தண்ணாசி கதைகள் – தொகுதி ஒன்று

Boogeyman

1

பள்ளிப்பருவத்தின் ஆரம்ப ஆண்டுகளில் எங்கள் ஊர் இன்னும் தொலைகாட்சிக்குள் சென்றிருக்கவில்லை. அது பிற்காலத்தில் நடக்கவிருக்கும் கலாசார மாற்றம் என்பதால், நகரக் காவு கொள்ளலின் ஆரம்பவித்துக்கள் முளைத்திருந்த கோடை நாட்களில் இக்கதை நடக்கிறது.

பாடசாலைக்குச் செல்வதற்கு மூன்று பாதைகள் இருக்கின்றது. ஒன்று எல்லா பாதைகளையும் போல நேர்ப்பாதை. மற்ற இரண்டும் சோர்ட் கட் எனப்படும் தலையைச் சுற்றி மூக்கை பிடிக்கும் பாதைகள். அதில் ஒன்று வயல், ஓடை, ஆச்சிக்கிழவி வீடு சகிதம் பாடசாலை க்ரவுண்டில் வந்து முடியும் பாதை… இது காலை மற்றும் மாலை நேரங்களில் தற்காலிகமாக பாழடைந்திருக்கும். அடுத்து பிரதான பாதைக்கும் ஆச்சிக்கிழவி பாதைக்கும் நடுவில் இருக்கும் பாதை. இதனை ஓணான் பாதை என்று அழைத்தோம், – நான் காமிக்ஸ் ரசிகன் என்பதால் “ஒணான் பாதை” – இப்பாதையின் இரு மருங்கிலும் நீண்டு வளர்ந்திருக்கும் புதர்களும், மரவள்ளி செடிகளும் அதன் கிழங்கும், அவித்து தேங்காய்ப்பூ அல்லது கட்ட சம்பலுடன் வைத்து விலாசுவதும் கண்கலங்கும் காட்சிகள். அவ்வளவு உரப்பு. இஞ்சி ப்ளேன் டீயுடன் மரவள்ளி சாப்பிட்டால் நஞ்சி. நடுவே சிறு ஒற்றையடிப் பாதை. பாடசாலை முடிந்தவுடன், அல்லது மதிய உணவு நேரங்களில் ஓணான் பீடி விளையாடுவது இந்த இடத்தில்தான். அதென்ன ஓணான் பீடி, அது தனிக் கதைக்குரிய கால, இடப் பரிமாணங்களைக் கொண்டிருப்பதனால் இன்னொரு கதையில்.

இந்தப் பின்னணியில்,

வகுப்பில் கணக்கு பாட நேரம், முன்வரிசை மாணவர்கள் மும்முரமாகப் படிக்க, பின் வரிசை மாணவர்கள் எங்கு எந்த நேரத்தில் பெயர் கூப்பிடப்படுமோ என்று பயந்து கிடக்க, நடுவில் தூங்குமூஞ்சி டீச்சர் கண்களில்படாமல் கதையளக்கும் போது, எப்பொழுதும் கதை கதையாய் விடும் கலீல் சொன்ன கதைதான் அன்றைய நாளின் டாக் ஆப் த டேயாக மாறியது. கதையின் தோற்றம் பற்றி எதுவும் சொல்லவில்லை, நடுவில் உள்ள பக்கங்கள் மாத்திரமே.

அந்தப் பக்கங்கள்,

ஊர்ம நேரத்தில் ஒரு நாள், பட்ட வெயில். கதையின் நடுவில் கனி என்று பெயர் வைக்கப்பட்ட சிறுமி ஓணான் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தாள். ஒரு கையில் பெரிய பெரிய பலா இலைகள், மறுகையில் ஐஸ். பின்னால் உப்புமூட்டை ச்சி கல்லுமூட்டை ச்சி புத்தகமூட்டை எப்படியோ ஒரு பாரமூட்டை. புதர்களும், மரவள்ளிச் செடிகளும் ஏற்படுத்திய பாம்புச் சலசலப்பை அவள் அறியவில்லை. காற்றும் வெயிலும் ஒரே நேரத்தில் காய்ந்திருந்ததால் சப்தங்கள் மயானித்திருந்தன.

