Shadow of the Vampire: காட்டேரி நிழல்

shadow-of-the-vampire-poster

வெம்பயர் திரைப்படங்கள் திகில் சினிமாவில் முக்கிய இடத்தை வகிக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. 1922 இல் வெளிவந்த முர்னாவின் நொஸ்பெராடு திரைப்படத்திலிருந்தே இந்த வகையறா ஆரம்பித்துவிட்டது. சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது. ஒளிப்பதிவிலும், நிழல் அரக்கனை உலாவவிட்டதிலும் காலத்தால் வென்று நிற்கின்றது நொஸ்பெராடு திரைப்படம். இத்திரைப்படத்தை பற்றி பிறிதொரு பதிவில் நோக்கலாம்.

நொஸ்பெராடு திரைப்பட உருவாக்கத்தை மையமாக வைத்து புனையப்பட்ட ஒரு வெம்பயர் திரைப்படம்தான் இந்த Shadow of Vampire.

முர்னாவின் படத்தில் வெம்பயராக நடித்தவரை பார்த்தால் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் சந்தேகம் வரும் இவர் மனிதர்தானா என்று. அந்தளவுக்கு ஒரு விநோத தோற்றம். கதைகளில் வரும் வெம்பயருக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசம் இல்லை. Max Schreck தான் அவருடைய பெயர். ஆனால் Count Orloc என்றுதான் உலகம் அவரை அழைத்தது. முர்னாவ், ப்ராம் ஸ்டாகரின் டிராகுலாவை படமாக்க எத்தனித்த போது ஸ்டாகர் எஸ்டேட் மறுத்துவிடவே, படத்தின் தலைப்பையும், முக்கிய பாத்திரமான Count Dracula வின் பெயரை ஒர்லாக் என்று மாற்றி எடுத்தார். நொஸ்பெராடு என்பது ஒரு ரோமானிய சொல். ப்ராம் ஸ்டாகரின் டிராகுலாவின் மூலமே அந்த சொல் பிரபலமடைந்தது.

எலியின் பற்கள் போன்ற தோற்றம், வௌவ்வாலின் காதுகள், கூரிய மூக்கு, மெலிந்து நீண்டு இருக்கும் உடலமைப்பு, நீண்டு வளர்ந்திருக்கும் நகங்கள் என்று நொஸ்பெராடுவின் தோற்றம் காலத்துக்கும் அழியாதவாரு உருவாக்கப்பட்டது. Max Schreck என்ற நடிகரின் மூலம் இது சாத்தியமாகியது.

Nosferatu

 

Max Schreck, நடித்து F.W. Murnau இயக்கிய Nosferatu திரைப்படத்தை மையமாகக் கொண்டே வெர்னர் ஹெர்ஸாகின் நொஸ்பெராடுவும் அமைந்திருந்தது. ஆனால் இரண்டின் ஆன்மாவும் வேறு வேறானவை. ஒப்பிடவே முடியாத அற்புதப்படைப்புகள். Max Schreck இன் சாயலை தனக்கே உரித்தான பாணியில் உள்வாங்கி அரக்கத்தனமாக நடித்திருப்பார் கின்ஸ்கி. இது பற்றி வேறு பதிவு வரவிருப்பதால் பொறுமை.

அந்த காலத்தில் புது முயற்சி என்பதே எள்ளிநகையாடப்படும் விடயமாகவே இருந்தது. சினிமாவில் சொல்லவா வேண்டும். ஸ்டூடியோவில்தான் படமெடுக்க வேண்டும், நாடகபாணி நடிப்புக்கு வெளியில் செல்லுதல் போன்ற அக்காலத்தேய பிரச்சினைகளை இந்த படம் அலசுகிறது. மெலிதான நகைச்சுவை இழையோடும் இத்திரைப்படத்தில், திகிலுணர்வு வேறு ஒரு தளத்தில் நகர்கிறது. பல திகில் திரைப்படங்களில் திடுக்கிடும் காட்சிகள் இருக்கும், இதில் அவ்வாறு இல்லை ஆனால் மிக மிக மெதுவாக பயத்தின் கூறுகளை பார்வையாளர்களிடம் ஏற்றுகிறது.

shadow-of-the-vampire-dafoe

Max Schreck (Count Orloc) ஆக நடித்திருப்பவர், Willem Dafoe. இவருக்கு இனி நடிப்பைப் பற்றி சொல்லவா வேண்டும். அவரா இது என்ற சந்தேகம் வருவது தவிர்க்கவியலாது. திகிலும், நகைச்சுவையும் ஒருசேர கலந்து அசத்தியிருக்கிறார்.

இந்த இடத்தில் முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்று, இது முழு நகைச்சுவை திரைப்படமல்ல. Parody, Spoof இரண்டுக்கும் இடையில்தான் இது வரும்.

அடுத்து முர்னாவாக நடித்திருக்கும் John Malkovich இவருக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்லிப்பாருங்கள், அப்புறம் உங்க இஷ்டம். தனது படைப்புக்காக எதையும் செய்யத் துணிந்த பாத்திரம். அதை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.

படத்தின் கதை இதுதான், முர்னாவ் தனது நொஸ்பெராடு திரைப்படம் உயிரோட்டமிக்கதாக இருக்க வேண்டும் என்பதற்காக உண்மையான வெம்பயரையே நடிக்க வைக்கிறார். கூடவே கண்டிஷன்களோடு. தன் திரைப்படக் குழுவை எதுவும் செய்யக் கூடாது என்பது அதில் முக்கியமான கண்டிஷன். அதே போல் ஒர்லாக்கும் கண்டிஷன் போடுகிறது. அது Greta என்ற அக்காலத்தேய கனவுக்கன்னியுடன் நடிக்க வேண்டும் என்பது.

