My Neighbor Totoro (1988)

Totoro looking under the house

ஒரு திரைப்படத்தை பார்க்கும் போது அது உருவாக்கி வைத்திருக்கும் உலகில் நாமும் இரண்டு மணித்தியாலங்களுக்கு ஐக்கியமாகி விடுகிறோம். அதன் எழில், வனப்பு, இருண்மை, மூர்க்கம், அமைதியில் லயித்து விடுகிறோம். இவை உன்னத திரைமொழியின் அறிகுறிகளில் சிலவே. இவற்றையும் தாண்டி ஒரு திரைப்படத்தின் உலகம் நம் மனதுகளில் நிரந்தரமாய் தங்கிவிடுகிறதென்றால் அது ஒரு காவியமேயன்றி வேறில்லை.

“வில்லன்கள் இல்லை, மோசமான பெற்றோர்கள் இல்லை, திடிர் ட்விஸ்டுகள் இல்லை, சோகங்கள் இல்லை, விபத்துக்கள் இல்லை, சிறுவர்களுக்கிடையிலான சினிமாத்தனமாக சண்டைகள் இல்லை, பயமுறுத்தும் ஹாலிவூட் மன்ஸ்டர்கள் இல்லை. டொடோரோவுடன் ஒரு அழகான உலகை உருவாக்கியிருக்கிறார் மியஸாகி. என் மனதிலும் அவ்வுலகின் மீதான ஏக்கத்தை ஏற்படுத்திவிட்டார்” – Roger Ebert

my_neighbor_totoro_poster

My Neighbor Totoro ஜப்பானின் வால்ட் டிஸ்னி என்றழைக்கப்படும் ஹயோ மியஸாகியினால் உருவாக்கப்பட்ட அனிமி திரைப்படம். கியர்மோ டெல் டோரோவுடன் ஹயோ மியஸாகிவும் என்னை பாதித்த திரை ஆளுமைகள். இவரின் ஸ்டூடியோ கிப்லி நிறுவனத்தின் மூலம் பல அனிமி திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் 1988 இல் வெளியாகிய Grave of Fireflies உம் மிக முக்கியமான ஒன்று. இதனை இயக்கியவர் Isao Takahata. Studio Ghibli நிறுவனத்தை இவர்கள் இருவரும் சேர்ந்துதான் உருவாக்கினார்கள்.

செட்ஸுகோ, மெய் இரண்டு சின்ன சகோதரிகள் அவர்களது அப்பாவுடன் எழில்மிகு கானகத்தை அண்மியதொரு கிராமத்திற்கு வருகிறார்கள். விவசாய நிலம். ஜப்பானிய கலாச்சார அடையாளமான பலகை வீடு. பக்கத்தில் பிரமாண்டமாக வளர்ந்திருக்கும் விருட்சங்கள். அதில் இன்னும் உயரமாக வளர்ந்திருக்கும் ராஜ விருட்சம் (Camphor Tree). அனிமி திரைப்படங்களில் குறிப்பாக மியஸாகியின் படங்களில் இருக்கும் துல்லியம் இத்திரைப்படத்திலும் துலக்கமாக தெரிகிறது. வீட்டு கூரையற்ற வரன்டா கம்புகள் விழும் நிலையில் இருக்கின்றது. அதனை இரண்டு சிறுமிகளும் ஆட்டுகிறார்கள். பார்க்கும் போது எங்கே விழுமோ என்ற பயம். ஆனால் ஹாலிவூட் படங்களில் வருவது போன்று நடக்கவில்லை. இப்படியானதொரு காட்சியை சஸ்பென்ஸ், த்ரில் எல்லாம் வைத்து வியாபாரமாக்கிவிடுவார்கள் ஹாலிவூட்காரர்கள்.

experience05_02

பலகை வீடு, ரொம்ப நாட்களாக யாரும் குடிவராமல் பாழடைந்த நிலையில் இருக்கின்றது. உள்ளே ஆவிகள் குடியிருக்கின்றன. பயமுறுத்தும் பேய்களோ, விசேட ஒலி ஒளியமைப்பில் திகில் சந்தர்ப்பங்களோ அற்ற ஒரு பாழடைந்த வீடு. அந்த குட்டி குட்டி ஆவிகள்… தூசுப் பேய்கள் (susuwatari). உருண்டை வடிவில் போகுமிடமெல்லாம் அடுப்பங்கரை கரியை தேய்த்துக் கொண்டு போகும் தூசுப் பேய்கள் வீட்டில் குடிகொண்டு இருக்கின்றன. இரண்டு குட்டி சிறுமிகளும் அவற்றை தேடுகிறார்கள். அவை சிறுமிகளுக்கு பயந்து ஒளிந்து கொள்கின்றன. ஒருவாரு குட்டிச் சிறுமி மெய் (Mei) ஒன்றை பிடித்து விடுகிறாள். ஓடோடி வந்து தன் அக்காவிடம் காட்ட சின்ன கைகளை விரிக்கும் போது அதில் தூசு மட்டும்தான் இருக்கின்றது. சின்ன குழந்தைகள் கையில் சிக்கிக் கொண்ட வண்ணத்துப்பூச்சிக்கு என்ன நடக்கும்…

