The Host: மன்ஸ்டர்

Concept-Art-Federico-Scarbini-Sewer-Dwelling-Monster1

முன்பெல்லாம், இணையம் இல்லாத காலங்களில் தியேட்டர்களில்தான் படம் பார்ப்பது, இப்பொழுதும்தான். ஆனால், அந்த நேரங்களில் எல்லாப் படங்களும் இங்கு வருவதில்லை. இப்போ மட்டும் என்ன வாழுதாம். வீடியோ சென்டர்தான் அன்றைய சினிமாவுக்கான வடிகால். போஸ்டர்களை பார்த்துதான் படங்களை வாடகைக்கு எடுப்பது.  அதாவது ஏமாறுவது. இணைய வசதி இருப்பதால் இப்போது, போஸ்டரை பார்த்து ஏமாறுவது குறைவு. அப்பவும், இந்த போஸ்டர் செய்யும் கலைஞர்கள் நம்மை ஏமாற்றிவிடுவார்கள். சினிமா போஸ்டர் என்பதே ஒரு தனிக் கலைதான்.

போஸ்டர்களில் ஹாரர், இந்த வகைதான் எப்பவும் ஈர்க்கும். வீடியோ சென்டர் போய், படத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இல்லாவிட்டால் போஸ்டரைக் காட்டி “இந்த படம் இருக்கா? கேஸட்தான் வேணும்”. சீ.டிக்கள் அந்தநேரம் அவ்வளவு பரவலாகவில்லை, வீடியோ கேஸட்டுகள் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது எங்களுக்கு தெரியவில்லை. முப்பது ரூபாய் என நினைக்கிறேன் வாடகைக்கு. ஒரு நாள்தான். பார்த்துவிட்டு கொடுத்துவிட வேண்டும். தெரிந்தவர் என்பதால் தே.அ. அட்டையை வைக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. (இவருக்கு அந்த டைம்ல தே.அ. அட்டை இருக்கவே இல்லை) மன்ஸ்டர் திரைப்படங்கள் அல்லது ஹாரர் திரைப்படங்கள் இரண்டில் ஒன்று.  Action திரைப்படங்கள் அப்பவும் சரி, இப்பவும் சரி என்னை அவ்வளவாக கவர்ந்ததில்லை. ஒருசில விதிவிலக்குகளைத் தவிர.  Action என்றால் அர்னால்ட்தானே, அப்படி லேட்டாக பார்த்து அடக்கறுமமே இதையா பார்க்க தவறிவிட்டோம், என்று அங்கலாய்த்த திரைப்படம் Predator. நண்பர்களுக்கு ஆங்கிலப்பட அறிவு என்பது, இரும்பு மனிதன் – ஈய மனிதன் (Terminator 2), சுட்டா பச்ச இரத்தம் (Predator), டிராகுலா படம் (எல்லாப் பேய்படங்களும்), மிருக படம் (எல்லா மன்ஸ்டர் படங்களும்) என்ற ரேஞ்சில்தான் இருந்தது. இதனாலேயே பல படங்களை மிஸ் பண்ணி இருக்கேன். அன்றைய கால தமிழ் படங்கள் பார்த்ததாகவே ஞாபகம் இல்லை, அந்தளவுக்கு திகிலும் – மன்ஸ்டர்களும் என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.

இப்படியாக பார்த்த சில மன்ஸ்டர் படங்களை நினைவூட்டினால், Tremors, Predator, Anaconda (ட்ரைலரில் இந்த வார்த்தையை Narrator உச்சரிக்கும் போது புல்லரிக்கும்), Jason and the Argonauts, Lake Placid, அன்றும் இன்றும் என்றும் Jurassic Park, Jaws, Spiders, Godzilla (Size Does Matter) இன்னும் நிறைய பெயர் மறந்து போன மன்ஸ்டர் திரைப்படங்கள், Mockbusters எனப்படும் படத்துக்கு படம் (உதாரணமாக அனகொண்டா 3,4,5… 9 என்று வந்து கொண்டே இருக்கும்) என்று ஏராளமாக இருந்தும் அவசரத்துக்கு ஒன்றையும் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. படப் பெயர் மனனமிடுவதில்லை என்னை அடித்துக் கொள்ள யாரும் இருக்கவில்லை, அந்தநேரம். (இதுக்கு கணக்குல நாலு வாய்பாட்ட பாடமாக்கி இருக்கலாம்)

