ஹம்லாஜ் – பிலால்

799

பாலை மணலில் புதைந்து கொண்ட பாதங்களை மெல்ல உயர்த்திப் பார்த்தப் போது, உரோமங்களில் ஒட்டியிருந்த மணற்துகள்கள் அருவி போல் கீழே கொட்டியது. கொஞ்ச நேரம் அதனை ரசித்துக் கொண்டே, இனி இங்கிருந்தால் மணற் புயலில் சிக்கி கரைந்து விடுவேன் என அறிந்த ஹம்லாஜ், நொடியும் தாமதிக்காமல் பிரமாண்ட மெழுகுவர்த்தி அணையும் பொழுது ஏற்படுத்தும் புகை உருவாய் மாறி வெளி மற்றும் காலத்தினூடே பயணித்தது.

“என்ன பிலால், இந்த அடர் வனத்தில் உனக்கென்ன வேலை?”

திடுக்கிட்ட அந்த கறுப்பு மனிதன். பிரமாண்ட விருட்சங்களின் சல சலப்பில் மிதந்து வந்த குரலைக் கேட்டு அதிர்ந்தான்.

“யார் அது? மனித சஞ்சாரமற்ற இந்த வனத்தில், திடுக்கிடச் செய்யும் குரலுக்கு சொந்தக்காரன் யார்? இறைவனைத் தவிர யாருக்கும் அஞ்சமாட்டேன்… வா, நீ யார் என்று சொல்?” பிலாலின் கம்பீரக் குரலில், அவன் சாய்ந்திருந்த விருட்சத்தினுள் இருந்து வெளிப்பட்டது, கறுப்பும் நீலமும் பச்சையும் கலந்த நிறத்தில் ஓர் மூர்க்க ஓநாய்.

“என்ன பிலால், இந்த அடர் வனத்தில் உனக்கென்ன வேலை?” சிரித்துக் கொண்டே கேட்டது.

“என் பெயரை உனக்கு அறிவித்தவர் யார்?”

“இழப்பின் வலியும், களைப்பின் தகிப்பும் உன்னுள் பொதிந்திருக்க ஏன் இந்த ஆவேசம்…?” புகை உருவெடுத்து அவன் பக்கத்தில் வந்தது. “ஹ்ம்… ஹம்… இன்னும் கழுத்தில் ஏன் விலங்கு மாட்டியிருக்கிறாய்?”

பிலால், தன் கழுத்தை தடவிப்பார்த்ததும்… அடிமை விலங்கு இருப்பது கண்டு திகைத்து போனான். என்ன இது புதினம்?

“மூச்சுக் காற்றில் கூட விடுதலையும், சுதந்திரமும் இருக்காத நிலையில்… கொந்தளிப்பின் தணல்கள் பாதைகளில் பரப்பிக் கிடந்த நிலையில்… காற்றையும் மண்ணையும் மாற்றி அதிர்வை ஏற்படுத்தியவர்… விடுதலையை வாங்கிக் கொடுத்தவர்… ஆனாலும், இன்னும் ஏன் விலங்கு பிலால்?”

அடிமைத்தனத்தில் இருந்து முழுச்சுதந்திரம் பெற்ற பிலாலுக்கு ஹம்லாஜின் புதிர் விளங்கவில்லை. இது ஏதும் சூனியமோ என்று அஞ்சினான்.

“விடுதலையும் சுதந்திரமும் எவ்வாறு விலங்காய் மாறிப்போனது என்று கவனித்தாயா?” கோரைப்பற்கள் நர நரத்தது. விடை கூறாவிட்டால் தன்னை உணவாகக் கொன்று விடும் என பிலாலுக்கு விளங்கியது.

செய்வதறியாது நின்றான் விடுதலையின் மனித அடையாளமான பிலால். யோசிக்கக் கூட இடம் வைக்காமல் அவன் மீது பாய்ந்தது ஹம்லாஜ். நெடுங்காலமாய் கொடுமைகளை அனுபவித்து வந்த பிலால், இந்த திடீர் தாக்குதலைக் கண்டு அஞ்சிவிடவில்லை. தன் பலம் கொண்ட மட்டும் போராடினான். ஹம்லாஜின் மூர்க்கத் தாக்குதலும் சூடுபிடித்தது. பிலால் தன் நீண்ட கைக்கத்தியை உருவி அதன் வயிற்றில் சிராய்ப்பை ஏற்படுத்தினான். இரத்தம் பிய்ச்சியடித்தது.

பின்வாங்கிய ஹம்லாஜ், ஒரு கணம் நிதானித்து விட்டு தன் காயத்தை நக்கியது.

“ஹ்ம்… ஹம்… வீரன்தான் போ… சரி பதில் சொல்?” நக்கிக் கொண்டதில் அதன் காயம் மறைந்து போனது. “என்னை வீழ்த்த முடியும் அழிக்க முடியாது… அதற்கான காலம் இன்னும் வரவில்லை.”

“நீ கூறும் புதிர் எனக்கு துலங்கவில்லை, நீண்ட நெடுங்காலம் அடிமையாய் கிடந்து, துயர் படிந்த நாட்களை எண்ணி விடுதலை பற்றிய எண்ணமே மங்கி, இதுதான் கதி என்றிருந்த எனக்கு ஒருவனே எல்லாம் அவனுக்கு கீழ் அனைவரும் சமமே என்று உணர்த்திய அந்த சந்தர்ப்பத்தில் விலங்கிடப்பட்டிருந்தாலும் விடுதலை உணர்வை சுவாசித்தேன். என் விலங்கின் தகர்ப்பு விடுதலையின் எழுச்சி.” பிலால் பேசப் பேச, வன ஜீவிகள் அவனை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தது.

“பிலால், உன் உணர்வைக் கண்டு நான் வியக்கிறேன்… ஆனால், சுதந்திரம் எங்கனம் விலங்கிடப்பட்டது என்று மாத்திரம் சொல்?” ஹம்லாஜின் சிந்தனை கொஞ்சம் தெளிவடைய ஆரம்பித்தது.

வனஜீவிகளின் வருகை காலத்தை அதிரச் செய்தது அக்கூட்டத்தைக் கண்டு ஹம்லாஜ், பிழையான காலத்தில் இருக்கிறோம் என அறிந்து கொண்டது.

“விடுதலையின் சின்னமே, என்னை மன்னித்துவிடு, என் பயணத்தில் காலம் பிழைத்துவிட்டது.” புகை உருவாய் மாறிய ஹம்லாஜ்,

“பிலாலே, உன்னை 21ஆம் நூற்றாண்டில் மீள் அறிமுகம் செய்யப் போகிறேன்… வா!”

Advertisements

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s