Trick ‘r Treat கொலை கொலையாம் காரணமாம்!

trick_r_treat

கொஞ்ச நாளாக Back to Form என்று சொல்வாங்களே… அப்படி தொடர்ந்து திகில் படங்களை பார்த்து வருகிறேன். ஒவ்வொன்றைப் பற்றியும் “ஆய்வுக் கட்டுரை” எழுத வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், ஒரு முக்கால் சோம்பேறிக்கு இந்த ஆசையெல்லாம் இருக்கக் கூடாது. இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழலாம்? இதுக்கு முந்தி இவர் திகில் படமே பார்த்ததில்லை போல. பார்ப்பதெல்லாம் திகில் திகிலைத் தவிர வேறில்லை என்று ஊர் உலகம் நம்புது. என்ன பண்ண எல்லா விடயங்களிலும் ஸ்பெஷலிஸ்ட்டுகள் தேவை. வௌவாலுக்கு வாக்கப்பட்ட தொங்கித்தான் ஆவனும், மாதிரி, திகில் என் அடையாளமாகிவிட்டது. வௌவாலே திகிலின் குறியீடுதானே.

இதற்கு முன்னர் இரண்டு anthology படங்கள் பற்றி பேசியிருக்கிறோம். ஒன்று, Kwaidan – ஜப்பானிய பேய்கதைகளின் தொகுப்பு, அடுத்தது, Dark Tales of Japan. அந்த வரிசையில் Trick ‘r Treat (2007) உம் சேரும். இதுவும் ஒரு கதைக்களஞ்சியம்தான் என்றாலும், ஒவ்வொரு கதையையும் இணைத்துச் செல்ல Sam (Samhain) என்ற பாத்திரம் வருகிறது. இந்த பாத்திரத்தை பற்றி பிறகு வருகிறேன்.

Halloween என்ற பண்டிகை பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்கிறேன். இது உலகமெங்கும் ஜாலியாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. ஆக்டோபர் 31 இல் கொண்டாடப்பட்டாலும், கிட்டத்தட்ட ஒருவாரத்துக்கு இருக்கும் இதன் நிகழ்வுகள். சம்ஹைன் என்ற Gaelic (கோல் என்றா உச்சரிப்பது) பண்டிகையை ஒட்டியே இது தோன்றியிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலப்போக்கில் கிறிஸ்தவம் இப்பண்டிகையை தனதாக்கிக் கொண்டது. இப்போது அது மதசார்பின்மையுடன் (ஙே) கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால், இலங்கை நாட்டில் பொருளாதார பிரச்சினை பிசாசு மாதிரி தலைவிரித்தாடும் போது கூட தறுதலை பசங்க இதனை கொண்டாடி மகிழ்கின்றனர். ஹ்ம் கலாசாரம்.

இதுவொரு Pagan (சிறுதெய்வ வழிபாடு, பழங்குடிகளின் நம்பிக்கை…) நம்பிக்கைகளின் அடிப்படையில் தோன்றிய பண்டிகை. கிறிஸ்துவத்தின் வருகைக்கு முன்பிருந்தே இது இருக்கின்றது. விவசாயத்துடன் சம்பந்தப்பட்டது இது. அதான், Scarecrow உடையில் எல்லாம் வருவார்கள் போலும். இந்த விவசாயப் பின்னணியில் நிறைய திகில் கதைகள், திரைப்படங்கள் இருக்கின்றன. முக்கியமா சோளப் பயிர்ச்செய்கை. Children of Corn ஒரு உதாரணம்.

TRICK_R_TREAT_by_MalevolentNate

இப்பண்டிகையின் சட்டத்திட்டங்கள், அதாவது நம்பிக்கைகள் நிறைய உண்டு. வீடுகளில் பெரிய வட்டக்கா (பூசணி) மூஞ்சி செய்து அதில் மெழுவர்த்தி ஏற்றி வைப்பது, பேய்கள் மாதிரி உடை அணிந்து அலைவது, ட்ரீட் கேட்டுச் செல்வது… ட்ரீட். ட்ரிக் ஆர் ட்ரீட்… ஒன்று இனிப்பு ஏதும் வழங்க வேண்டும் இல்லை பயமுறுத்த வேண்டும், இல்லாவிட்டால் கொன்னேபுடுவான் இந்த சாம்.