The_Host02

சமகால “உலக” சினிமாவில், வில்லன்களை (antagonist) எடுத்துக் கொண்டால், ஹை-டெக், கம்ப்யூட்டர் ஹெக்கர், வைரஸ், எதிர்கால தொழில்நுட்பம் இப்படி பலவாறு நமது “அதி உயர் தர மூளை” கிரகிக்கக்கூடிய விதத்தில், எல்லா லாஜிக்கல் ஓட்டைகளையும் முடியுமான அளவு காரண காரியங்களோடு அடைத்து விடும் அளவுக்கு தயார் செய்கிறார்கள். இன்றைய சமூகம் “காதுல பூ” ரகங்களை ஜஸ்ட் லைக் தாட் என்று tweet பண்ணி காலி செய்துவிடுவார்கள். பழைய franchise திரைப்படங்கள் கூட இன்றை யுகத்தில் தாக்குபிடிக்கும் அளவுக்கு ஹை-டெக் மூலாம் பூசி வருகின்றன. Die Hard திரைப்படம் இதற்கு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். இந்த இடத்தில் இடைச்செறுகலாக சொல்லிக் கொள்ள ஒன்று, என்னதான் அதி-உயர் தொழில்நுட்ப அறிவு இருந்தாலும்… அன்றைய 2001: A Space Odyssey, Blade Runner, Terminator ஏன் Fritz Lang இன் Metropolis ஐக் கூட தாண்டும் ஒரு படைப்பை இன்றைய சினிமா கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இங்கே, விஞ்ஞான புனைவு சார்ந்த படங்களை மாத்திரமே எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

80களின் விஞ்ஞான புனைவு (Sci-Fi) சினிமாக்களின் details, characterization முக்கியமா கதை இன்றைய திரைப்படங்களில் கவனம் செலுத்தப்படாத ஒன்றாகவே இருக்கின்றது. இது ஹாலிவூடுக்கு மாத்திரம்தான் பொறுந்தும். என்ன காரணம் என்று யோசிக்கும் போது, இன்றைய அவசர யுகம் அவசர முடிவுகளை எதிர்பார்க்கிறது. மூன்று அங்க (Three – Act) கதைசொல்லல், ஒன்றரை அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்குள் கதையைக் கொன்றுவிட வேண்டும் என்ற விதியை வலுக்கட்டாயமாக திணித்துள்ளது. இன்றைய இயக்குனர்களில் பெரும்பாலானவர்கள், இதற்கு பழக்கப்பட்டு விட்டார்கள். அதிலும் தங்கள் திறமையை, ஆற்றலை வெளிப்படுத்தும் இயக்குனர்கள் இல்லாமல் இல்லை. இன்றும் கூட இந்த வகைப் படங்களில் Steven Spielberg, Christopher Nolan, Ridley Scott,  போன்றவர்களை விற்பன்னர்கள் என்று சொல்லலாம்.

விஞ்ஞான புனைவுத் திரைப்படங்களுக்குள் பல வகைகள் இருக்கின்றது. இல்லாவிட்டால், பல்வேறு வகைமை (Genre) க்களை ஒன்றிணைத்து விஞ்ஞான புனைவுத் திரைப்படங்கள் வருகின்றன. உதாரணமாக, Guillermo del Toro வின் Mimic, விஞ்ஞான புனைவு மற்றும் ஹாரர், இரண்டு வகைமைக்குள்ளும் அடங்கும். மிமிக், ஒரு மன்ஸ்டர் திரைப்படம். விஞ்ஞானத்தின் குழறுபடியால் ஏற்படும் விகாரமடைதல் (Mutation) மூலம், புதிய ராட்சத பூச்சியினங்கள் தோன்றிவிடுகின்றன. இவ்வகை விஞ்ஞான புனைவுத் திரைப்படங்களில், antagonist இவ்வாறுதான் தோன்றுகிறது. விபரீத விளைவு படத்தின் வில்லனாக மாறுகிறது.