tumblr_lbn61uehbg1qz5t09o1_500-1

கானகப் பேய்கள், படத்தின் முக்கிய பாத்திரங்கள். பேய்கள் எனும் போது உடனடியாக எண்ணங்களில் தோன்றும் கோர, வெள்ளை, முகமெல்லாம் மறைத்துக் கொண்டிருக்கும் கூந்தலைக் கொண்ட ஜப்பானிய திகில் சினிமாவின் பேய்களுக்கும் டொடோரோவில் வரும் பேய்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கும். அழகான, க்யூட்டான, அமைதியான, ஆரவாரமற்ற, அன்பான பேய்கள்… susuwatari என்ற தூசுப் பேய், முயலைப் போன்ற உருவையொத்த தட்டை முகத்தைக் கொண்ட வால் நட்களை திருடிச் செல்லும் மகன் பேயும் தந்தை பேயும், காற்றாக வரும் பன்னிரண்டு பாதங்களையுடைய பூனை பஸ் இதன் பெரிய கண்கள்தான் ஹெட் லைட், ராட்சத உருண்டை வடிவிலான டொடோரோ இதுவும் கொஞ்சம் முயலை ஒத்ததாக இருக்கும் பன்டா கரடியை போலவும் இருக்கும். இவற்றையெல்லாம் வடிவமைத்தவர் மியஸாகியேதான். ராஜ விருட்சமும் அதனுள் தங்கி வாழும் டொடோரோ மற்றும் தந்தை, மகன் தட்டை முக முயல் பேய்களும்… எப்படியா உலகம் என்று பாருங்கள். இவற்றை பார்க்கும் போது அங்கேயே தங்கி விட வேண்டும் என்ற நிறைவேற முடியாத ஏக்கம் கொண்டாட்டமாக மனதில் பதிகிறது. முரண்.

மகிழ்ச்சியான குடும்பம், ஒரு பல்கலைக்கழகத்தில் தொல்பொருளியல் பேராசிரியராக கடையாற்றும் தந்தை, செட்ஸுகோ என்ற பள்ளிச் செல்லும் சிறுமி, துடிப்பான எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டும் என எல்லோரும் எதிர்பார்க்கும் குறும்பு பெண் மெய். ஐய்யோ என்ன அழகு செல்லம். என்னிடம் இருந்த டுவல் ஆடியோ வெர்ஷனில் ஆங்கில டப்பிங்கும் இருக்கு ஆனால் அதன் செயற்கைத் தன்மை காதுக்கு உறுத்தல். ஜப்பானிய வடிவம்தான் திரைப்படத்தை இன்னும் அற்புதமாக்குகிறது. காரணம் சரியான குரல் தேர்வு… குறிப்பாக மெய்யின் க்ரீச் மழலைக் குரல். தாய் சுகமில்லாமல் ஹாஸ்பிட்டலில் இருக்கிறாள். இதுவே வேறு ஏதும் படமாக இருந்தால் டிராமாவாகியிருக்கும். தாய் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள், இறந்து விடுகிறாள், மகள்களுக்குத் தெரியாமல் தந்தை தடுமாறுகிறார் என்று படமே எடுத்திருப்பார்கள். டொடோரோவில் வருவது இயல்பான நோய்மை… எப்போ அம்மா வீடு வருவாள், அவள் வருகைக்காக ஏங்குவதும் இயல்பாக நம் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகள். அங்கே மிகவும் மெலிதான சோகமே இருக்கும் (சோகம் என்ற பதமே இந்தப் படத்திற்கு பொறுந்தாது).

