Grave of Fireflies (1988)

Grave-of-the-Fireflies_000

உணர்வுகளி மூச்சுக்காற்றை காட்சிகளில் கொண்டுவருவதென்பது எந்தளவுக்கு சாத்தியம்?

அனிமேஷன் திரைப்படங்களில் இருக்கும் பொதுவான கூறுகள் எனப் பார்த்தால் அதில் சித்தரிக்கப்படும் பாத்திரங்கள் யதார்த்த உலகின் மாந்தர்களுக்கு முரணானதாக அமைந்திருக்கும். நிஜவுலகில் நாம் காணும் முயலுக்கும் Bugs Bunny க்கும் பாரிய வித்தியாசங்கள் இருக்கும். நிஜ மனிதர்கள் நடிக்கும் சினிமாவில்தான் உணர்வுகளை வடிக்க முடியும் என்கிற நியதியை உடைத்துப் போட்ட அனிமேஷன் திரைப்படங்களில் Grave of Fireflies மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது என்றால் மிகையாகாது.

இரண்டாம் உலக யுத்த காலக்கட்டத்தில் நடக்கும் இக்கதை. செய்ட்டா என்ற பதின்பருவ சிறுவனையும் அவன் 5 வயது தங்கை செட்ஸ்ஸுகோ பற்றியும் பேசுகிறது.

முதல் காட்சியிலேயே செய்ட்டா பசியுடன் தெருவில் வீழ்ந்து கிடக்கிறான். அவன் நினைவுகளில் செட்ஸ்ஸுகோவின் குரல் ஒலிக்கிறது. பசியின் உச்சத்தில் கிடைக்கும் ரொட்டித் துண்டைக் கூட உண்ண திரணியில்லாமல் கிடக்கிறான். செட்ஸ்ஸுகோவின் குரலைக் கேட்டுக் கொண்டே அவன் உயிர் பிரிகிறது.

செய்ட்டாவின் ஆன்மா விடுதலையடைந்து செட்ஸ்ஸுகோவுடன் இணைகிறது. இருவரும் இரயில் பயணிக்கின்றனர்… அந்தப் பயணம் காலத்தால் பின்னோக்கிச் செல்கிறது.

எச்சரிக்கை சைரன் ஒலிக்க, செய்ட்டா அவசர அவசரமாக உணவுப்பொதிகளை நிலத்தில் புதைக்கிறான். ஏதும் அறியாமல் விளையாட்டுப் பிள்ளையாய் இருக்கும் செட்ஸ்ஸுகோவை தூக்கிக் கொண்டு ஓடுகிறான் செய்ட்டா. அவனுடன் அவன் அம்மா வருவதில்லை, அவள் வேறுபக்கமாக செல்கிறாள்.

செட்ஸ்ஸுகோவுடன் தனித்து விடப்படுகிறான் செய்ட்டா… யுத்தத்தின் குரூர கரங்களால் தாய் தீக்கிரையாகிறாள். இந்த வலியை அடக்கிக் கொண்டு செட்ஸ்ஸுகோவை பொறுப்பேற்கிறான். அம்மா எங்கே எனக் கேட்கும் தங்கைக்கு விளையாட்டுக் காட்டுகிறான். இனிப்பு மிட்டாய் கொடுக்கிறான்.

பின்னர், அத்தையின் வீட்டுக்கு இருவரும் வருகிறார்கள். முதலில் அவர்களைக் கவனிக்கும் அத்தை பின்னர் சூழ்நிலையோ மனிதப் பண்புகளில் ஒன்றோ தெரியவில்லை… இருவரையும் இதற்கு மேல் பொறுப்பேற்று பார்த்துக்கொள்ள முடியாது என்று கூறுகிறாள். செய்ட்டாவும் இதனை புரிந்துகொள்கிறான்.

அத்தையை விட்டு விலகி இருவரும் தனியே விடப்பட்டிருக்கும் ஒரு பாதுகாப்புக் குகையொன்றில் வாழத்துவங்குகிறார்கள்.

Grave-Of-The-Fireflies-post

பசி.

