிப்பதே இல்லை. ஒமரை யார் என்று புரிந்துகொள்ள முடிவதும் அவர் தன் கருத்துக்கள் எப்படிப்பட்டது என்பதை தன் எழுத்துக்களிலேயே புரிய வைப்பதும் பார்க்கும்போது அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இருக்கும் முரண்பாடு தனி. அது வேறு விவாதம். விரைவில் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்…

    • சமீப நாட்களாய் உங்கள் “எழுத்தாளன் – அவன் அரசியல் நிலைப்பாடு” இரண்டும் அவன் படைப்பில் நின்றும் வேறாக இருக்கக் கூடாது என்ற கருத்தில்தான் இருக்கின்றேன். உங்கள் கருத்து மிக முக்கியமானது. என்னையும் ஒரு எழுத்தாளனாய் கண்டது ரொம்ப மகிழ்ச்சி…

  2. வைரவருக்கு “ஊத்தைகுடி வைரவர்” என்றும் ஒரு பெயர் உண்டு. யாழ் கோட்டைக்கு அருகில் ஒரு வைரவர் கோயில் உண்டு. என் சிறுவயதில் கோட்டைக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று ஒரு தீராத ஆர்வம் இருந்தது, ஆனால் அது இராணுவ முகாமாக பாவிக்கப்பட்டு வந்த காரணத்தால் யாரும் உள்ளே நுழைய முடியாது.

    யாழ் கோட்டையைச் சுற்றி ஒரு அகழி உள்ளது, இந்த அகழி வைரவர் கோயிலையும், கோட்டையையும் பிரிக்கின்றது. வைரவர் கோயிலுக்கு பின்புறமாக, கோட்டையின் கைவிடப் பட்ட சிறு பகுதி உள்ளது, அதில் குகை போன்ற அமைப்பும் காணப்படுகின்றது. கோட்டைக்குள் நுழைய முடியாத ஏமாற்றத்தை, வைரவர் கோயில் பின்புறமாக உள்ள கோட்டையின் கைவிடப் பட்ட பகுதிகளுக்குள் நுழைந்து தனித்துக் கொள்வேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s