படத்தில் வசனங்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. தன் சோகக் கதையை சொல்லும் இடங்கள் எல்லாம் நகைச்சுவையின் உச்சம்.

படத்தை இயக்கியிருக்கும் E. Elias Merhige சினிமா வரலாற்றின் முக்கிய திரைப்படமென்றின் உருவாக்கப் பின்னணியை வைத்து தன்னளவில் ஒரு திகில் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். திரைக்கதை எழுதியிருக்கும் Steven Katz இன் பணியும் சிறப்பாக நோக்கத்தக்கது. காரணம் வசனங்கள், அந்தளவுக்கு அங்கதம் நிறைந்ததாக இருக்கின்றது.

திகிலுணர்வும், பகிடியும் ஒருசேர உருவாக்கப்பட்டிருப்பதுதான் இத்திரைப்படத்தின் தனித்துவம் எனலாம். வேறு படங்கள் என்றால் இது பெரிய இடைவெளியை ஏற்படுத்தி சொதப்பிவிடும். கத்தி மேல் பயணம் மாதிரி.

நிறைய விருதுகளையும் வென்றிருக்கின்றது இத்திரைப்படம்.

மௌனயுக காலத்தை அழகாக சித்தரித்திருக்கிறார்கள். காட்டுவழிப்பாதைப் பயணம், பழைய கட்டிடம், அன்றை சினிமா காமிராக்கள் என்று சுவாரஷ்யமாக இருக்கும் இந்த காட்டேரியின் நிழல். கொஞ்சம் திகிலுடன்.

Advertisements

9 comments

 1. படம் பார்த்தது இல்லை ஆனா பார்க்கலாம் போல இருக்கு உங்க கருத்து…ஆனா ஒன்னு திகில் த்ரில் பேய் காட்டேரி பிசாசு என்றால் எப்பொழுதும் முதலில் உங்கள் ஞாபகம் தான் வருது தல 😀 🙂

  • என்ன பண்ண அர்ஜித், அதுவே நம்ம அடையாளமா போச்சு. ஒருவகைல சந்தோஷம், இன்னொரு பக்கம் பொறுப்புணர்வு.

 2. மறுபடியும் டெம்ப்ளேட் மாத்திட்டீங்க போலருக்கே… குட்.. 🙂 🙂
  Nosferatu (1922), Nosferatu the Vampyre (1979) ரெண்டு படத்தையுமே நீங்க முன்னாடி சொன்னதால தான் டவுன்லோட் பண்ணி வச்சுருக்கேன். நல்ல முகூர்த்தம் கிடைச்சவுடனே பாத்துர வேண்டியதுதான்.. அது பாத்தாதான் இந்தப்படம் பாக்கறதுக்கு நல்லாருக்கும்னு நினைக்கறேன்.. அப்டித்தானே ?? பாத்துருவோம்..!!

  • Yes, மற்ற இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு இதனை பார்த்தால் சூப்பரா இருக்கும். டெம்ளேட், இன்னும் முழு திருப்தியா ஒன்னு மாட்டல்ல.

 3. புதிய தள அமைப்பு கண்ணை உருத்தாமல் நன்றாகவே இருக்கிறது.

  இந்த படத்தை(யும்) நான் இதுவரையில் பார்க்கவில்லை. ஆனால் சமீப காலமாக ஹாரர் வரிசை படங்களை பார்ப்பதை தவிர்த்து வருகிறேன்.

  ஆரம்ப காலத்தில் ஸ்டீபன் கிங் படங்களையும், மற்ற ஹாரர் படங்களையும் பலமுறை பார்த்து ரசித்தவன்.

  பை தி வே, இன் தி மௌத் ஆஃப் மேட்னஸ் என்ற படத்தை பார்த்து இருக்கிறீர்களா?

  • In the Mouth of Madness பார்த்து இருக்கிறேன், ஸ்டீபன் கிங் ரகத்திலான படமது. கதைக்குள் கதையாக நகரும் திகில் திரைப்படம். அருமையான கதைத்தளம், ஆனால் கொஞ்சம் ஆழமாக போயிருக்கலாம்… அதைப்பற்றியும் எழுத வேண்டும்.

 4. வெம்பயர் படங்கள்னாலே கிளாசிக்-களைத்தான் எடுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதைவிட மோசமான சங்கதி என்னவென்றால் Vampire என்ற வார்த்தையைக் கெட்டவுடனே Robert Pattinson முகம் தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
  இந்தப்படம் பழைய கிளாசிக் போலத்தான் இருக்கிறது. மெமரியில் போட்டு வைக்குறேன் 🙂

  *தொடர்ந்து டெம்ப்ளேட் சேஞ்சாகவே இருக்கிறீர்களே??

  • //வெம்பயர் படங்கள்னாலே கிளாசிக்-களைத்தான் எடுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதைவிட மோசமான சங்கதி என்னவென்றால் Vampire என்ற வார்த்தையைக் கெட்டவுடனே Robert Pattinson முகம் தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.// உண்மைதான்… தற்போது வரும் வெம்பயர்கள் ரெத்தம் குடிப்பதற்கு பதில், ரொமான்ஸ் விடுகிறது (ட்விளைட்). சமீபத்திய வெம்பயர் என்றால் ப்ளேட் 2 தான்.

   வெர்ட்ப்ரஸ்ஸில் டெம்ளேட் திருப்தியாக அமைய மாட்டேன் என்கிறது…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s