அண்டை அயலவர்கள், திரைப்படங்களின் பொதுவான அண்டைவீட்டுக் காரர்கள் போல் இங்கு யாரும் இல்லை. பாட்டி, ஒரு சிறுவன். சிறுவன் அந்த வீட்டிற்கு வரப் பயப்படுகிறான் காரணம் பேய் வீடு. பள்ளிச் செல்ல அடம்பிடிக்கும் சிறுவன். பாட்டி பேய்களுக்கு விளக்கம் சொல்வது எல்லாம் நாட்டுப்புற கதைகளின் தொகுப்பு போல் உள்ளது. அண்டை மனிதர்களின் இயல்பாக வெளிப்படும் உதவி மனப்பாங்கும் சில இடங்களில் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

soot-sprite

தூசுப் பேயை பிடித்துக் கொண்டு வந்த மெய்யிடமிருந்து திரும்பவும் கதைக்குள் போவோம், இப்படியான நிலையில் சிறுமி மெய் குட்டி தட்டை முக முயல் மகன் பேயை சந்திக்கிறாள்… அது எங்கே போகிறது என்று பின்தொடர்கிறாள்… வீட்டின் அடியால் சென்று வால் நட்களை பொறுக்கிக் கொண்டு தந்தை பேயுடன் ராஜ விருட்சத்தை நோக்கி ஓடுகிறது. சிறுமி அவற்றை பின்தொடர்ந்து சென்று டொடோரோ இருக்கும் இடத்தை அடைகிறாள். அங்கு பிரமான்டமாய் தூங்கிக் கொண்டிருக்கும் டொடோரோவின் மெத்தை வயிற்றில் ஏறி அதனுடன் விளையாடுகிறாள். அப்படியே தூங்கி விட… வீட்டில் தேடுகிறார்கள். கண்டுபிடித்தும் விடுகிறார்கள். டொடோரோவை கண்டதாக தந்தையிடம் கூறும் போது… இதுவே வேறு தந்தையாக இருந்தால் இடைமறித்து, மறுத்து, சிறுமி பேச்சை பொய்யாக்கி இருப்பார். ஆனால் தந்தை அவள் கண்டது கானகப் பேய் என்றும் அவை தான் விரும்பியவர்களுக்கே தோற்றமளிக்கும் என்றும் கூறுகிறார். சிறுமி செட்ஸுகோ தானும் பார்க்க வேண்டும் என்கிறாள். சந்தர்ப்பம் வரும்போது பார்க்கலாம் என்கிறார் தந்தை.

அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் கதை… இப்படியெல்லாம் போட முடியாது. காரணம் அப்படியொன்றும் சஸ்பென்ஸ், ட்விஸ்ட், திரைக்கதை நுணுக்கம் எல்லாம் இல்லை. இது ஒரு அனுபவம். அற்புத அனுபவம்.

catbus

அனிமியில் துல்லியமான காட்சிகள், பொதுவாக ஏனைய அனிமேஷன் (2டீ) படங்களில் பின்னணி காட்சிகளுக்கு பாத்திரங்கள் சம்பவங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போல் கொடுப்பதில்லை. ஆனால் மியஸாகியின் அனிமிக்களில் மரங்கள், இலைகள் அவற்றின் நிகழ்கள், காற்றில் அவற்றின் அசைவுகள் (நிழலும் அசையும்), கண்ணாடி போன்ற நீர் நிலைகள் அவற்றின் உள் இருக்கும் விட்டுச் சென்ற போத்தல் எல்லாமே டீடைலாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். பெரும்பாலும் நீர்வர்ண (water color) ஓவியங்களைப் போலவே இக்காட்சிகள் இருக்கும்.

பாத்திரங்களின் படைப்பு, அனிமியின் பொதுவான கூறுகளான தட்டையான முகம், அதில் பெரிய கண்கள், சிறிய மூக்கு எல்லாம் இதிலும் இருக்கும். மனிதர்களின் உணர்வுகளை, பண்புகளை அவர்களின் கண்கள் சொல்லிவிடும் என்பதனால்தான் அனிமியில் கண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

My+Neighbor+Totoro_wallpapers_264

ஆபத்துகள் இல்லை, கோபமான தந்தையில்லை, ட்விஸ்ட்கள் இல்லை, மூன்று அங்க அமெரிக்கத்தனங்கள் இல்லை இருந்தும் புன்னகை, புன்னகை, புன்னகை மாத்திரமே இத்திரைப்படத்தை அனுபவிக்கும் போது வந்து வந்து போகிறது. வாழ்வில் ஒரு போதும் மறந்துவிட முடியாத திரையனுபவம் என்றால் அது மிகையாகாது.

இத்திரைப்படத்தை பார்த்து முடித்ததும் பதிவொன்றை எழுதுமுன் Roger Ebert இன் விமர்சனத்தை படித்துப் பார்த்தேன்… எழுத நினைத்தை அனைத்தையும் இந்த மனிதர் பதிவு செய்திருக்கிறாரே என்ற ஆச்சரியம். பல இடங்களில் அவர் விமர்சனத்தின் பகுதிகள் போல் இருக்கும் தவிர்க்க முடியாது. இது அவரின் அற்புதமான விமர்சனம் படித்துப் பாருங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s