Djinn – the third

Djinn - Concept Art 01
Djinn – Concept Art 01

அலாவூதீனின் அற்புத விளக்கு கதையில், அலாவூதினுக்கு கிடைக்கும் விளக்கிலிருந்து வெளிப்படும் பூதம் நினைவிருக்கின்றதா? அதுதான் ஜின். (அதே உருவத்தில் அல்ல) ஜீனி என்றும் கூறுவார்கள். ஜின் – Jinn – الجن என்றால், மறைவான, வெற்றுப் பார்வைக்கு துலங்காத, hidden from sight என்று பொருள்படும் அரபுச் சொல்லில் இருந்து வந்தது. பெயரிலேயே மறைந்திருப்பவைதான் ஜின்.

இறைதூதர் சுலைமானுடைய (அலை) கதை தெரியுமா? விவிலியத்தில் ஸலமான் என்றழைக்கப்படும் அரசரே, குர்ஆனில் சுலைமான் என்று அழைக்கப்படுகிறார். தாவூத் – டேவிட் (அலை) அவர்களின் புதல்வர்தான் இறை தூதர் சுலைமான் (அலை). சுலைமான் (அலை) அவர்களுக்கு, இறைவன் உலகில் யாருக்கும் வாய்க்கப் பெறாத ஆட்சியதிகாரத்தை வழங்கினான். இறைவனின் உத்தரவைக் கொண்டு அவர், மனிதர்களையும் ஜின்களையும் ஆட்சி செய்தார்கள். இறைவன் அவருக்கு, பறவைகள், மிருகங்களின் மொழிகளையும் கற்றுக் கொடுத்தான். இன்னும், காற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவர் வரலாற்றில் நிகழ்ந்த சம்பவமொன்று இறைவேதத்தில் குறிப்பிடும் போது,

சூரியனை வணங்கக் கூடிய சமூகத்தைச் சேர்ந்த அரசியை வெற்றிக் கொண்டு, அவளை தமது அரசவைக்கு வரவேற்குமுகமாக, அவளுடைய அரியாசனத்தை அவள் வருமுன் கொண்டுவருது யார்? என்று தன் அவையில் இருப்பவரை நோக்கிக் கேட்கிறார் சுலைமான் (அலை) அதற்கு ஜின்களில் பலம்பொருந்திய ஓர் இஃப்ரீத் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எழும்புவதற்குள் கொண்டுவந்து விடுகிறேன் என்றது. ஆனால், புத்தகங்களின் அறிவு கொடுக்கப்பட்ட ஒருவர், “நீங்கள் கண்களை மூடி திறப்பதற்குள், அந்த அரியாசனத்தைக் கொண்டுவந்து விடுகிறேன்” என்றார். (இந்த சம்பவம் குர்ஆனில், அத்தியாயம் “நம்லி – எறும்புகள்” இல், 16 ஆவது வசனத்தில் இருந்து இருக்கின்றது)

சுலைமான் (அலை) நபியின் வரலாறு ஜின்களுடன் பிணைந்தது. சுலைமான் (அலை) இற்கும் ஜின்களுக்கும் இடையில் நடைபெற்ற பல சம்பவங்கள் கதைகளாக இன்றும் வழக்கில் இருக்கின்றன. ஜின் சம்பந்தப்படும் அநேகமான கதைகளில் சுலைமான் – ஸலமான் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பார்.

Wishmaster
Wishmaster

இறைவன், ஜின்களை நெருப்புக் கொழுந்திலிருந்து படைத்தான் என்று குர்ஆன் கூறுகின்றது. இன்னுமொரு இடத்தில் “ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கடும் சூடுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்” என்கிறான். படைப்புக் கோட்பாட்டில், மனிதனின் தோற்றம் பற்றி குறிப்பிடும் குர்ஆன், ஜின்கள் மற்றும் மலக்குகள் (தேவர்கள்) படைப்பு பற்றியும் குறிப்பிடுகிறது. ஆனால், மனிதர்கள் படைப்பு பற்றி விரிவாக குறிப்பிடுவது போன்று மறையுலக படைப்புகள் பற்றி விரிவாக குறிப்பிடுவதில்லை. மலக்குகளை ஒளியைக் கொண்டும், மனிதர்களை தட்டினால் ஒலியெழுப்பக் கூடிய மண்ணிலிருந்தும், ஜின்களை கடும் சூடுள்ள நெருப்பு ஜுவாலையிலிருந்தும் படைத்தான் என்கிறது.

