TRANSCENDENCE: செயற்கை நுண்ணறிவின் பயங்கரம்!

transcendence_ver11_xlg

வலுவில்லாத ஒரு திரைக்கதையின் மூலம் எந்தவொரு அதிஉயர் கன்சப்டையும் சிதைத்துவிட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு உதாரணம். இருந்தாலும் படத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட Concept நவீன யுகத்தின் அதி உன்னத கண்டுபிடிப்பாக போற்றப்படும் இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இவற்றின் பாரதூரம் பற்றிய ஒரு சீரியஸ் அலசலை படத்தின் இயக்குனர் Wally Pfister மேற்கொண்டிருக்கிறார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ஒளிப்பதிவுக்காக ஆஸ்கார் விருதையும் வென்றிருக்கிறார். நோலனின் பாதிப்பு படத்தில் நிறைய இடங்களில் தெரிவது தவிர்க்க முடியாததாகிறது.

திரைப்படத்தில் பல இடங்களில் நிறைய விஞ்ஞான புனைவுத் திரைப்படங்களை நினைவூட்டுவதை தவிர்க்க முடியவில்லை. கதையின் தளங்களை Wally Pfister, மேரி ஷெல்லியின் ப்ராகின்ஸ்டைன், ஐஸக் அசிமோவ் படைப்புகளின் உந்துதலில் பெற்று இருக்கின்றார்.

அமெரிக்க Blockbuster திரைப்படமொன்றிற்கான அத்தனை கூறுகளையும் கொண்ட கதைத்தளம் இந்த Transcendence. ஆனால், அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு எடுத்துக்கொண்ட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கன்சப்டை தெளிவுபடுத்த முனைந்திருப்பது படத்தைப் பார்க்கும் போது விளங்குகிறது.

ஜானி டெப், தனது பாத்திரங்களை தெரிவு செய்வதில் வல்லவர். இத்திரைப்படத்தில் ஒரு IT ஜீனியஸாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். இவ்வளவிற்கும், படத்தில் இவரின் பாத்திரம் கொஞ்சமாகவே வருகின்றது.

கதை இதுதான், டாக்டர் வில் (ஜானி டெப்) மற்றும் அவரது மனைவி ஈவ்லீன் (ரெபெக்கா ஹால்) அதி உயர் செயற்கை நுண்ணறிவைக் கொண்ட கம்ப்யூட்டரை உருவாக்க எத்தனிக்கின்றனர். அதில் ஒரு பிரச்சினை, Self Conscious அல்லது Self Awareness ஐ கொண்டதாக இருந்தால்தான் அது மனித நுண்ணறிவு செயல்படும் விதத்தில் இருக்கும். அந்த சூட்சுமத்தை கண்டடைவதில்தான் இருவரின் பணியும் இருக்கின்றது. இந்நிலையில், இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் பின் விளைவுகள் மிகவும் பாரதூரமாக இருக்கும் அதனை வளர விடமால் தடுக்க வேண்டும் என ஒரு எதிர்ப்பு – அரசியல் குழு செயற்படுகிறது. அக்குழு டாக்டர் வில்லை சுடுவதுடன் பிரச்சினை ஆரம்பிக்கின்றது. மனைவி ஈவ்லின் இறக்கும் தருவாயில் இருக்கும் வில்லின் மூளையை, சிந்தனையை, ஞாபகங்களை சுருக்கமாக கூறினால் வில்லை கம்ப்யூட்டருக்கு அப்லோட் செய்கிறாள்.

ஒரு அதி உயர் நுண்ணறிவு படைத்த ஒரு மனித மூளை கம்ப்யூட்டர் இணையவெளியில் திறந்துவிடப்பட்டால் என்ன நடக்கும்? இந்த கேள்விக்கான விடைகளே படத்தின் அடுத்தடுத்து வரும் காட்சிகளும் முடிவும்.

நவீன தொழில்நுட்ப யுகம் பெற்றிருக்கும் நானோ தொழில்நுட்பம் பற்றி இந்தத் திரைப்படம் அதிகமாக பேசுகிறது. நானோ தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு சாத்தியங்கள் இருக்கின்றன, மருத்துவத்துறை, விவசாயம், இராணுவம் என்று பல தளங்களில் இதன் கைகள் வியாப்பித்துக் கொண்டு வருகின்றது. கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களையும் கூட நானோ தொழில்நுட்பத்தின் மூலம் குணப்படுத்திவிடலாம் என்கிறது அறிவியல்.

hawking

இந்த திரைப்படத்தை முன்வைத்து ஸ்டீபன் ஹாக்கிங் கூறிய கருத்துக்களையும் சற்று நோக்குவோம். தொழில்நுட்பத்தில் Singularity (Technological Singularity) எனும் ஒரு கோட்பாடு உண்டு. அதாவது மனித நுண்ணறிவை விட அதி சக்தி படைத்த மூளையைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஒன்றினால் என்னென்ன சாத்தியங்களை செய்ய முடியும் என்பது பற்றிய கோட்பாடே அது. இது மனித நாகரீகத்தில் மிகப் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தக் கூடிய ஒன்றாக மாறிவிடும். மருத்துவம், விவசாயம் ஏன் மனித இயல்புகளையே மாற்றிவிடும் ஆற்றல் மிக்கதாக இந்த தொழில்நுட்பம் இருக்கும்.