d9f716b0656debc418ec09a9aeaeb038

மன்ஸ்டர் திரைப்படங்கள். சினிமாவின் தோற்றம் முதற்கொண்டு இவ்வகை திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. மன்ஸ்டர் திரைப்படங்களை (Monster Movies), விஞ்ஞானப் புனைவு, பென்டஸி, ஹாரர் வகை திரைப்படங்களில் சேர்க்கலாம். பொதுவாக, பழங்கதைகளில் இருந்துதான் இந்த மன்ஸ்டர்கள் சினிமாவுக்குள்ளும் இன்னபிற இலக்கியங்களுக்குள்ளும் புகுந்தன. தொன்மங்களிலும், நாட்டார் மரபுகளிலும் இந்த மன்ஸ்டர்கள் (மொழிபெயர்ப்பில் மன்ஸ்டர் கொடுக்கும் முழு அர்த்தத்தை கொண்டு வரமுடியாது, அதனால் மன்ஸ்டர் என்றே இங்கு பாவிக்கப்படுகிறது) அலைந்து திரிந்து கொண்டு இருந்திருக்கின்றன. அழகிய “அப்பாவி” இளவரசியைக் கடத்திச் செல்லும் டிராகன்கள், ஒற்றைக் கண் அரக்கன் (Cyclops), தொன்மக் கதைகளில் வரும் உயிரிகள், வெம்பயர்கள், வெர்வூல்ப்கள், இன்னும் உண்மை – கட்டுக்கதை இரண்டிற்கும் நடுவில் ஊடாடும், பனிமனிதன், லொக் நெச் மன்ஸ்டர் என்று மன்ஸ்டர்கள் வரிசை நீண்டு கொண்டே செல்லும். இந்திய புராண மரபில் இருக்கும் அரக்கர்களும் இதில் அடக்கம்.

மன்ஸ்டர் திரைப்படங்களின் ஹாலிவூட் என்றால் அது ஜப்பான்தான். கைஜு என்ற சொல், விசித்திர பிராணி அல்லது மன்ஸ்டர் என அழைக்கப்படும். ஜப்பானிய, நாட்டார் மரபுகளில் பிரபல்யமான ஒரு மன்டர்தான் டிராகன். உலகில் பல பாகங்களிலும் டிராகன் இருக்கின்றன. ஆனால் டிராகன் என்றாலே ஜப்பான், சீனா போன்ற நாடுகள்தான் ஞாபகத்துக்கு வரும்.

ஏனைய antagonist களைப் போல் அல்லாமல், மன்ஸ்டர்களின் நோக்கம் எதிரியை அழித்தல் என்று இருக்காது. அப்படியானால், ஏன் நிவ் யோர்க் நகரை நிர்மூலமாக்குகின்றது? அது பெர்சனல் ப்ராப்லம். அதில் நமக்கு தலையிட முடியாது. மன்ஸ்டர்கள், forces of nature (Pacific Rim) அல்லது விஞ்ஞானத்தின் விபரீதம் (Mimic) அல்லது ஒரு நியதி (Wolfman). அதென்ன நியதி, அப்படியான மன்ஸ்டர்களுக்கு அழித்தல் என்பது ஒரு நியதி. ஒன்றும் பண்ண முடியாது.

Monsters வில்லன்களாகவும் இருக்கலாம் அல்லது மனித அழிவுக் கரங்களின் விளைவாகவும் இருக்கலாம். கைஜுக்கள், அணு ஆயுதத்தின் விளைவின் உருவகமாக சித்தரிக்கப்படுகிறது. கொஜிரா அல்லது காட்ஸில்லா, (மறந்துவிட்டது) அணுஉலைகளை உணவாகக் கொள்ளும். அதாவது அணுஉற்பத்தி நிலையங்களை நிர்மூலமாக்கி விட்டுச் செல்லும். இது நண்பனுமில்லை, எதிரியுமில்லை, ஆனால் மனிதன் செய்த அழிவை நினைவூட்ட வரும் ஒரு உருவகம். ஜப்பானிய, ஹிரோஷிமாவின் வடுவாகக் கூட இதை உருவகப்படுத்தலாம். இங்கு காட்சில்லா படத்தின் ஆரம்பக் காட்சியை நினைவுறுத்திக் கொள்ளுங்கள். அது அணு குண்டு வெடிப்பின் மூலம் Mutation அடைந்த ஒரு கடல் பல்லியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். ரோலன்ட் எமரிக்கின் காட்சில்லாவில், காட்சில்லாவைத் தவிர ஒன்றும் பிடிக்கவில்லை. சுத்த அமெரிக்கத்தனம். ஜப்பானிய கைஜுவை ஹாலிவூட்படுத்திவிட்டார்கள். அந்தவகையில் கியேர்மோ டெல் டோரோவின் பசுபிக் ரிம் இந்த அமெரிக்க தனங்கள் அற்ற படைப்பாகக் கருதலாம்.