மனிதன் இவ்வுலகில் தோன்றுவதற்கு முன்னர் ஜின்களே இவ்வுலகில் இருந்து வந்திருக்கின்றன. அவற்றின் அட்டகாசம் மிகைத்துவிடவே, இறைவன் அவனது தேவர்களைக் (மலக்குகள்) கொண்டு அடக்கினான். அவற்றில் தப்பித்த பல ஜின்கள், மலைகள், காடுகள், கடற்கரையோரங்கள், குகைகள் போன்றவற்றை தங்கள் வாழ்விடங்களாக்கிக் கொண்டன. அவற்றில் ஒரு ஜின், தேவர்களுடன் இணைந்து படிப்படியாக மலக்குகளின் தரத்தை அடைந்து இறைநேசனாகியது. அதுதான் இப்லீஸ். பின்னாட்களில் இவன் மனிதனுக்கு எதிரியாக அறியப்படப் போகிறவன்.

ஜின்கள் பற்றி, இவைவேதம் மற்றும் இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் சொல்லப்பட்டவை தவிர்த்து, முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முந்திய அரபு தொன்மங்கள், நாட்டாரியல் போன்றவற்றிலும்… நபியவர்களுக்கு பிந்திய அலிப் லைலா வல் லைலா (ஆயிரம் இரவுகளும், ஓர் இரவும்) போன்ற பேரிலக்கிய நாட்டுப்புற கதைத் தொகுப்புப் பிரதிகளிலும் காணலாம். இவற்றையெல்லாம் கடந்தும் ஜின் நம்பிக்கைள் முஸ்லிம், அரபு சமூகங்களில் விரவிக் காணப்படுகின்றன. சூஃபி ஞானிகளின் கதைகள், சம்பவங்களிலும் ஜின் ஒரு பாத்திரமாக இருந்து வந்திருக்கின்றது. பேய்பிடித்தாட்டுகிறது போல் ஜின்பிடித்து ஆட்டுகிறது, ஜின் வசியம், ஜின் வைத்தியம் என்று பல நம்பிக்கைகள் இங்கும் (தெற்காசிய நாடுகள்) இருக்கின்றது.

ஜின்களின் வாழ்விடம், அவற்றின் உணவுப் பழக்கங்கள், அவற்றின் பண்புகள் (சக்திகள்) பற்றிய குறிப்புகளை பார்த்தால் கொஞ்சமே கிடைக்கிறது. மேலே சொன்னது போல, குகை, மலைகள், கடற்கரைகள் என்பன ஜின்களின் வாழ்விடங்களாக இருக்கின்றது. மிருகங்களின் எச்சங்கள், என்புகள்தான் அவற்றின் உணவு என்ற குறிப்புகளும் இருக்கின்றன. அடுத்து அவற்றின் பண்புகள், ஏன் சக்திகள் என்று குறிப்பிடாமல் பண்புகள் என்று குறிப்பிட்டேன் என்றால், பேய், பிசாசு, Demon கள் போன்று Supernatural Beings போன்று இவற்றை வரையறுக்க முடியாது என்பதனாலேயே. மனிதனைப் போன்றே, தேர்வுச் சுதந்திரம் (Free Will) இருக்கும் ஒரு இனமே ஜின். மனிதனுக்கு இருக்கும் நடப்பது, ஓடுவது, பேசுவது போன்றே ஜின்களுக்கும் சில இயல்புகள் / பண்புகள் இருக்கின்றன. ஒரு ஹதீஸ் (tradition) அறிவிப்பில், ஜின்களின் மூன்று வகைகள் இருக்கின்றன, சிறகுகளுடன் கூடிய பறக்கும் ஜின்கள், நாய்கள், பாம்புகளின் தோற்றத்தில் இருப்பவை, மற்றும் அதிவேகமாக பயணிக்கக் கூடியவை. (இந்த வேகம் பற்றி மேலே குறிப்பிட்ட சுலைமான் (அலை) அவர்களின் அவையில் ஒருந்த ஜின்னின் சம்பவத்தை நோக்கலாம்) வேகம் எனும் போது, விண்வெளிப் பயண வேகம் எனக் கொள்க. அவைகளுக்கு தாம் விரும்பிய தோற்றத்தில் (Shape-Shifters) வரவும் முடியும். இன்னும், உயர்ந்த வெள்ளை அங்கி அணிந்த மனிதத் தோற்றத்திலும் அவற்றால் வரமுடியும். இதிலிருந்து, ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது, அது அவற்றின் உண்மைத் தோற்றத்தை எம்மால் காண முடியாது. ஆனால், அவைகளுக்கு எம்மை பார்க்க முடியும். We can’t see them, but they can… இப்படிச் சொல்லும் போதே திகிலா இருக்கா? எம்மால் அவற்றைப் பார்க்க முடியாது, ஆனால் அவற்றால் நம்மைப் பார்க்க முடியும். ஜின்கள் தங்கள் தோற்றங்களை மாற்றி இவ்வுலகில் சுற்றித் திரிகின்றன… அவற்றை சந்தித்தால், அது நான்காவது இல்லாவிட்டடால் ஐந்தாவது Dimension இன் விளைவே. ஜின் பற்றி படிக்கும் போது, Parallel Universe கோட்பாடு ஞாபத்தில் வருகிறது.