இத்திரைப்படத்தில் நான்கு கதைகள் உண்டு. ஒவ்வொன்றும் Halloween பண்டிகையில் சொல்லப்படும் கதைகள். ஒவ்வொன்றும் குறும்படங்களுக்கேயுரிய கதைகள். அவற்றை தனிப் படமாக கொண்டுவருவதைக் காட்டிலும் இப்படியொறு தொகுப்பாக வெளியிடுவதுதான் புத்திசாலித்தனம். படத்தின் இயக்குனர் Michael Dougherty ஏற்னவே Season’s Greetings என்ற குறும்படத்தை (2D Animation) எடுத்துள்ளார். அதில் அவர் உருவாக்கிய பாத்திரம்தான் Sam. அந்த பாத்திரத்தை இத்திரைப்படத்தின் கதைகளை ஒன்றிணைக்கும் குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

Sam_Trick___r_Treat_by_smthcrim89

Sam, மறக்கமுடியாத பாத்திரமாக மாறிவிட்டது. Sam ஒரு சிறுவன், சிறிய மன்ஸ்டர். ட்ரீட் கொடுக்காவிட்டால், ட்ரிக் செய்து எப்படியும் அதனைப் பெற்றுக் கொள்வான். எப்படியென்று படத்தைப் பார்க்கும் போது புரியும். சாம், Samhain நம்பிக்கைகளின் குறியீடு. நம்பிக்கைகளை பின்பற்றாவிட்டால் கொலை செய்வான். குள்ள உருவம், முகத்தை மூடும் கோணி, ஆரஞ்சு வண்ண நைட் ட்ரஸ். கையில் ட்ரிக் சேகரிக்கும் கோணி… என்று திகிலான, அப்பாவித்தனமான பாத்திரம்.

படத்தின் கதையோட்டத்தில் சில குழறுபடிகள் இருந்தாலும் முற்றிலும் புதுக் கோணத்தில் இராக்கதைகளை அணுகியிருப்பதுதான் இந்த படத்தின் வெற்றி.

இராக்கதைகள்,

படத்தைப் பற்றி மாத்திரம் பேசி என்ன பயன். இராக்கதைகள் பற்றி இன்றைய குழந்தைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அல்லது மிகவும் குறைவு. முன்னர் கதைகளுக்கும் கதைசொல்லிகளுக்கும் பஞ்சம் இருக்கவில்லை. இரவு தூங்கச் செல்லும் போதும், சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும் போதும் உம்மா சொல்லும் கதைகள் இன்றும் அப்படியே மனதுள் குடிகொண்டு இருக்கிறது. வீட்டிலும் ஊரிலும் இருந்த பழைய ஆக்கள் சொல்லும் கதைகள் நிறைய இருந்தது. ஆனால் இப்பொழுது எங்கு தேடினாலும் அந்த அனுபவத்தை அடைய முடியாது.

இம்மாதிரியான நம்பிக்கைகளின் அடியில் தோன்றிய கதைகள் எமது இலங்கை, மற்றும் தமிழ்ச் சூழலில் ஏராளம் இருக்கின்றன. அவை சிறு சிறு கதைகளாக ஒளிந்து கொண்டிருக்கின்றன. இந்த சாம் போல, நாம்தான் தேடிப்பிடித்து அவற்றை பதிவு செய்ய வேண்டும்.

தமிழ் சினிமாவில் anthology திரைப்படங்கள் வரவேண்டும். அவற்றில் இராக்கதைகள் பதிவு செய்யப்பட வேண்டும். இப்படியெல்லாம் அட்வைஸ் பண்ண வேண்டும் என்றுதான் ஆசை, ஆனா அதற்கான தகுதி இல்லாதவர்கள் எடுத்து சொதப்பிவிடுவார்களோ என்ற அச்சம் அதனை தடுக்கிறது. ஆழமான தேடலும், வாசிப்பும் இன்றி இவற்றை உருவாக்கிட இயலாது. அப்படியே செய்தாலும், மையநீரோட்ட புரிதலுடனேயே அது அமையும். மையநீரோட்டம், அதாவது நுனிப்புல் மேய்றது.

Advertisements

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s