கனி வெயிலில் காய்ந்திருந்தாள், அது பற்றி அவளுக்கு என்ன கவலை. ஐஸும் வீட்ல் அம்மா செய்து வைத்திருக்கும் ரோல்ஸும் அவள் கண்களுக்குள் அமர்ந்திருந்தன. எப்பொழுதும் கைகளில் ஏதாவது திண்பண்டம் இருந்துகொண்டேதான் இருக்கும். சாக்லேட், சீனி போல, பூ பிஸ்கட், விரல் பிஸ்கட், ஐஸ் என்று எல்லா திட்டுத் திண்பண்டங்களும் அவளுக்கு பிடித்தமானதாக இருந்தது. எப்ப பார்த்தாலும் கொரிச்சினே இரு! என்று அம்மா ஏசினாலும் அவள் பொருட்படுத்துவதாய் தெரியவில்லை. அவள் பற்கள் அதிக இனிப்பால் சல்லடையாகி இருந்தது. வாயின் ஓரங்களில் அப்பியிருந்த சிவப்ப, ஐஸ் குச்சியின் சுகாதாரம் குறித்த சந்தேகத்தை கிழப்பியது. சிரிப்பில் வந்து தொற்றிக் கொண்ட கண்ணக் குழிகளுக்கு ஏதுவாக கண்களுக்கும் சுருங்கிக் கொண்டது. இந்த சிரிப்பின் அழகியல், கையில் கோணியுடன் நின்று கொண்டிருந்த கறுப்பு அங்கி உருவத்தை பார்த்த போது தெரிந்தது.

ஓணான் பாதையெனும் புதர், மரவள்ளிக் காடு மறுபடியும் ஒருமுறை பழைய நிலைக்குத் திரும்பியது.

2

அந்நாட்களில், இங்கு குறிப்பிடப்படும் “அந்நாட்களில்” என்பது 90களின் வரலாற்றைக் குறிக்கும். ஆனபடியால், இவன் பழைய நாஸ்டல்ஜியா ஆசாமி என்று நினைத்துவிட வேண்டாம். சரி, மறுபடியும் ஓணான் பாதைக்குள் செல்வோம்.

காலை ஆறு மணிக்கே எழும்பிவிட்டான் தாரிக். வீட்டில் இருந்து பாடசாலைக்கு  வெறும் அஞ்சு நிமிட தூரம்தான். காலை எட்டு மணிக்குத்தான் பாடசாலை ஆரம்பிக்கும். 7.50 இற்கு எழும்பினாலும் போதும். இந்த ஆறு மணி விழிப்பு எதற்கு. அதான் டீவியில் கார்டூன் போடும் நேரம் ஆயிற்றே. ராவ் நேரத்துடன் படுப்பதே அதிகாலை கார்டூன் பார்ப்பதற்குத்தான். அஞ்சே நிமிடத்தில் ரெடியாகி, டீவி முன் உட்கார்ந்து கொண்டே சாப்பிட்டு, கண்களை அகற்றாமல் பாரமூட்டையில் சமான்களை நிரப்பிக் கொண்டு, உம்மா தலைவாறிவிட. 7.50. That’s all folks. அதியவசரமாக ஓட்டமும் நடையும், பாரமூட்டையில் லொக் டொக் சத்தம். டீச்சர் அஸ்ஸலாமு அலைக்கும். பல் இளிப்பு. 7.55. ஓணான் பாதை.

தவளை இருப்பில் பிற மாணவர்கள். டொப்பர் மூடி (சோடா மூடி), சிகரட் பில்டர், ஈயத்தாள், டொபித்தாள், ஐஸ் குச்சி என்று பொறுக்கிக் கொண்டிருப்பார்கள்.