The_Host_-_Gwoemul_-_tt0468492_-_usa_2006

The Host – Goemul அதாவது மன்ஸ்டர். இது 2006 இல் வெளிவந்த தென்கொரியத் திரைப்படம். Memories of Murder, Snowpriecer போன்ற அட்டகாசமான படங்களை எடுத்த Bong Joon-ho வினால் எடுக்கப்பட்ட மன்ஸ்டர் ப்ளஸ் அரசியல் பகிடித் திரைப்படம்.

செய்திப்பத்திரிகைகளில் அடிக்கடி வரும் விடயம்தான், புதிய விநோத உயிரினங்கள் பற்றிய செய்திகள். பத்திரிகை தருமத்தில், இம்மாதிரியான “ஆச்சரியக் குறி” செய்திகள் பக்கத்தை நிறைக்க பயன்படுத்துவதும் உண்டு. அப்படியானதொரு மீனினம் பற்றிய செய்திக் குறிப்பை பார்த்ததும் இயக்குனருக்கு பொறி தட்டியிருக்கிறது. பின்னர் கதையாக உருவெடுத்து வசூலில் சரித்திரமும் படைத்தது. நல்லவேளை அவர் இலங்கையில் பிறந்திருக்கவில்லை, இருந்திருந்தால் என்னைப் போன்று இப்படி கிறுக்கிக் கொண்டிருப்பார். தென் கொரிய திரைப்பட வரலாற்றிலேயே அதிக வசூல் எடுத்து சாதனை படைத்த திரைப்படமிது. ஒரு திரைப்படத்தின் வசூலை வைத்து அதன் தரத்தை அளவிட முடியாது. வசூலில் மாத்திரம் அல்லாமல், திரைப்பட விமர்சகர்கள் மற்றும் பல திரைப்பட விழாக்களில் பாராட்டுகளையும் விருதுகளையும் வென்று குவித்தது இத்திரைப்படம். ஒரு கமர்ஷியல் மன்ஸ்டர் திரைப்படத்துக்கு இவ்வளவு விருதுகள், critical பாராட்டுக்களா? என்று கேட்பது தெரிகிறது. கதைக்கு வருவோம்.

கதை நடப்பது 2000 ஆம் ஆண்டில். அமெரிக்க இராணுவ ஆய்வு மையம் ஒன்று சட்டவிரோதமாக இரசாயண கழிவுகளை (formaldehyde) Han River இல் dump செய்கிறது. அடுத்த வரும் வருடங்களில், விநோத பிராணியொன்றைப் பற்றிய செய்திகள் உலாவருகின்றன. கூடவே, ஹான் ஆற்றின் நீரும் மாசுபட்டு மீன்கள் செத்துமடிகின்றன அல்லது குறைந்து கொண்டு வருகின்றன. படத்தின் துவக்கத்தில் தற்கொலை செய்துகொள்ளும் ஒரு தொழில் அதிபர், ஆற்றில் குதிக்க முன்னர் அந்த பிராணியைக் காண்கிறார். குதித்தும் விடுகிறார். செத்த கதை, அதனால் அந்த மிருகத்துக்கு மனித உருசி பட்டு இருக்கும். (இது நான் ஊகித்தது… ஹி ஹி)

இந்த 2000 ஆம் ஆண்டு சங்கதி, உண்மையில் தென்கொரியாவில் நடந்த ஒரு அரசியல் பிரச்சினை. சட்டவிரோதமான கழிவகற்றல், போராட்டம் எல்லாம் உண்மையாக நடந்த பிரச்சினைகள். இந்த பின்னணியில் தனது கதைக் களத்தை எடுத்துக் கொண்டு, காட்டமான அரசியல் விமர்சனத்தை முன்வைக்கிறார் இயக்குனர் Bong Joon-ho. (இவரது சமீபத்திய படமான Snowpricer உம் அரசியல் திரைப்படம்தான்) ஒரு கமர்ஷியல் திரைப்படத்திற்கேயுரிய அம்சங்களுடன், சீரியஸ் அரசியல் விமர்சனங்களையும் முன்வைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தால் இத்திரைப்படத்தைப் பாருங்கள்.

