The Spirit of the Beehive (1973)

351_spirit_original

நீண்ட காலமக இந்தப் படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றிருந்தேன், ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை எழுதுவதற்கு சரியாக மனம் அமையவில்லை. எல்லோரும் சொல்வதுதான். திகில் சினிமா ஒன்றைப் பற்றி எழுதுவதற்கும், இம்மாதிரியான உணர்வுகளைப் பேசும் திரைமொழியை எழுதுவதற்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருக்கின்றது.

ஸ்பானிஷ் சினிமாவின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இந்த The Spirit of the Beehive (El Espíritu de la colmena) திரைப்படம் கருதப்படுகிறது. மாஸ்டர் பீஸ். படத்தைப் பார்க்கும் போது இதனை நன்றாக உணர முடிந்தது. 

1973 இல் வந்த இந்தத் திரைப்படம், ஒரு ஸ்பானிஷ் கிராமப்புற குடும்பத்தைப் பற்றி பேசுகிறது. வயதான கணவன், தேனீப் பண்ணைதான் அவன் தொழில், passion எல்லாம். அது பற்றி ஆய்வு செய்தே தன் வாழ்நாளை கழிப்பவன். தேனீக்கள் குறித்து ஒரு புத்தகத்தையும் எழுதிக் கொண்டிருக்கிறான். இளம் மனைவி, தனிமையும் ஏக்கமும் நிறைந்த பெண். தூர இருக்கும் யாரென்றே தெரியாத ஒருவனுக்கு கடிதங்கள் எழுதுகிறாள். இரண்டு சிறுமிகள், கதை இவர்களை சுற்றியே நகர்கிறது. அக்கா தங்கை.

எப்பொழுதும் போல இக்கதையின் பின்னணி அல்லது காலகட்டம் ஸ்பானிஷ் சிவில் யுத்தத்தின் போது, யுத்தம் முடியும் தருவாயில் நடைபெறுகிறது. கியேர்மோ டெல் டோரோவின் இரண்டு ஸ்பானிஷ் சிவில் யுத்தக்காலக்கட்ட திரைப்படங்களுக்கும் இதற்கும் தொடர்பு உண்டு. டெல் டோரோவிற்கு பிடித்தமான 10 திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

சினிமா, படத்தில் முக்கியப்பாத்திரமாக வருகிறது. ப்ராங்கின்ஸ்டைன் (1931), க்ளாசிக் திகில் சினிமாவின் முக்கிய படைப்புகளில் ஒன்று. Boris Karloff நடித்து வெளிவந்த இத்திரைப்படம், மன்ஸ்டர், திகில் திரைப்படங்களில் இன்றுவரை போற்றப்படுகிறது. கார்லொப் தன் வாழ்நாள் முழுதும் மன்ஸ்டர் ரோல்களிலேயே நடித்தவர். இந்தப் படத்தை அக்கால வழக்குப்படி, அந்தக் கிராமத்தில் போட்டுக் காட்ட படப்பெட்டியுடன் வருகிறது ஒரு வண்டி. இதுவே படத்தின் துவக்கம். இரண்டு சிறுமிகளும் படத்தைப் பார்க்கிறார்கள். இதில் இளையவளுக்கு படத்தில் வரும் மன்ஸ்டர் மனதிற்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

ஒரு குடும்பத்தைச் சுற்றியே கதை நடக்கிறது. ஆனால் பெரும்பாலான காட்சிகள் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றாக இருப்பதைக் காட்டுவதில்லை. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தனிமையாகவே இருக்கின்றார்கள். குடும்பத்தவர்களுக்கு இடையிலான உறவாடல்களில் இருக்கும் விரிசலை காட்சிகள் அற்புதமாக காட்டுகின்றது.