ஒரு ஐஸ் குச்சியை எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன. யாரும் அதனை எடுக்கவில்லை. கடி எறும்புகள். கட்டிக் கறுப்பில் சிவப்பு எறும்பு சைஸில் இருக்கும். கடி எறும்பு கடித்தால் கடுக்கும். அதனால் யாரும் அதனை சீண்டுவதில்லை. எறும்புகளை துன்புறுத்துபவர்களை காண்பது அரிது. ஏனோ, கால காலமாக யாரும் அதனை செய்வதில்லை. மனிதனுடனான எறும்பின் உறவு தொன்று தொட்டு இருந்துவருகிறது. நவீன மனிதன் பெஸ்ட் கன்ட்ரோல் என்று அவற்றை அழிக்கிறான்.

அத்தருணத்தில்,

“டேய் இங்க பாருங்க…” குண்டு பையன் கத்தினான்.

சுட்டிக் காட்டிய இடத்தில். ஒரு கறுப்பு கோணிப்பை.

ஓணான் பாதையில் செல்வதென்னவோ சிறுவர்கள்தான். ஆசிரியர்கள், ப்ரின்லிபல், பெரிய நானாமார்கள் எல்லாம் நேர்பாதையில்தான் போவார்கள். அவர்களும் ஒருகாலத்தில் அப்பாதையால் சென்றவர்கள்தான். என்ன செய்ய வளர்ந்தவுடன் சட்டம், ஒழுங்கு, கண்ணியம், கலஸ் மற்றும் இன்னபிற ஆவிகள் அவர்களை பிடித்துக்கொள்ளும். அவற்றில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களை காண்பது அரிது.

எல்லோரும் என்கிற ஐந்து நண்பர்கள் அந்த கோணிப்பையை சூழ்ந்து கொண்டனர். என்னவாக இருக்கும் என்ற சந்தேகத்திற்கு சொல்லப்பட்ட காரணங்கள் பின்வருமாறு.

“யாராச்சிம் களவாண்ட வந்து இருப்பாங்க… மன்ஞோக்கா (மரவள்ளி) சீசன்தானே”

“இல்லடா, இது தண்ணாசியாத்தான் ஈக்கும்…”

:O

“தண்ணாசியா, அப்படின்னா என்ன?” இந்த கேள்வியை அவன் (நான்தான்) கேட்டு இருக்கவே கூடாது.

டிங் டிங் டிங். ஒரே ஓட்டம்.

வகுப்பில் கணக்கு பாட நேரம், முன்வரிசை மாணவர்கள் மும்முரமாகப் படிக்க, பின் வரிசை மாணவர்கள் எங்கு எந்த நேரத்தில் பெயர் கூப்பிடப்படுமோ என்று பயந்து கிடக்க, நடுவில் தூங்குமூஞ்சி டீச்சர் கண்களில்படாமல் கதையளக்கும் போது, எப்பொழுதும் கதை கதையாய் விடும் கலீல் சொன்ன கதைதான் அன்றைய நாளின் டாக் ஆப் த டேயாக மாறியது…

3

தண்ணாசியின் தோற்றம் பின்னணி பற்றிய வரலாற்று ஆய்வில் ஓணான் பாதையை தவிர்க்க முடியாது. ஓணான் பாதையை பற்றி பேசினால் ஓணான் பீடி பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.

ஓணான் பாதையில் அதிக ஓணான்கள் – பச்சோந்தி – இருக்கும். அதன் சுற்றுச் சூழலும் ஒரு காரணம். சீமைப் புல்லும், மரவள்ளி செடிகளும், பூச்சிப் பட்டைகளும் நிறைந்திருப்பதால் அவற்றின் வாழ்விடமாக ஆக்கிக் கொண்டிருந்தன. ஓணான்களுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். பூச்சியினங்கள் இனிப்பானவைதானே. பூச்சிகள் எப்படி விருப்பமானவையோ அப்படியேதான் பீடியும்.

