தொன்மங்களின் கதைசொல்லி

Samuel-Ho-Pans

கியர்மோ டெல் டோரோ. இந்தப் பெயரில் என்னதான் மாய மந்திரங்கள் ஒளிந்து இருக்கின்றதோ தெரியவில்லை. இருண்ட வனத்தினுள் அலைந்து திரியும் ஒரு அரூப சூனியக்காரனுடைய வித்தைகளை கற்றுத் தேர்ந்தவன் இவன். தொன்மங்களின் கதைசொல்லி. அது என்ன தொன்மங்களின் கதைசொல்லி? ஒரு வேலை இந்த எண்ணவோட்டங்களின் முடிவில் அதற்கான முழு அர்த்தமும் துலங்கலாம்.

கதைகளின் மீதான ஈர்ப்பு தோன்றிய அக்கணம் முதற்கொண்டே, பயத்தின் புனைவுகளே என்னை ஆக்கிரமித்துக் கொண்டன. வீட்டில் உம்மா சொன்ன கதைகளும் சரி, கதைகள் கேட்டு ஒவ்வொரு திண்ணைகளிலும் உட்கார்ந்து காத்திருந்த பொழுதுகளிலும் சரி, அச்சமும் திகிலும் சேர்ந்து எழுதும் கதையுலகே என்னைச் சூழ்ந்து கொண்டன. மனித உணர்வுகளில் ஆதார உணர்வு பயம். ஆதி மனித ஓவியங்களில் இருந்து நாம் பெரும் அனுபவம் பயத்தின் விளைவில் தோன்றியதே.

ஒவ்வொரு சமூகமும் தனக்கான கதைகளை சுமந்து கொண்டுதான் திரிகின்றன. காலப் போக்கில் அது மறக்கடிக்கப்பட்டு, நகரமயமாக்கலில் அமிழ்ந்து விடுகின்றன. தொன்மம், நாட்டாரியல் மரபுகளில் புதைந்து இருக்கும் எண்ணற்ற கதைகள் பற்றி எழுதினால், உலகில் இருக்கும் காகிதங்கள் அத்தனையும் தீர்ந்துவிடும். ஆதி மனிதன், ஒவ்வொன்றுக்கும் கதைகளை வைத்திருந்தான். பிரபஞ்ச தோற்றம், மனிதனின் படைப்பு, மரங்கள், நெருப்பு, மழை, மலை, வானம், நட்சத்திரங்கள், நட்சத்திரக் கூட்டங்கள், கடல் எல்லா நிகழ்வுகளுக்கும், எல்லா பௌதீக அம்சங்களுக்கும் ஆதி மனிதன் கதைகளை கூறியே விளக்கினான். காலம் செல்லச் செல்ல, ஒவ்வொரு கோத்திர, நாகரீகங்களின் வளர்ச்சிக்கேற்ப கதைகளும் வளர்ந்துச் சென்றது. இவற்றின் அடியே தொன்மங்களும், நாட்டார் மரபுக் கதைகளும் தோற்றம் பெற்றன.

இறை வேதங்களும் கதைகள சுமந்து கொண்டே வந்திருக்கின்றன. இறைவன் மனிதனுக்கு ஒரு படிப்பினையை புகட்ட கதைகளை தேர்ந்தெடுத்தான். வரலாற்றுச் சம்பவங்களைக் கொண்டு அவன் மனிதனுக்குள் சிந்தனைகளை விதைத்தான். குகைவாசிகளின் கதை சிறந்த ஓர் உதாரணம். அல்லது நூஹ் நபியின் கதை.