சரி, இப்போதைக்கு இது போதும்.

Djinn in Clash of the Titans
Djinn in Clash of the Titans

திகில் திரைப்படங்களில் அரிதாக சித்தரிக்கப்படும் ஒன்றே “ஜின்”. இதுவரையில் நேரடியாக ஜின்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படங்கள் என்று பார்த்தால் Whishmaster (1997), சமீபத்தில் வெளியான Jinn (2014). ஏனைய திரைப்படங்களில் ஜின்கள் கௌரவ வேடத்தில் வந்து போயிருக்கின்றன. Clash of the Titans படத்தில் ஜின் tribe ஒன்று வரும். பல திகில், பென்டஸி திரைப்படங்களில் (அநேகமாக அரபு நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படங்களில்) ஜின்கள் பற்றிய குறிப்புகளோ, அல்லது கௌரவத் தோற்றங்களோ அமைந்திருக்கும். ஆனால், இந்த கீழை மரபின் தொன்மத்தைப் பற்றி இதுவரையிலும் முறையான சித்தரிப்புடன் கூடிய ஒரு திரைப்படத்தை காணமுடியாதுள்ளது. 2014 இல் வந்த ஜின் திரைப்படமும், இது பற்றி சரியாக சித்தரிக்கவில்லை. அது வெறுமனே ஒரு exorcist திரைப்படமாகவே இருந்தது. அது தவிர, மேற்குலகின் பேய்விரட்டல் நம்பிக்கைகளை பிரதிபலிப்பதாகவே அது அமைந்திருந்தது. உதாரணத்திற்கு படத்தில் ஸம் ஸம் (மக்காவில் இருக்கும் ஒரு நீரூற்று – இது தனி வரலாறு) நீரைக் கொண்டு ஜின்னை விரட்டுவது, டிராகுலாவை Holy Water கொண்டு விரட்டுவதைவைத்தே உருவாக்கியிருக்க வேண்டும்.

Tobe Hooper's Djinn
Tobe Hooper’s Djinn

Tobe Hooper இன் Djinn (2013) திரைப்படம் மத்திய கிழக்கில் எடுக்கப்பட்ட முதல் திகில் திரைப்படம் என்றவகையில் முக்கியமான கவனிப்பைப் பெறுகிறது. இத்திரைப்படம் மத்தியகிழக்கு நாடொன்றில் புழங்கிவரும் ஒரு ஜின் கதையை மையமாக வைத்தே பின்னப்பட்டிருக்கின்றது. ஒரு தீய ஜின்னுக்கும், மனிதனுக்கும் பிறந்த பாதி ஜின் – பாதி மனிதன் எனும் கன்சப்டை வைத்தே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான திகில் சினிமாக்களின் அத்தனை element களும் இதில் இருக்கின்றது.

Rosemary’s Baby, The Grudge, the Omen போன்ற படங்களின் கூறுகளையும், Tobe Hooper இன் முந்தய The Texas Chainsaw Massacre இன் பாதிப்பு இப்படத்தில் தெரிகிறது. ஜின்னை சித்தரித்திருக்கும் விதம் ஓரளவுக்கு பரவாயில்லை. ஜின்கள் மனிதத் தோற்றத்தில் இருப்பது. ஜின் வசியம் (மயக்க) செய்யக் கூடியது போன்ற ஜின் பற்றிய நம்பிக்கைகளையும் இத்திரைப்படம் கவனத்தில் கொண்டிருக்கின்றது. அதிக typical horror திரைப்படங்களின் special effects கள் இல்லாமல், அமானுஷ்யத் தன்மையை தக்கவைத்துக் கொள்வதில் திரைப்படம் பிரயத்தனத்தை மேற்கொண்டிருக்கிறது.