“உம்மா கடக்கி போய்ட்டு வந்தா ரெண்டு ரூவா வேணுமே…!” கடைக்கு.

“ரெண்டு ரூவா, ஒருவாக்கு விரல் பிஸ்கட்டும் மத்த ஒருவாக்கு பீடியும் தாங்கோ.” கடையில்.

“யாருக்கு பீடி?” கடை மொதலாளி.

“அடுத்த ஊட்டு அப்பாக்கு” வீட்டுக்கு.

“கைல என்ன?” வீட்டில்.

“வெரல் பிஸ்கட்…” ரோட்டுக்கு.

“கொண்டு வந்தியா, எத்தன… ஒருவாக்கி நாலா” ஓணான் பாதையில்.

வெள்ளை – நீலம் சீருடையை எப்போதுமே அணிந்து கொண்டிருக்கும், – பாடசாலை மீது அதீத பற்றாக இருக்கும் – நசீர் கையில் ஓணானுன் நின்று கொண்டிருந்தான்.

“டக்குனு வாங்கடா, பெரிய சைஸ் ஓடிட போவுது”

சாது ஒருவனின் சலனமற்ற தியானத்தைப் போல் விற்றிருந்தது ஓணான். சின்ன வித்தியாசம் கண்கள் திறந்திருந்தன. சாம்பலும் அரிசி மூட்டை கோணியின் நிறமும் கலந்த நிறம், – அநேகமாக அந்த ஒற்றையடிப் பாதை மண்ணுக்கேற்ற விதத்தில் நிறத்தை மாற்றியிருக்கும். – முழங்கை வரை நீளம், தலையில் இருந்த கூர் கூர் பற்கள் போன்ற தடித்த தோல், மூக்கின் நுனியில் காண்டாமிருக கொம்பு, எந்தப் பக்கமும் சுழலும் கண்கள், தலையில் இருந்து வால் துவங்கும் இடம் வரை சீனப் பெருஞ்சுவர் போன்ற முதுகு… வால் அது எங்கே முடிந்தது என்று நினைவில் இல்லை.

பீடியை பதறியவாறே பற்றவைத்தான் சலீம். விரல் பிஸ்கட்டை வாயில் வைத்துக் கொண்டே பீடியை பிடித்துக் கொண்டிருந்தான் தாரிக். சலீமும், நசீரும் எவ்வளவு கேட்டும் கொடுக்கவில்லை. விரல் பிஸ்கட்டை. ஒரு ரூபாய்க்கு ஐந்து.

பீடி பற்றிக் கொண்டது. பூனைக்கு மணி கட்டுவது யார்?

இந்தா நீ வை. எனக்கு ஏலா நீயே வை. நான் மாட்டேன். என்ற விவாத்ததில் அணைந்துவிட்டது பீடி. மறுடியும் பற்றவைத்து அருகில் கொண்டு சென்றான் சலீம். வாயில் வைக்கும் தருணத்தில் அணைந்துவிட்டது. மறுபடியும் பெர்ஸ்ட்ல இருந்து. இம்முறை வாயில் வைத்து விட்டான்.

மௌனம்.

தவளை இருப்பில் மூவரும் பார்த்துக் கொண்டே இருந்தனர். ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. அப்போ பெரிய நானாமார் கதைச்சிக் கொண்டிருந்தது பொய்யா?

“கொஞ்சம் இழுத்துட்டு கொடுப்பமா?” சலீம் சொன்னான்.

பீடியை வாயில் இருந்து எடுத்து. ச்சி எச்சில். அடுத்த பீடியை பற்றவைத்தான். முதன் முதலாக பீடியை இழுத்த போது தொண்டைக் குழிக்குள் சென்று புரையேறியது. பச்சக்கசம். நாத்தம் வேற. அந்த பீடியும் நாசம். இன்னும் மீதி இருப்பது இரண்டு பீடிகள்.