பொதுவாக இம்மாதிரியான பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படங்களில், மன்ஸ்டரை அழிக்க, அமெரிக்க இராணுவம் தனது “அதி உயர் தொழில்நுட்ப ஆயுத தளபாடங்களை” தம்பட்டம் அடித்து பறைசாற்றியபடி, இதோ பார் இதோ பார், என்று காட்டிக் காட்டி விளம்பரப்படுத்தும். ஆனால், இத்திரைப்படத்தில் அவ்வாறு அல்ல. (ஓ… இது அமெரிக்க திரைப்படம் அல்லவே)

இந்த விநோத amphibious (Amphibian – ஈரூடக வாழி) மன்ஸ்டரால் காவு கொண்டு செல்லப்பட்ட தனது மகளை மீட்க, குடும்பம் சகிதம் அங்கும் இங்கும் அலைந்து தடுமாறும் சாதாரண மனிதர்ளைப் பாத்திரங்களாக வைத்தே கதை நகர்த்திச் செல்லப்படுகிறது. இந்த அல்லாட்டத்தில், அரசியல் காரணங்களுக்காக அலைக்கழிக்கப்படும் மக்கள், ஊடகங்களின் இரட்டை நிலை, அமெரிக்க இராணுவத்தின் மொன்னைத்தனங்கள் என்று முன்வைக்கப்படும் விமர்சனங்கள், படத்தில் இயல்பாகவே காட்டப்படுகிறது.

Amphibian – ஈரூடக வாழி, இந்த மன்ஸ்டர் நீர் மற்றும் நிழத்தில் வாழ முடியும். மனிதர்களை தூக்கிச் சென்று அதன் இருப்பிடத்தில் வைத்து வேளாவேளைக்கு சாப்பிடுகிறது. ஈரூடக வாழிக்கு ஏற்ற விதத்தில் இதன் உடலமைப்பு concept artists களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது Silurian யுகத்தைச் சேர்ந்த உயிரினங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கலாம். அப்படித்தான் விளங்குகிறது.

இந்த மன்ஸ்டர் பற்றி குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயங்கள் நிறைய இருக்கின்றது, ஒன்று ஏனைய மன்ஸ்டர் படங்களில், மன்ஸ்டரின் முழுத்தோற்றமும் தெரிய படத்தில் முக்கால்வாசி நேரம் வரை காத்திருக்க வேண்டும். இத்திரைப்படத்தில் அப்படியில்லை, படத்தின் ஆரம்பத்திலேயே அது விளங்கிவிடுகிறது. அடுத்தது, கிட்டத்தட்ட எல்லா மன்ஸ்டர் திரைப்படங்களும் இரவில்தான் எடுக்கப்படுகின்றது. அதற்கான காரணங்களில் ஒன்று CGI ஓட்டைகள் விளங்கி மண்ணைக் கவ்விவிடுவது. இத்திரைப்படத்தில் இதனை தைரியமாக சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். பட்டப் பகலிலேயே மன்ஸ்டர் தென்படுகிறது. அது படத்துக்கு ஒரு “யதார்த்தத் தன்மையை” வழங்குகிறது. இன்னொரு விடயம், ராட்சத சைஸில் இந்த மன்ஸ்டர் இல்லை. ஜிம்னாஸ்டிக் வேறு செய்கிறது. அதற்கேற்ற உடலமைப்பு. This is not a perfect kind of monster, which is why it’s so perfect. இயக்குனர் Bong Joon-ho, இந்த மன்ஸ்டர் தனித்துவமானதாகவும், அதேநேரம் அதிகம் பென்டஸி தனங்கள் இல்லாததாக இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார்.

இரசாயண கழிவுகள், உண்மையில் இப்படியான மன்ஸ்டர்களை உருவாக்குகிறதோ இல்லையோ, நீர் வளத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும். இம்மாதிரியான இரசாயணக் கழிவுகள், உயிரினங்கள் Mutation அடையக் காரணமாகவும் இருக்கின்றன. இவற்றை செய்திக்குறிப்புகளில் படிக்கும் போது கண்டுகொள்ளலாம்.

Advertisements

One comment

  1. எனக்கு மிகவும் பிடித்த படம் மெமொரீஸ் ஒப் மர்டர்ஸ் அதன் இயக்குனர் என்றால் நிச்சயம் பார்த்துவிட வேண்டும். உங்களின் விமர்சனத்தை வைத்துகொண்டு சப்டைட்டில் இல்லாமலேயே பார்த்துவிடலாம் போல நண்பா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s