ஏற்கனவே Artificial Intelligence களின் தன்மைகளைக் கொண்ட தொழில்நுட்ப அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றது. சில ஸ்மார்ட் போன்களும் கூட இத்தன்மைகளுடன் வடிவமைக்கப்படுகிறது. மனிதன் இதனை சீரியஸாக எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் இதன் பாதிப்புகள் படுபயங்கரமானதாகவும், மனித நாகரீகத்தின் அழிவிற்கே இட்டுச் செல்லக் கூடியதாகவும் அமைந்துவிடும் என ஸ்டீபன் ஹாக்கிங் எதிர்வு கூறுகின்றார்.

இந்த Singularity கோட்பாட்டில் உருவாகும் இயந்திரங்களால் மனித நுண்ணறிவை காட்டிலும் அதிகமாகவும், தம்மைத் தாமே மீளுருவாக்கம் (Replicate) செய்துகொள்ளவும் முடியும். பொருளாதாரம், அரசியல் நிலமைகளில் தாம் விரும்பியவாறு மாற்றங்களை நிகழ்த்தும். இவற்றை விட ஆபத்தான ஒன்று, மனிதன் விளங்கிக் கொள்ள முடியாத ஆயுதங்களை உருவாக்கவும் செய்யும். சுருங்கக் கூறின் மனிதனின் கடைசி யுத்தம் இந்த Artificial Intelligence தான் இருக்கும்.

இப்பிரச்சினைகள் எந்தளவு தூரத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரியாவிட்டாலும், ஏற்கனவே யுத்தங்களின் தன்மைகள் மாறிக்கொண்டு வருகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சரியாக இன்ன மனிதனை கொல்ல வேண்டும் என்றால் அவனது டீ.என்.ஏ மாதிரியை ஒரு ஏவுகனையின் இயங்கு தளத்தில் இணைத்து விட்டால் போதும். அது தன் வேலையை கச்சிதமாக செய்யும். மறுபக்கத்தில் அரசாங்கங்களுக்கு எதிராக இணைய யுத்தங்கங்களும் (Cyber War) நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்த திரைப்படத்தின் மூலம் இவ்விடயங்களை சற்று புரிந்துகொள்ள முடிகின்றது.

குறிப்பு: இப்படி ப்ளு ரேயில் பார்த்த படங்களுக்கெல்லாம் கட்டுரை எழுதினால் என் நிலைமை என்னாவது? என்ன பண்ண பசுபிக் ரிம் படத்துக்கு சுடச்சுட எழுத வேண்டும் என்றுதான் இருந்தேன். நம்ம நாட்டுல அதெல்லாம் போட மாட்டாங்க. கொடுமை.

Advertisements

7 comments

 1. நண்பா இந்த படம் வந்த போதே திரை அரங்கில் கண்டேன் அப்போது கான்செப்ட். மட்டும் தான் விளங்கியது அதுவும் ஜானி அப்லோட் ஆன பிறகு தேமே என்று பார்த்துவிட்டு வந்தோம் ஆனா இப்போ விளங்கிடுச்சு நன்றி.

  • நல்ல ஒரு கன்சப்டை வைத்துக் கொண்டு, மிகவும் பலவீனமான திரைக்கதையை அமைத்து இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக திரைப்படத்தை குறைகளுடன் பார்த்தாலும், சொல்லவரும் கன்சப்ட் ரொம்ப சீரியஸானது.

 2. படத்தின் பஞ்ச் டயலாக்கே, ”மனிதன் தான் புரிந்து கொள்ள முடியாத எந்த ஒரு விஷயத்தையும் கண்டு பயம் கொள்வான்”
  டாக்டர் வில்லின் உணர்வு நினைவு ஆதாரங்களை, கம்ப்யூட்டர் ப்ரோகிராமோடு இணைக்கப்பட்ட பின் வெளிப்படும் டாக்டர் வில், உண்மையிலேயே டாக்டர் வில்(லா) அல்லது கம்ப்யூட்டரின் ஆர்ட்டிபிஷியல் அறிவா என்று எழும் குழப்பத்தையே, படம் பார்க்கும் ரசிகருக்கும் ஏற்படுத்துகிறார் இயக்குனர்.
  கம்ப்யூட்டரின் ஆதார இயக்கமாக இருக்கும் டாக்டர் வில், இரண்டு விஷயங்களின் மூலமாக, தான் ஆர்ட்டிபீஷியல் இண்டலிஜென்ஸின் வெளிப்பாடு அல்ல என்று நிருபிக்கின்றார்.
  1. தான் மிகவும் விரும்பும் மனைவியுடன் இணைவதற்காக, அவர் மீண்டும் ஜானி டெப் உருவமெடுத்து வருகிறார்.
  2. அவர் செய்த அத்தனை விஷயங்களின் (நேனோ கண்டுபிடிப்புக்கள்) மூலமாக, இந்த பூமியை ஒரு Better Place-ஆக மாற்ற வேண்டும் என்ற அவர் காதலியின் ஆசையை நிறைவேற்றுகிறார்.
  ஒரே வரியில் சொல்வதானால், மனிதன் எப்போதும் முயற்சி செய்து கொண்டிருப்பது “தானும் ஒரு கடவுளாக” மாறுவதற்கு. அதை டாக்டர் வில் செய்து காட்டுகிறார்.