அடுத்த பீடியை பற்றவைத்து கொஞ்சம் இழுத்தான். இன்னும் இழுத்துக் கொண்டுதான் இருக்கிறான். சிகரட். ஓணானின் முகத்தில் ஊதினான். அது அந்த புகையை உள்ளீர்த்துக் கொண்டது.

வாயில் வைத்தான். விர்ரென்று ஒரே இழுவையில் பீடி காலி. அவ்வளவு புகையையும் உறிஞ்சிக் கொண்டது. எப்படி உறிஞ்சியது என்ற மர்மம் இன்னும் துலங்கவில்லை.

“எப்படா ஊதும்…” தவளை இருப்பில் மூவரும் காத்திருந்தனர்.

BoogeymanConcept1

4

எப்பாடா ஊதும் என்று மூவரும் க்ளின்ட் ஈஸ்ட்வூட் பாணியில் கண்களை குவித்து ஓணானை பார்த்துக்கொண்டிருந்தனர். ஓணானும் தனது தவநிலையைக் களைக்காமல் ஸ்தம்பித்துப் போய் நின்று கொண்டிருந்தது. மெலிதாய் வீசிய காற்றில் சறுகுகள் அவர்களைக் கடந்து போயிற்று. சீமைப் புற்களும் மெதுவாய் அசைந்தாடின. இந்த காட்சியை எடுப்பதற்கு அகிரா குரோசாவா வந்திருந்தார்.

ஓணானின் வாயில் இருந்து காற்றில் பறக்கும் நூல் போல் புகை மிதந்து வந்தது. அது சுழன்று சுழன்று காற்றின் பாதைகளை ஆக்கிரமித்துக் கொண்டு குட்டிச் சூறாவளியாக உருவெடுத்தது. பின்னர், காற்றில் இழையோடியிருக்கும் தூரிகைகளை தன்னுள் ஈர்த்து வளையமொன்றினூடே நீந்தி வரும் ராட்சத டிராகனாக பரிணமித்தது. புகை டிராகன் மூன்று சிறுவர்களையும் விழுங்கியது. நடுக்கடல் சுழியில் சிக்குண்ட கப்பல் போல் சிதறியடித்துக் கொண்டு டிராகன் வாயில் மறைந்து காணமல் போயினர். ஓணான், தான் உருவாக்கிய புகைப்பாதையில் அதிவேகமாக ஊர்ந்து சென்றது. புகைமூட்டத்தில் அம்மூவரின் முகங்களும் வெளிரிப் போய் பதிந்திருந்தது.

5

சொல்லமறந்த கதை. சலீம் ஓணானுடன் காத்துக்கொண்டிருந்தான் என்று சொன்னேனில்லியா? எப்ப ஓணான் அவன் கைக்கு வந்தது?

ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு வழமை. பிடிப்பதிலும் சரி, கொடுக்கும் சரக்கிலும் சரி ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். எங்கள் ஊரில், சீமைப்புல் பூவில், அதாவது கதிரில் அரிசி இருக்கும் பகுதிகளை நீக்கி விட்டு அதன் நுனிப்பகுதியை “தொண்டு” போல் செய்து கொள்வோம். வேட்டைக்காரன் வில், அம்புகளுடன் வேட்டைக்கு போவது போல்தான் இருக்கும் எண்ணங்கள். சீமைப்புல், மரம், செடி என்று திரிந்து கொண்டிருக்கும் ஓணான்கள், தியானநிலை அடையும் போது கௌபாய்கள் எருதுகளுக்கு கயிற்றால் சுழற்றி சுழற்றி தொண்டு போடுவார்களே, அதே போல் இல்லாவிட்டாலும் மிக மிக மெதுவாக தொண்டை கழுத்தில் மாட்டி, மெல்ல சுருக்கை இறுக்க வேண்டும். அதுவரை ஓணான் பொறுமையாக அசைவற்றுதான் இருக்கும். தொண்டு கழுத்தில் பட்ட அந்த கணம் முரண்டு பிடிக்கும் காளைகளை கற்பனைப் பண்ணிக் கொள்ளுங்கள். ஒருமுறை எனது கை சுண்டு விரலையும் கடித்துவிட்டிருக்கிறது. இதற்கு முன் யாரும் அப்படி கடி வாங்கியதில்லை. அப்படி முரண்டு பிடிக்கும் ஓணான் கொஞ்ச நேரத்தில் அடங்கிவிடும். இப்படித்தான் சலீம் ஓணானை பிடித்திருப்பான்.

