ஆழ்கடல் ஓநாய்கள்

cthulhu

“மன்ஸ்டர்கள் அற்ற கடல், கனவுகள் அற்ற இரவுகளைப் போல” – வெர்னர் ஹெர்ஸாக்

 கடல்களின் துலக்கப்படாத மர்மங்கள் இன்றும் அதன் ஆழங்களுக்குள் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆழ்கடலின் இருள்மிகு பகுதிகளில் வாழும் உயிரினங்கள் கனவுகளில் சஞ்சரிக்கும் விநோத ஜந்துக்கள் போன்றவை. சமீபத்தய தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால் வெளியுலகுக்கு அறிமுகமாகிய கற்பனை செய்தும் பார்த்திருக்க முடியாத வடிவங்களில் எல்லாம் எமக்கும் முற்றிலும் அந்நியமான விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்னும் கண்டுபிடிக்கப்படாமல், மனிதனோ அவனது தொழில்நுட்பக் கருவிகளோ செல்ல முடியாத ஆழங்களும் இருக்கின்றன.

மனித கண்டுபிடிப்புகளிலேயே போற்றத்தக்க கண்டிப்பிடிப்பாக தகவல் பரிமாற்றம் இருக்கிறது. பண்டைய காலங்களில் நெருப்பு மூட்டி அரைகூவல் விடுத்தல், அதற்கு பிறகு பறவைகள் மூலமான தூது, பிறகு குதிரை வீரன் தூது என்று படிப்படியான வளர்ச்சியில் தகவல் தொடர்பு என்பது நீண்ட காலத்தை வேண்டி நிற்பதாக இருந்தது. இதனடியில் ஒரு கதை இன்னொரு இடத்தை அடையும் போது மொழி மாறி, கலாச்சாரம் மாறி, காடுகள் தாண்டி, மலைகள் தாண்டி பெருங்கதைகளாக இன்று நாம் அறிந்த நாட்டுபுறக்கதைகளாக, கதைப்பாடல்களாக இருந்து வருகின்றது.

லெஜெண்ட்ஸ் எனப்படும், கட்டுக்கதைகளில் உலாவரும் மாந்தர்கள், ஜீவராசிகள், மன்ஸ்டர்கள், தேவதைகள், டிராகன்கள் எல்லாம் அரேபிய இரவுகள், கலிவரின் பயணங்கள், க்ரிம் சகோதரர்களின் தேவதைக் கதைகள் என்று பலவற்றில் பதிவாகி சுவாரஷ்யமான கதைப்பிரதிகளாக இருந்துவருகின்றது. சிலகாலங்களுக்கு முன்னரெல்லாம் எமது வீடுகளில் அவை கூறப்பட்டு வந்தன. இன்று கதைசொல்லிகள் அற்ற ஓர் தட்டையான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த இடத்தை ஓரளவுக்கு நிரப்பக்கூடியதாக சினிமாவும் இலக்கியங்களுமே இருக்கின்றன.

கடல்கள் சுமந்து வரும் கதைகள் என்றும் உவப்பானவை. மனித ஆச்சரியங்களுக்கு தீணி போடுபவை. ஏழு பெருங்கடல்களையும் சுற்றிய பயணி சிந்துபாத்தின் கப்பல் தாங்கி வந்த கதைகள் எண்ணற்றவை. அவன் கண்ட நிலங்களும், விநோத கரைகளின் ஜீவராசிகளும் எழுத்துப் பிரதிகளில் வாசிக்கும் போது அப்படியே கனவுகளில் புகுந்து கொள்கின்றது.

ராட்சத ரூக் (Roc) பறவை காத்து வந்த வைர மலையை தேடி சிந்துபாத்தாக மாறிய நினைவுகளை மீட்டும் போது கிடைக்கும் உவகை போல் எதுவும் இல்லை.

Roc_by_GENZOMAN

அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கும் பசுபிக் மகா சமுத்திரத்தில் பயணிக்கும் பதினேழாம் நூற்றாண்டின் கப்பல் கேப்டனாக உருவகித்துக் கொண்டு வீட்டு மாடியில் போய் வானத்தை பார்த்த காலங்கள், அமைதியான கடல் மெல்ல கொந்தளிக்க, சூரியனை கருமேகங்கள் சூழ்ந்து கொள்ள, மின்னல், இடி, புயல் காற்றில் சிக்கித் தத்தளிக்கும் கப்பலில் மிடுக்காக நின்று கொண்டிருக்கும் கேப்டனாக தன்னைக் கற்பித்துக் கொள்ளும் சிறுவன்.

திடிரென மேலெழும் மலை போன்ற அலையின் உள்ளிருந்து பிரமாண்ட விருட்சமாய் எழும் ராட்சத க்ராகன் கப்பலை நோக்கி மூர்க்கமாக பாயும் போது, பின்னணியில் ஒளிக்கும் அலையின் பேரிரைச்சல் காதுகளில் தங்கியிருக்கும் நீர்த்துளிகளினூடே கேட்கிறது.