திரைப்படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சியில், “ஆயதுல் குர்சி” எனப்படும் குர்ஆனில் வரும் ஒருசில வசனங்களைக் கொண்ட ஒரு framed photo வரும். அது பாதுகாப்புக்காக ஓதப்படும் ஒரு பிரார்த்தனை. இன்னொரு ஜின்கள், ஷெயத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடும் குர்ஆன் அத்தியாயமும் உண்டு. அதுவும் இத்திரைப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். இப்படி சில விடயங்களின் மூலம், அரபு / முஸ்லிம்களின் நம்பிக்கைகளை திரைப்படத்தில் பாவித்து இருக்கிறார் Tobe Hooper. எந்தவொரு திகில் திரைப்படமாக இருந்தாலும், அதில் வரும் entity (demon, devil, vampire, werewolf…) எதுவோ, அதற்கேற்பவே எதிர் செயற்பாடுகள் அமைதல் வேண்டும். Silver Bullet – Werewolf இற்கு என்றால், Wooden Stake to the Heart – Vampire இற்கு. அந்தவகையில், ஜின்களை விரட்ட அரபு / முஸ்லிம் நம்பிக்கைகளில் இருந்தே ஆயுதங்களைப் பாவித்திருக்கிறார் இயக்குனர்.

கடைசியாக, திரைப்படம் திகில் சினிமாவின் கூறுகளை உள்வாங்கி, ஜின் என்ற கீழை மரபின் நம்பிக்கையை நேர்மையான முறையில் எதிர்கொண்டிருக்கின்றது. அந்தவகையில் இத்திரைப்படம் அரபுபுலக (மத்திய கிழக்கு – டுபாய்) திகில் திரைப்படங்களுக்கு ஒரு முன்னோடியாக அமையலாம்.

குறிப்பு:

ஜின்கள் குறித்து விரிவான கட்டுரையொன்று எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதற்கு, மேலதிக வாசிப்பு தேவைப்படுகிறது. (எப்ப வருமோ?)

இக்கட்டுரையில் பாவிக்கப்பட்டிருக்கும் சில சொற்கள்,

 1. அலை – அலைஹிவஸல்லம் (அவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்)
 2. ஸல் – ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் (அவர்கள் மீது புகழும், சாந்தியும் உண்டாவதாக)
 3. மலக்கு – தேவர்கள், Angels
Advertisements

8 comments

 1. என்னாது விாிவான கட்டுரை இனிமேதான் வருமா…!! நான் இதுவே விாிவானனுதான் நெனச்சேன் 😀 அப்ப இன்னும் பொிய விருந்து இருக்குனு சொல்லுங்க. அரும…அரும…சீக்கிரமா எழுதுங்க படிச்சுப்புடுறேன். உண்மையில் இந்த விவரங்களை வைத்து கதை வளா்த்தாலே நல்ல சுவாரசியமான கதை பன்ன முடியும். அப்படி ஒரு முயற்சியை உங்களிடமே எதிா்பாா்க்கிறேன் ஒமா் ஷாிஃப்.

  • எல்லாக் கதைகளையும் இறக்கிவிட்டா நாம எங்க போறது… அது நமக்குள்ளே இருக்கட்டும். ஒவ்வொன்னா விடலாம். 😉

   • நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை. நான் சொல்ல நினைத்தது எல்லாவற்றையும் இங்கேயே பகிருங்கள் என்று அல்ல. உங்களுக்கு திரைப்படம் இயக்கும் ஆர்வம் உள்ளது என்பது தெரியும். அதனால் நீங்கள் அதற்கு ஒரு கதை எழுத வேண்டும் என்றும் அதை நீங்களே படமாக எடுங்கள் என்றும்தான் //உண்மையில் இந்த விவரங்களை வைத்து கதை வளா்த்தாலே நல்ல சுவாரசியமான கதை பன்ன முடியும். அப்படி ஒரு முயற்சியை உங்களிடமே எதிா்பாா்க்கிறேன் ஒமா் ஷாிஃப்.// இதற்கு அதுவே அர்த்தம். முன்பு மொபைலிலிருந்து டைப் செய்ததால் விவரமாக எழுத முடியவில்லை 😀

   • தாமதித்த பதிலுக்கு மன்னிக்கவும். நீங்கள் சொல்வது போல் அப்படி சில கதைகளை எழுதி வைத்திருக்கிறேன். திரைப்பட சாத்தியங்கள் கைகூடும்பட்சத்தில் ஒவ்வொன்றாக இறக்குவோம்… 😉 உங்கள் அன்புக்கு நன்றிகள் பல.

 2. சகோ.உண்மையிலேயே ஜின்களை வைத்து படம் எடுத்திருக்கிறார்களா??
  என்னால் நம்ப முடியவில்லை.மேலதிகமாக தகவல்கள் இருந்தால் சொல்லுங்களேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s