வேறு ஊர்கள் என்றால் தென்னை ஓலை ஈக்கிலால் பிடிப்பார்கள். இன்னும் தெரியாத வகைகளில் எல்லாம் பிடிப்பார்கள் என நினைக்கிறேன்.

கொடுக்கும் சரக்கு, எங்கள் பகுதியில் பீடிதான். பக்கத்து ஊரில் “தூள்” கொடுப்பார்கள். தூள் என்றால், அதில் போயிலையும் கலந்துதான் இருக்கும். இன்னும் சில ஊர்களில்  போயிலை இலை கொடுப்பார்கள். யாருக்குத் தெரியும், சுருட்டு குடிக்கும் ஓணான் கூட இருக்கலாம்.

இதிலிருந்து என்ன விளங்குகிறது, ஒவ்வொரு ஊர்களுக்கும் தனித்தனி கலாசார அடையாளங்கள் இருக்கின்றது. அவற்றை நாம் அங்கீகரித்து பிளவுபட்டுக் கொள்ளாமல். பீடி, போயிலை, தூள், சுருட்டு என்று அவரவர்கேற்ப விதங்களில் பரஸ்பரம் உறவாடி ஓணான் பிடிக்க வேண்டும்.

காலமாற்றம் கலாசாரத்தையும் காவு கொண்டுவிட்டது. ஓணான்கள் அப்படியேதான் இருக்கின்றன. அதையும் க்ளோபல் வார்மிங் அள்ளிச் சென்றுவிடலாம். யார் கண்டா?

என்ன இது கதை கட்டுரை மாதிரி போய்க் கொண்டிருக்கு…? சம்திங் ராங்.

6

சம்திங் ராங், என்று சொன்னதுதான் தாமதம் எனக்கு கதைசொல்லி யார் என்று மறந்து போய்விட்டது. பழைய கதைகளை கிளறுவது அவ்வளவு அழகில்லை என்பதால் என் புத்திக்கு பட்ட விதத்தில் ஞாபகமூட்டிப் பார்க்கிறேன்.

அதே நேரத்தில்,

ஊ ஊ கூகூகூ கூ ஊ உஉ ஊ. நடுநிசியில் பிரம்பு யாவாரி தஸ்லிம் வர்றானாம், வரும் போது முடுக்கிலிருந்து கேட்ட அலறல் அவன் யாவாரம் பாழாய்ப் போவதற்கு காரணமாக இருந்தது. இந்த அலறல் சத்தம், முக்குபேய் என்றும் சொல்வார்கள். மேலே குறிப்பிட்ட சங்கேதத்தைத் தவிர, முமு மூ….. ஊஊ முமுமுமூ, என்றவாறும் கேட்கும். ஓடையும் வயலும் அண்டிய பகுதிகளில் இம்மாதிரியான அலறல் சத்தம் கேட்கும். அரப்படிச்ச ஆலிம்கள் இதெல்லாம் பக்காமூனா என்று சொல்வாங்க. (இங்கு ஆலிம்கள் என்று அழைக்கப்படுபவர்கள் கற்றறிந்தவர்கள் அதாவது விஞ்ஞானிகள்) பக்காமூனா என்றாலே முக்குபேய்தான் என்பது அவர்களுக்கு புரியாது. இதற்கிடையில், பக்காமூனா என்று சிங்களத்தில் அழைப்பது ஆந்தைக்கு என்று ஒருவர் கூறினார். அவரும் ஒரு மொழியியல் ஆலிம்.