பண்டைய காலங்களில், பயணங்களுக்காக மிக நீண்ட காலங்கள் எடுத்துக் கொள்ளும் நாட்களில் கடல்கள் எப்பொழுதும் மிகப்பிரமாண்டமான மன்ஸ்டர்கள் நிரம்பியதாகவே இருந்து வந்திருக்கிறது. பண்டைய கடல்மார்க்க வரைடங்களில் கண்டிப்பாக ஒரு டிராகன் இடம்பிடித்துக்கொள்ளும்.

Kraken

கப்பல் பயணிகள் தங்கள் பிரயாண பொதிகளுடன் கதைகளையும் எடுத்துக்கொண்டுதான் வருவார்கள். அதைக் கேட்கவென ஒரு கூட்டம் அவரைச் சூழ்ந்து கொள்ளும். அன்றைய நாளின் அரசன் அவர்தான்.

நீலத்திமிங்கிலங்கள், கடலின் மிகப்பிரமாண்ட உயிர். கடலின் வாழும் வரலாறு. வெலர்ஸ் எனப்படும் திமிங்கில வேட்டையர்களால் வேட்டையாடப்பட்ட ஒரு பரிதாப ஜீவி. இது பற்றிய கதைகளும் ஏராளம். உலகப்புகழ் இலக்கியமான மொபிடிக் நாவலும் திமிங்கில வேட்டைப் பற்றியே பேசுகிறது. இயற்கையை மனிதன் ஆழவேண்டும் என்கிற மேலாதிக்கம் அந்நாவலில் இருந்தாலும், இன்றும் போற்றப்படும் இலக்கியங்களில் ஒன்றாகவே அது இருந்து வருகின்றது. இயற்கை என்றும் மனிதனுக்கு நண்பனாகவே இருந்து வருகிறது, அதனை நாகரீக மனிதன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.

மொபிடிக் நாவல், அஹப் என்ற திமிங்கில வேட்டையனுக்கும் மொபிடிக் என்றழைக்கப்படும் நீலத்திமிங்கிலத்துக்கும் நடக்கும் போராட்டத்தையே கருப்பொருளாகக் கொண்டிருக்கிறது.

நாடுகாண் பயணங்கள், அதற்கான போட்டி மிகைத்திருந்த காலங்களில் ஐரோப்பாவில் உருவான இலக்கியங்களில் கடல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். மெரி ஷெல்லியின் ப்ரான்கின்ஸ்டைன் நாவலும் கடலில் துவங்கி கடலிலேயே முடிகிறது.

பெரும் சமுத்திரங்களுக்கடியில் மூழ்கிப் போன பெரும் நகரங்கள், சாம்ராஜ்யங்கள் எல்லாம் இன்றும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றது. சில கண்டுபிடிக்கப்பட்டு விட்டன, இன்னும் சில ஏதோ ஒன்றைத் தேடப் போய் வேறு ஒன்று கிடைத்த சந்தர்ப்பங்களும் உண்டு.

தென்துருவமும் அதன் பனிப்பாளங்களும் அது கொண்டிருக்கும் மில்லியன் வருடங்களின் ரேகைகளும் உலக வரலாற்றை எழுதுவதற்கு உதவுகின்றன. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் பனிப்பாளங்களுக்கிடையில் அமிழ்ந்து போன இவ்வுலகை சாராத ஓர் நாகரீகம் இருக்கிறது. அது பல்வேறு மறைக்கப்பட்ட, தடுக்கப்பட்ட நூற்களில் பதிவாகியிருக்கிறது. அந்நகரம் இன்னொரு உலகிற்கான பாதை? அல்லது வேற்று உலகில் இருந்து வந்து ஒரு பிரமாண்ட விண்கலம்? அதில் மனிதக் கண்களுக்கு தென்படாமல் மறைந்து வாழும் “மூதாதையர்கள்”.

கடலின் மிக ஆழமான பகுதியில் இன்னொரு உலகிற்கான திறப்பு இருக்கிறது. அதிலிருந்து வெளிப்படும் க்ராகன். இவ்வுலகைச் சாராத பிரமாண்ட மன்ஸ்டர். ஓக்டபஸ் கரங்களும், ஸ்க்விட் தோற்றமும், டிராகன் இறகுகளும் கொண்ட ராட்சதன்… “மூதாதையர்கள்” வழிபட்ட ச்துல்ஹு என்ற அரக்கன்.