  • Balaji Sundar வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆம், நீங்கள் சொல்லும் கருத்துக்களைத்தான் படத்தில் சொல்லியிருக்கின்றார்கள். செயற்கை நுண்ணறிவு எந்தளவுக்கு பயங்கரமானதாக என்பதை ஸ்டீபன் ஹாகிங்ஸ் இத்திரைப்படத்தை முன்வைத்து சொன்ன கருத்துக்களின் அடிப்படையில்தான் இந்த பதிவை எழுதியிருக்கின்றேன்.

   இன்னொரு முக்கிய விடயம், தொழில்நுட்பமும் இயந்திரங்களும், நச்சு தொழிற்சாலைகளும் இல்லாமல்தான் உலகை திரும்ப ஒருமுறை நல்ல நிலைக்கு கொண்டுவர முடியும் என்பதையும் சொல்லிச் செல்கிறார் இயக்குனர். கடைசி காட்சிகளில் தொலைதொடர்பு சாதனங்கள் இயங்காது, தொழிற்சாலைகள் முடக்கப்படும்.

   • மின்சாரமில்லாமல் நாடும், தொலை தொடர்பும், தொழில் நுட்ப பொருட்களும் செயலிழப்பதற்கு காரணம், உலகளாவிய வலைத்தளத்தில்(World Wide Web) வியாபித்திருக்கும் டாக்டர் வில்-னினை கொல்வதற்காக, அரசு அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் ஒன்றினைந்து உருவாக்கும் ஒரு நேனோ வைரஸ் கொல்லி.

    திரைப்படத்தில் சில நொடிகளே வந்து செல்லும் ஒரு காட்சியில், அரசு அதிகாரி சொல்வார் “டாக்டர் வில்-ஐ முற்றிலும் அழிக்க முடியாது, ஏனெனில், அவர் வியாபித்திருப்பது உலகளாவிய வலைத்தளத்தில். உலகின் எதோ ஒரு மூலையில் இருக்கும் கம்ப்யூட்டர், சில நிமிடங்கள் இண்டர்நெட்டை தொடர்பு கொண்டிருந்தாலும், அதற்குள்ளும் டாக்டர் வில்-லின் A.I. ஒளிந்திருக்கும். தற்போது இந்த இடத்தை அழித்தாலும், உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து டாக்டர் வில் வெளிப்படுவார், அதனால் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு கம்ப்யூட்டரின் நினைவகத்தினையும் நம்மால் அழித்து ரீசெட் செய்ய முடியாது”.

    அதற்கு மற்றொரு அதிகாரி சொல்வார், ”உலகில் உள்ள அனைத்து கம்ப்யூட்டரையும் அழித்து ரீ பார்மட் செய்வது மிகவும் எளிது. அதற்காக நாம் மீண்டும் ஒரு ‘Y2K” சூழ்நிலையை உருவாக்க வேண்டும்”.

    டாக்டர் வில்-லின் வீட்டின் விட்டத்தில் இருந்து தொங்கும் ஒரு வலையில், Raspberry PI போன்ற ஒரு மைக்ரோ கம்ப்யூட்டர் சர்க்யூட் போர்ட், எந்த ஒரு வயர் இணைப்பும் இன்றி, சூரிய ஒளிபடும் இடத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். அதனுள், டாக்டர் வில்-லின் A.I.-யின் ஒரு பதிவு பத்திரமாக இருக்கலாம் என்று திரைப்படத்தினை பார்க்கும் ரசிகன் ஊகித்துக் கொள்ளட்டும் என்று டைரக்டர் விட்டிருப்பார்.

 3. டியர் O.M.A.R.,
  என்னுடைய பின்னூட்டங்களை பார்க்கும் போது, மிக நீண்ட பின்னூட்டங்களை இட்டு உங்களுடன் வாதம் புரிவது போல எனக்கே தோன்றுகிறது. எனது நோக்கம் அதுவல்ல. என்னை மன்னியுங்கள்.

  இரண்டு விஷயங்களுக்காக இங்கே வந்தேன்.
  1. இந்த படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன். இன்றும் இப்படத்தின் தாக்கம், மனதில் நிழலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
  2. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்.

  • அப்படியொன்றும் நான் தவறாக நினைக்கவில்லை. உங்கள் பின்னூட்டங்களில் மூலம் இந்த பதிவு முழுமையாக அல்லது பல விவாதங்களுக்கு நகர்த்துவதாகவே உணர்கிறேன். அது நல்லதுதானே பாலாஜி சுந்தர். 😀

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s