ராவ் பன்னன்டு மணி தஸ்லிம் வர்றானாம்.

தண்ணாசி கதைகளின் தோற்றம் பற்றிய கதையில் கதைசொல்லி யார் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இது ஒரு மாதிரியான புனைவெழுத்து என்பதால், நானே கதையைச் சொல்லிக் கொண்டு போனேன். பிறகு கதைவிடும் கலீல் வந்து தொத்திக் கொண்டான். அவன் கதைசொல்லி பாத்திரத்தை எடுத்ததுதான் தாமதம், எது உண்மை எது பொய் என்றே குழம்பி போய்விட்டது. என்ன செய்ய அவன் வளர்ந்த விதம் அப்படி.

கலீல், பிறந்த போதே பச்சைக் கலரில்தான் இருந்தான். அவன் வாப்பா கலீல் பிறக்கும் முன்னர் அவர் கனவில் பச்சைக் கலர் ஜிப்பா அணிந்து, வெள்ளை தாடி வெச்ச ஒருத்தர் உனக்கு ஆண் மகவு பிறக்கும் என்று கூறிச் சென்றாராம். அப்படியே ஆண் குழந்தை பிறந்த போது ஊர் முழுக்க அவர் பேமஸ் ஆகிவிட்டார். அந்த நினைவாகத்தான் கலீல் என்ற பெயரை வைத்தார்களாம். (ஆனா கலீல் என்றால் பச்சை அல்ல)

கலீலும் ஆயிரத்தொர் கதைகளும் என்றொரு பதிப்பிக்கப்படாத கதைத் தொகுப்பொன்றும் ஊரின் ஒரே மஸார் ஷரீபான பீர் பாவா தக்யாவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. ஓ… மன்னிக்கவும் இது வேற கலீல்.

அடுத்த கதையில் கலீலின் கதைசொல்லல் உத்தி பற்றி பேசலாம்.

மறுபடியும் சம்திங் ராங்.

flatter2

7

ராபின் ஹுட். குடிசை மத்ரஸாவுக்கு கட் அடித்துவிட்டு, ஊரில் இருக்கும் ஒரே டீவியில் பொடியன்மார் அனைவரும் தவளை, பூனை, வௌவால், பல்லி, காபிரி கோழி போன்ற இருப்புகளில் இருந்து கொண்டு 45 நிமிடங்கள் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். முடிந்த மறுகணமே தயார் நிலையில் இருக்கும் கொய்யா கம்பை வளைத்து செய்யப்பட்ட வில், அம்பு (குச்சி), தேய்ந்து போன விளக்குமார், தும்புத்தடி கம்புகளால் செய்யப்பட்ட வாள் எல்லாம் அடி தூள் பறக்க, ஊரின் காடுகளுக்குள் புகுந்து கிஸ்பனையும் அவன் வாழை மரங்களையும் அம்பு விட்டு கொல்வார்கள்.

அப்படி எப்போதாவது ராபின் ஹுட் பார்க்க தவறிவிட்டால் அடுத்த நாள் கலீல் ராஜாங்கம்தான். கலீல் சொல்லும் படக்கதை.