மேற்சொன்னவை எச்.பி. லவ்க்ராப்டின் உலகம், நெக்ரோமோனிகோன் என்ற ஓர் பண்டைய புத்தகமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள மந்திரங்களும், ச்துல்ஹு என்ற உலகிற்கான திறப்பும், அங்கிருந்து பூமியில் உலாவித்திரியும் உயிரினங்களின் குறிப்புகளும் அதில் அடங்கியிருக்கிறது.

GrandsAnciens1C1C4NF.indd

எச்.பி. லவ்க்ராப்ட், அமெரிக்காவில் வாழ்ந்த ஓர் புனைவெழுத்தாளர். கவிதை, புனைவுகள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர். எட்கர் அலன் போவை தனது ஆதர்சமாகக் கொண்டவர். போவைப் போலவே வரவேண்டும் என்ற அவாவும் அவருக்கிருந்தது. அலன் போவின் உலகம் மனிதனின் அகவுலக பயத்தை அலசியபோது லவ்க்ராப்ட் புனைவுகள் புறவுலக பயங்களை வாசகர்களிடம் ஏற்படுத்தியவர். அவர் கதைகளை வாசித்துவிட்டு டாய்லெட் கூட போகப் பயந்தவர்கள் இருந்தார்கள்.

அமெரிக்க பல்ப் எழுத்தாளர்களில் ஒருவராகவே முதலில் அறியப்பட்டாலும், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனித்துவமாக எழுதியவர். அவரது பாதிப்பில் உருவான படைப்புகளும், எழுத்தாளர்களும் இன்றும் இருக்கிறார்கள். ஜனரஞ்சக புனைவுலகில் ஸ்டீபன் கிங் இவரால் அதிகம் பாதிக்கப்பட்டவர். சினிமாவிலும் கூட லவ்க்ராப்ட் உலகம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பல்ப் எழுத்தாளர் என்பதால் காப்புரிமை பிரச்சினை இல்லை, அதனால் க்ரடிட் எதுவும் கொடுக்கப்படாமலேயே அவரது பல படைப்புகள் தழுவப்பட்டிருக்கின்றன.

ஜான் கார்பென்டரின், த  திங் திரைப்படம் லவ்க்ராப்டின் At the Mountains of Madness ஐ அடியாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான்.

சமகால இயக்குனர்களில் கியேர்மோ டெல் டோரோ, லவ்க்ராப்டின் படைப்புலகுடன் மிகவும் சிலாகித்து நோக்கப்பட வேண்டியவர். உண்மையில் எழுத்துலகில் ஸ்டீபன் கிங் எவ்வாறு லவ்க்ராப்ட்டால் பாதிக்கபட்டு அவர் படைப்புகளை உருவாக்குகிறாரோ, அதே போன்றுதான் டெல் டோரோவின் திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. At the Mountains of Madness டெல் டோரோவின் கனவுத் திரைப்படம். அதிக ஹாலிவூட் அழுத்தங்களால் பிற்போடப்பட்டுக் கொண்டே போகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வரலாம்.

1335526063

இவ்விலக்கிய, வரலாற்று பின்னணியுடன் The Ancient என்கிற க்ராபிக் நாவலை சற்று நோக்கலாம். மொபிடிக், சிந்துபாத், ப்ரான்கின்ஸ்டைன், லவ்க்ராப்ட் இவற்றின் கலவைவே இந்த கடல் சகாஸ க்ராபிக் நாவல்.

The White Whale, The Squid God என்று இரு பாகங்களைக் கொண்ட இந்த கிராபிக் நாவல், இஷ்மாயில் என்ற கடல் பயணியாகும் ஆசையில் துறைமுகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறான், அவனிடம் க்ராகன் பற்றிய கதையொன்றை சொல்கிறான் ஹெர்மன் மெல்வில்.

Call me Ishmael வெஸ்டர்ன் இலக்கியத்தில் சிலாகித்துக் கூறப்படும் வசனம். ஹெர்மன் மெல்வில் யார்? அவர்தான் மொபிடிக் நாவலை எழுதியவர். அவர் உருவாக்கிய பாத்திரத்துடன் இந்த க்ராபிக் நாவலில் இவரும் ஒரு பாத்திரமாகிறார்.

அஹப் என்ற திமிங்கில வேட்டையன் எதிர்கொள்ளும் சம்பவங்களும், புதிர்களும் கொண்டமைந்த இக்கதை மொபிடிக், லவ்க்ராப்ட், ப்ரான்கின்ஸ்டைன் கதைகளில் இருந்து பாத்திரங்களையும் தளங்களையும் உள்வாங்கி மிக்கச்சிதமான முறையில் கதையாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

லவ்க்ராப்டும் மெல்விலும் இப்புனைவில் இணைந்து கொள்கின்றனர். லவ்க்ராப்டின் உலகும் மெல்விலின் கடல் சாகஸமும் பிணைந்து ஷெல்லியின் ப்ரான்கின்ஸ்டைன் மன்ஸ்டரும் ஒரு பாத்திரமாக வருகிறது.