இரண்டு சிறுமிகளினதும் வாழ்க்கையை அப்படியே உள்ளபடி காட்டுகிறது. மசால சினிமாக்களின் குழந்தைகள் போல் அல்லாமல். நிஜவாழ்வில் அவர்கள் எப்படியிருப்பார்கள், அவர்களின் விளையாட்டு, தந்தையிடம் கேட்கும் கேள்விகள், மூத்தவளின் வளர்ச்சி… ஒரு கட்டத்தில் சின்னவளை விட்டு விலகிச் செல்கிறாள் மூத்தச் சிறுமி. வயதிலும், உடலிலும், உள்ளத்திலும் ஏற்படும் மாற்றத்தை அற்புதமாக ஒரேயொரு காட்சியின் மூலம் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர். இந்த மாதிரியான கட்டங்கள்தான் ஒரு சினிமாவின் காவியத் தருணங்களாக மாறுகின்றன.

தேனீக்களும், கலான்களும், மன்ஸ்டர் சினிமாவின் மன்ஸ்டரும் திரைப்படத்தின் கதைக் கூறுகளாக பரிணமித்துக் காணப்படுகின்றது. மிகவும் ஆழமான கதை, ஆனால் மிகவும் எளிமையாகவும், அழகியலுடனும் சொல்லப்பட்டிருக்கின்றது.

spirit-of-the-beehive

இளம் சிறுமியின் அமானுஷ்ய நம்பிக்கைகள், அவளை சுற்றி நடக்கும் காட்சிகளில் அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கிணற்றைச் சுற்றிச் சுற்றி யாருடனோ பேசும் காட்சி இதற்கொரு உதாரணம். அவள் படத்தில் புன்னகைக்கும் ஒரேயொரு காட்சி, ஆழமானது.

படத்தை இயக்கியவர்  Victor Erice. இது இவரது முதல் திரைப்படம். மட்டுமல்லாமல் இதுவரைக்கும் மொத்தம் நான்கு திரைப்படங்களே இயக்கியுள்ளார். அதனால்தானோ என்னவோ, இந்தப்படம் இப்படியொரு அற்புதக் காவியமாக இருக்கின்றது. 

மேற்கொண்டு பேச எதுவும் இல்லை, ஆர்மிருந்தால் படத்தைப் பார்த்து அனுபவித்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு: இந்தப் படத்தைப் பற்றி அறிந்து கொண்டது கியேர்மோ டெல் டோரோவிற்கு பிடித்தமான படங்களைப் பற்றி தேடிக் கொண்டிருந்த போதே. அதனால் தலைவருக்கு நன்றி.

Advertisements

5 comments

  1. படிச்சுட்டு வரப்போ டெல் அவருக்கு பிடிச்சுருக்குனா உங்களுக்கு பிடிச்சிடும் போல என்று நினைத்து கொண்டு வந்தா , நீங்களே அவருக்கு பிடிச்சத தேடி போய் தான் பார்க்குறீங்க போல சூப்பர். படத்தின் கதையை விவரித்தவை ஆவலை தூண்டுகிறது.

    குறிப்பாக //இரண்டு சிறுமிகளினதும் வாழ்க்கையை அப்படியே உள்ளபடி காட்டுகிறது. மசால சினிமாக்களின் குழந்தைகள் போல் அல்லாமல். நிஜவாழ்வில் அவர்கள் எப்படியிருப்பார்கள், அவர்களின் விளையாட்டு, தந்தையிடம் கேட்கும் கேள்விகள், மூத்தவளின் வளர்ச்சி… ஒரு கட்டத்தில் சின்னவளை விட்டு விலகிச் செல்கிறாள் மூத்தச் சிறுமி. வயதிலும், உடலிலும், உள்ளத்திலும் ஏற்படும் மாற்றத்தை அற்புதமாக ஒரேயொரு காட்சியின் மூலம் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர். இந்த மாதிரியான கட்டங்கள்தான் ஒரு சினிமாவின் காவியத் தருணங்களாக மாறுகின்றன.//

    இதுக்காகவே பார்க்கணும் நண்பா

    • கண்டிப்பா, இம்மாதிரியான படங்களை எழுத்தில் படிப்பதை விட பார்த்து அனுபவிப்பதே சிறந்தது. அது தவிர மிகவும் கொஞ்சம்தான் இங்கு எழுதியிருப்பது.

  2. அருமை, கதையின் குறிப்புகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன். பரிந்துறைக்கு நன்றி. உங்களுக்கும் உங்களின் மூலமாக டெல் டோரோவிற்கும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s