அந்த 45 நிமிடங்களை இம்மி பிசகாமல் கூறிவிடுவான். அதில் கில்லாடி. ஆனா, கதையை நிறுத்த மாட்டான். டபள் கடு (இரட்டை வாள்) நசீர் காட்டுக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருப்பதுடன் கதை முடிந்தால், அப்படியே பார்த்துக்கொண்டு இருந்தான், சரியா பெரிய புளியமரத்துள்ளுக்கு இருந்து வந்திச்சே பாரு ஒரு டிராகன்… அப்புறம் டிராகனை கொன்று விட்டு ராணியை காப்பாற்றி நைட் ரைடர் காரில் பறந்து கொண்டு போகும் போது, பின்னால் ராணிட சொந்தக்கார ஆட்கள் எல்லோரும் சேர்ந்து அவனைக் கொல்ல கடலை ஏவி விட்டார்களாம். விடுவானா டபள் கடு நசீர். துத்திரி மனுசனா மாறி கடல் முழுவதையும் குடித்துவிட்டான், ஆனா ராஜாட ஒத்தகண் பூதமெல்லாம் சேர்ந்து அவங்கள வட்ட பண்ணிட்டாங்களாம், இப்ப என்ன பண்ணுவான் நசீர், நேரத்தோட குடிச்சானே கடல் அதுல இருந்து கால்வாசிய கக்கினானாம், ராஜாட ராணுவம் அப்படியே தாண்டுடிச்சாம், அப்பவும் ராஜா அடம்பிடிச்சானாம், இப்ப பாதிய கக்கினானாம், ராஜாட கழுத்துக்கிட்ட வந்துடிச்சாம், அப்பவும் திமிர் பிடிச்ச ராஜா மசியவில்லையாம், முழுக்க கக்கினானாம்… மூக்குகிட்ட தண்ணி வந்த பிறகுதான் புத்தி வந்திச்சாம். ராணிய கல்யாணம் கட்டித் தந்தாத்தான் காப்பாத்துவேன் என்றானாம் நசீர்… சரி என்றவுடன். முழுக் கடல் தண்ணீரையும் மறுபடியும் குடிச்சி விட்டு, ராணிய கூட்டிக் கொண்டு நைட் ரைடர்ல பறந்தானாம்… கார்ல போய்க் கொண்டு இருக்கும் போது ராணியோட சண்டையாம்… இன்னிக்கி கதை முடியாது.

கதை என்பது முடிவிலி. அண்டம் போன்றது, எங்கும் வியாப்பித்து இருக்கும். டிராகன்களும், ராட்சதர்களும், பேய்களும் கதைகளை சுமந்து கொண்டிருக்கும். எவற்றையெல்லாம் நீங்கள் பொறுக்கிக் கொள்கிறீர்களோ அவற்றில் எல்லாம் கதைகள் முளைத்துக் கொண்டேயிருக்கும்.

இப்பேர்பட்ட கலீலின் கதைசொல்லல் உத்தி பற்றி எங்க இருந்து தொடங்குறது?

பி.கு: கலீலுக்கும் தண்ணாசிக்கும் தொடர்பிருப்பதாக ஒரு வதந்தி கிளம்பிற்று. ஆனால் ஊர்காரர்கள் எந்த கலீல் என்று குழம்பிப் போனதுதான் மிச்சம்.

8

ஓணான் புகைக்குள் காணாமல் போன அந்த மூவரைப்பற்றியும் கதைகள் பரவ ஆரம்பித்தன. யாருக்கும் நடந்த சம்பவம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், காரணங்களும் ஊகங்களும் பஜார் எல்லாம் சுற்றித் திரிந்தது.

பக்காசி, நொண்டி பிசாசு, எச்சிப் பிசாசு, மோகினி, பக்காபூனா, ஆச்சிக்கிழவி, யக்கா, க்ரீஸ் யக்கா, கோணிபில்லா, பில்லாபூனா, பில்லா, சங்கிலிப்பேய், தேவு, வெள்ளை முயல், கறுப்பு சேவல், வெண்குதிரை, சங்கிலி மாடு, போதெலி… போன்ற பேய்களுடன் தண்ணாசியும் ஐக்கியமாகிக் கொண்டிருந்தது.

யார்? என்ற கேள்விக்கு விடை தெரியாத போது எது? என்ற கேள்வி உருவாகிறது. அப்படித்தான் தண்ணாசி யார்? என்ற சிந்தனை மங்கி எது? என்ற சந்தேகம் பூதாகரமாக வழுத்தது.

இப்படியாக அவசரப்பட்டு தண்ணாசி கதைகள் எட்டை முடிக்கிறேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s