தொன்மங்களிலும் நாட்டார் மரபுக் கதைகளிலும் எப்பொழுதும் கதைசொல்லிக்கு தனியான மதிப்பும், கௌரவமும் இருந்து வந்திருக்கின்றது. ஆயிரம் இரவுகளும் ஓர் இரவும், அரேபிய நாட்டார் மரபுக் கதைகளின் தொகுப்பில் வரும் ஷெஹர்ஸாதின் கதைசொல்லி பாத்திரம் காலம் கடந்து இன்றும் ஒரு உருவகமாக நிலைத்து நிற்கின்றது. பழங்குடி சமூக அமைப்புகளில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அமர்ந்து கதைகளும், கதைப்பாடலும் சொல்லி மகிழ்வார்கள். இது வெறுமனே பொழுதுபோக்கு, அல்லது களிப்பூட்டும் நிகழ்வுகள் அல்ல. இது அவர்களின் வாழ்வியலுடன் பிணைந்து இருக்கும் ஒன்று.

மேல்தட்டிலிருந்து கதைசொல்லுதல், அல்லது வரலாறு எழுதுதல் போன்ற செயற்பாடுகளில் அதிகாரமே மிகைத்து காணப்படும். மாறாக கீழிருந்து கூறப்படும் கதைகள் அவ்வாறு இருக்காது, அது அரசர்களை கொண்டாட மாட்டாது. அது மனிதர்களின் கதை. வனத்தின் கதை. ஜீவராசிகளின் கதை. சிங்கமும் குதிரையும் கலந்த தொன்ம உயிரினங்களை வாசிப்பதன் மூலம், அன்றைய மனித மனத்தின் எண்ணவோட்டங்களை அறிந்துகொள்ளலாம். இன்றைய வரலாற்றாய்வாளர்கள், மானுடவியலாளர்கள் எல்லோரும் இந்த “writing history from below” என்ற கோட்பாட்டை முன்னிறுத்தியே பேசுகிறார்கள். வரலாற்றை மீளெழுதும் போது, மீண்டுமொருமுறை பழைய தவறை செய்யாமல் அடிமட்டத்தில் இருந்து எழுதுதல் வேண்டும்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதில் வெற்றிடமாக உள்ள காலகட்டங்களும், இடையில் உடைந்து போகும் சங்கிலித் தொடர்களும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த இடைவெளிகளை எங்கனம் நிரப்ப முடியும்? தொன்ம, நாட்டார் மரபுக் கதைகளில் இருந்தே இவற்றுக்கான தடங்களை தேட வேண்டும்.

எங்கே போய்க் கொண்டிருக்கிறேன்? கியர்மோ டெல் டோரோ அப்படியான ஒரு கதைசொல்லிதான். பதிப்பிக்கப்படாத புத்தகங்களிலும், பழம் மரபுகளிலும், அழிவின் விழிம்பில் நின்று கொண்டிருக்கும் கதைகளை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தியவன். ப்ராம் ஸ்டோகரின் டிராகுலாவைத்தான் உலகம் வெம்பயர் என்று எண்ணிக் கொண்டிருந்த வேலை, பண்டைய வரலாற்றையெல்லாம் தோண்டி தேடி தொன்ம உயிரினமான வெம்பயரை கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்தான். டிஸ்னியின் fairy tales, நவீன காலத்திற்கு ஏற்ப மீள்புனைவு செய்யப்பட்டது. ஆனால், Pan’s Labyrinth இல் உள்ள ஜீவராசிகள், அவற்றின் தோற்றத்திற்கே சென்று அழைத்துவரப்பட்டவை. ஹெல்பாயின் மன்ஸ்டர்களும், உயிரினங்களும் தொன்ம புத்தகங்களில் மாத்திரம்தான் உலாவந்து கொண்டிருந்தன. டெல் டோரோ ஒரு தொன்மங்களில் கதைசொல்லி.

பேய்கதைகளும், தொன்மங்களும், நாட்டார் மரபுக் கதைகளும் எமது சூழலிலும் நிறைந்து காணப்படுகின்றன. அவை அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. எமது மரபிலிருந்து மீள்புனைவு செய்யப்பட வேண்டியவை ஏராளம். தொன்மங்களின் கதைசொல்லிக்காக காத்துக்கொண்டிருக்கும் இந்தக் கதைகள். எப்போதும்.

பயணம் தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s