கடல் சாகஸத்தின் பக்கங்கள் அருமையான ஓவியங்களுடன் விரிகிறது. க்ராகன் வரும் இடங்கள் மயிர்கூச்சிடும் படியாக இருக்கின்றது.

இந்நாவலுக்குள் இலகுவாக நுழைந்துகொள்ள இப்பின்னணி அவசியமாகிறது. அப்பொழுதுதான் இதன் சுவாராஷ்யத்தை அனுபவிக்க முடியும்.

Grand Ancien என்பதுதான் இதன் ஒரிஜினல் ப்ரன்ச் வடிவம். Grand Ancien என்றால் லவ்க்ராப்டின் புனைவுலகை குறிக்கும். Cthulhu Mythos என்பதன் மொழியாக்கமே Grand Ancien. இணையத்தில் Cthulhu Mythos எனத் தேடிப்பார்த்தால் அந்த புனைவுலகின் உயிரினங்கள் எல்லாம் வரும். (தகவல் பிழைக்கு மன்னிக்கவும் Grand Ancien என்றால் Old Ones என பொருள்படும்.)

ஆழ்கடல் ஓநாய்கள் என்ற பொருத்தமில்லத தலைப்பு ஏன்? திமிங்கில வேட்டையர்களைக் குறிப்பதற்கா? அல்லது உண்மையில் ஆழ்கடலில் ராட்சத ஓநாய்கள் இருக்கின்றனவா?

Advertisements

12 comments

 1. ஒரு சுவாரஷ்யமான பதிவு. ஆழ்கடலுக்குள் சுழியோடிச் சென்று கடலின் மர்மங்களைப் பற்றி ஆராயப் போகும் ஒருவரின் அல்லது அப்படியான ஒரு திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருப்பவரின் மனதுக்குள் குமிழியிடும் “த்ரில்” இந்தப் பதிவைப் படித்துக்கொண்டு செல்லும்போதும் கிடைக்கிறது என்றால், அது மிகையன்று. தொடர்ந்தும் வரட்டும்! வாழ்த்துக்கள்!

  • நன்றி, கடல் எப்போதும் எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வருகிறது. இது அதில் ஒரு பகுதி மாத்திரமே… !

 2. நான் இதில் குறிப்பிட்டவை பற்றி துளியும் அறியாவிட் டாலும் உங்க​ பதிவு என் னை நமக்கு சமந்தமில்லாத்து என​ கடந்து போக​ வைக்காமல் ஸுவாரஷ்யத்தை படிக்கவைத் திறுக்கிறது சிறப்பாந​ கட் டுரை

 3. சத்தியமாக இப்படிப்பட்ட கிராஃபிக் நாவல்கள் இருப்பதே இப்பொழுதுதான் தெரிந்து கொள்கிறேன். சட்டென்று புத்தகத்தை எடுத்து அதில் மூழ்கி விட வேண்டும் போலிருக்கிறது. இவ்வாறான கிராஃபிக் நாவல்களை எங்கிருந்து வாங்குகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா??
  உங்கள் வர்ணனையும் எழுத்தும் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு கச்சிதமான இருக்கிறது! முதலில் வாசித்துக்கொண்டிருக்கும் போது அட்லாண்டிஸ் பற்றிய புனைகதையோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன்..

  • சத்தியமா வாங்கப் போனால் பணப்பிரச்சினை தலைக்கு அடித்துவிடும். எல்லாம் டவுன்லோட்தான்.

   வருகைக்கும் கமெண்டுக்கும் நன்றி பாஸ்.

 4. முதல்ல அட்லாண்டிஸ் பற்றிய புனைவுக்கதையோன்னு யோசிச்சுக்கிட்டு வந்தேன். சத்தியமா இப்படிப்பட்ட கிராஃபிக் நாவல்கள் இருப்பதையே இப்போதுதான் அறிந்து கொள்கிறேன். சட்டென்று புத்தகத்தை வாங்கி அதில் மூழ்கிவிட வேண்டும் போலிருக்கிறது. எங்கிருந்து வாங்குகிறீர்கள் இவ்வாறான கிராஃபிக் நாவல்களை?உங்கள் எழுத்தும் வர்ணனையும் எடுத்த தலைப்புக்கு கச்சிதமாக பொருந்திப்போகிறது.. நீங்கள் தேர்வு செய்த படங்களும் அருமை!!

 5. தலைவா.. யு ஆர் கிரேட். Magazine3k எனும் மாபெரும் சைட்டையே அறிமுகப்படுத்தி வைச்சிருக்கீங்க.. graphic novels, here i come! 🙂
  கண்டிப்பாக நல்லதா ஏதாவது கண்ணில் படும்போதெல்லாம் போட்டுத்தள்ளவும்
  மெயில்-zashonj@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s