பசி, இதுதான் படத்தின் முக்கியப் பாத்திரம். யுத்தத்தின் கோரப்பிடியில் அகப்பட்டுக் கொண்டவர்களின் வாழ்க்கையை, உணர்வுகளை செய்ட்டாவின் பார்வையிலும் ஒன்றுமே அறியாத சிறுமி செட்ஸ்ஸுகோவின் குழந்தைத்தனமான சோகங்களின் மூலமும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சின்ன சின்ன விடயங்களின் மூலம், மிகவும் நுணுக்கமாக அமைக்கப்பட்ட காட்சிகள் மூலம், நீர்வர்ண பின்னணி ஓவியங்களின் மூலம், செட்ஸ்ஸுகோவின் கண்கள், சிரிப்பு, அழுகை, குறும்புத்தனம், பேச்சு… இவ்விடத்தில் கண்களில் நீர் ததும்புவதை தவிர்க்க முடியவில்லை, திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது இந்த மின்மினிகளின் கல்லறை.

ஒவ்வொரு காட்சியும் நிதானமான கவிதையாகவே இருக்கிறது. எந்த இடத்திலும் அவசர அவசரமாக காட்சிகள் கத்தரிக்கப்படவில்லை… ஒவ்வொரு காட்சியிலும் ஹைக்கூ இருக்கிறது.

இரவில் மின்மினிகளுடன் விளையாடும் காட்சிகள் இதற்கு சிறந்த உதாரணம். மின்மினிகளும் போர்விமானங்களின் குண்டு வீச்சுகளும் அடுத்தடுத்து காட்டப்படுகிறது.

படத்தின் துவக்கத்திலேயே செய்ட்டாவும் செட்ஸ்ஸுகோவும் உயிர் பிரிந்து விட்டார்கள் என்பது தெளிவாக காட்டப்படுகிறது. படத்தின் முடிவு தெரிந்துவிட்டதே… ஆனால் இப்படத்தில் சொல்லவரும் விடயம் மரணமல்ல.

போர்விமானங்களில் இருந்து விழும் எந்த குண்டுக்கும் செய்ட்டாவைப் பற்றியோ அவனது குறும்புக்கார தங்கை செட்ஸ்ஸுகோவைப் பற்றியோ தெரியாது. அதற்கு மனிதர்களைப் பற்றியோ அவர்களின் உணர்வுகளைப் பற்றியோ தெரியாது.

தெரியவில்லை, இதனை யாராவது ஒரு போர்விமானி படிக்க நேர்ந்தால் ஒரு நிமிடம் குண்டு போடும் விசையை அழுத்தும் முன் தங்கை, அண்ணன், அப்பா, அம்மா, பாட்டன், தம்பி போன்ற மனிதர்கள் மீதுதான் விழப்போகிறது என்று… மாறாக இத்தனை தலைகள் என்ற இராணுவ எண்ணிக்கைகள் அல்ல என்பதை உணர்ந்துகொள்ளட்டும்.

இத்திரைப்படத்தை ஒவ்வொருவரும் பார்த்து உணர்ந்துகொண்டாலே அது தரும் கனத்தை அனுபவிக்க முடியும்.

கடைசியில் செய்ட்டாவும் செட்ஸ்ஸுகோவும் போர் நினைவுகளின் மேல் கட்டியெழுப்பப்பட்ட நவீன நகரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரவின் மின்மினிகள் ஒளியில் இருண்ட குகை ஒளிர்கிறது… அதில் அவர்கள் நிம்மதியாக உறங்குகின்றனர்.

இரவின் போர்விமானங்களின் ஒளியில் பசுமைபூமி சிதைந்து சிதிலமாகிறது… அதில் எதுவும் மிஞ்சுவதில்லை. வலிகளைத் தவிர.

இரவின் மின்மினிகளே நமக்குத் தேவை…

ஸ்டூடியோ கிப்லி, பற்றி அறிந்திருப்பீர்கள். ஹயோ மியஸாகியின் அற்புத அனிமிக்களை கொண்டுவரும் நிறுவனம். இதுதான் இத்திரைப்படத்தையும் வழங்கியிருக்கிறது.

இதன் இயக்குனர் Isao Takahata.

Advertisements

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s