நள்ளிரவு…

Image

இரவு பன்னிரண்டு அடிக்க தஸ்லிம் வர்றானாம்.

இடியாப்பத் தட்டு, பிரம்பு, புட்டு பம்பு எக்ஸ்ட்ராவா வேறு கைத்தொழில் தெரியாது. கிழமையில் ஆறு நாள் வேலை. வெள்ளி பள்ளி. அப்புறம் நடுவுல இருக்குற சனி ஞாயிறு எல்லாம் வீட்டில் தான். சுய தொழில். திங்கள் தொடக்கம் வியாழன் பிஸ்னஸ் ட்ராவலிங். இடைக்கிடை பொண்டாட்டி வசவுகள். தெரிஞ்சவங்க ஸலாத்துக்கு பதில். இது தஸ்லிம் தினசரி. அந்த வெள்ளி இதில் சேத்தி இல்ல.

ஊரை விட்டு வெளியில் போவதென்றால் இரண்டு டவுன்களுக்குத்தான் போவான். ஒன்று கம்பளை அடுத்தது அக்குறணை. ஈஸ்ட்மன் கலர் காலம் என்பதால் போக்குவரத்து குறைச்சல். ஊருக்கென்று தனியான பஸ் சேவைகள் இல்லை. அது இன்னும் பத்து வருஷம் கழித்துதான் வரப்போகுது. அதாவது நான் பிறந்த வருடத்தில்.

அந்த இரண்டு நகரங்களும் அன்றைய வல்லரசுகள். (ஙே) லோக்கல் பிஸ்னஸ் பண்ண போற ஏரியாக்கள். அதைத் தாண்டி போக முடியும் ஆனா தஸ்லிமுக்கு சரிபட்டு வராது. எங்கும் தங்கி பழக்கமில்லை. 6 மணிக்கு முன்னாடி வீட்டு வாசல்ல காபி குடித்துக் கொண்டு இருக்க வேண்டும்.

இரவு பன்னிரண்டு அடிக்க தஸ்லிம் வர்றானாம்.

அன்றைய தினம் டார்கெட் கம்பளை. கொஞ்சம் தூரம்தான். வேலையை முடித்து விட்டு லுஹர் தொழுகையுடன் கிளம்பி விட வேண்டும் என்று ப்ளான். அப்படி நடக்காது ராசா.

கம்பளையின் ப்ளாஷ்பேக் காட்சிகள் அற்புதமாக இருந்தன. இயற்கையும் தொழிற்புரட்சியும் நண்பர்கள் போல் தோன்றிய காலம் என்பதால் அழகியலுக்கு பஞ்சமிருக்கவில்லை. இடியாப்பத்தட்டு மட்டும் அமோக விற்பனை. முப்பத்தியிரண்டு பற்களும் விளம்பர அனுசரணை. ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு கூடை நிறைய இடியாப்பத் தட்டுகள். போன முறை புட்டு பம்புகள்தான் நல்லா பிஸ்னஸ். அது நோன்பு பெருநாள். 😉

இன்னும் ஏதாவது விட்டு போயிருக்கா?

காலையில், அதிகாலையிலேயே போய்விடுவான். கையில் இருபது வருஷ கூடை. பத்திலிருந்து உழைப்பு. எப்பவும் சட்டையின் உள் வைத்துத் தைக்கப்பட்ட சில்லறை பொட்டலம். அதை வெளியே எடுத்து எடுத்து சட்டை அசிங்கமாகி விட்டிருந்தது. அதை எவன் பார்க்க போறான். காலையில் வீட்டில் காபி குடித்தால் பிறகு பத்து மணிக்குத்தான் காலை சாப்பாடு. எங்காவது ப்ளாக் அன்ட் வொய்ட் டீவி ஓடும் குட்டி ரொட்டிக் கடையில் தான் சாப்பாடு. தாழித்த தேங்காய்ச்சம்பலும் கோதுமா ரொட்டியும். இப்பவே வாயூறுதே. அப்படியே ஒரு சாயா. தண்ணி குடிக்காம அந்த உரப்பு வாயோட சுடச்சுட ப்ளேன் டீ அடிச்சா ஸ்ஸ்….

காக்கா, தம்பி, தாத்தா, தங்கச்சி… பேசிப் பேசி வியாபாரத்த முடித்து விட்டு பார்த்த போது மணி மூன்றாகியிருந்தது.

இரவு பன்னிரண்டு அடிக்க தஸ்லிம் வர்றானாம்.

மூன்றான போது இருந்த ஒரே வேன் கண்டிக்கு வர்றதுக்கு. ஃபுல் லோட். விழித்து நிற்க.

“காக்கா, என்ன இன்னிக்கு லேட் போல…?” ஊரின் பெரும்புள்ளி. ஒத்த காருக்கு சொந்தக்கார்.

“ஓ ஹாஜி! பாருங்களே…” கவலையப்பிய முகத்தில் பீதியும் ஊர்ந்து கொண்டு இருந்தது.

“ஒரு நாலு மணி வரைக்கும் இருங்க… நா கண்டி பக்கம்  போவனும் அப்படியே ஏத்திக் கொண்டு போறேன்… யார்ட்டையும் சொல்ல வேணாம்” பெரும்புள்ளி வில்லங்கமாக நகர தஸ்லிம் அஸர் தொழ பள்ளிக்குள் நுழைந்தான்.

நாலு அஞ்சு… கண்கலங்க இன்னும் ஐந்து நிமிடங்களே இருக்கு.

“காக்கா… டக்குனு வாங்கோ”

நீதானே புன்னகை மன்னன்.

விர்ர்ரூம்…… அப்படி போனா என்ன செய்ய முடியாது. சராசரிக்கும் சற்றே கூடிய வேகத்தில் பயணித்த காரில் ஊர் வம்பும் கத்தம் பாத்திஹாவும் சேர்ந்து கொண்டது. எவ்வளவுதான் பேசினாலும் தஸ்லிம் மனம் ஆறு மணியிலேயே இருந்தது. சரியாக பேராதனியவை அடைந்த போது – காரின் முக்கியமான பகுதி ஏதோ சொல்வாங்களே அது – அடைத்துக் கொண்டது. ஆறு மணிவரை பழுது பார்க்கப்பட்டிருக்கும் என்பதை சொல்லவா வேண்டும்.

இரவு பன்னிரண்டு அடிக்க தஸ்லிம் வர்றானாம்.

கண்டி வந்து சேர்ந்த போது ஏழரை ஆரம்பித்து இருந்தது. நடு ரோட்டில் டாட்டா சொல்லிவிட்டு மறைந்தார் பெரும்புள்ளிக்கார்.

அப்படியே நடுக்கடல் தனித்த படகு போல் நடு கண்டியில் இருந்தான் தஸ்லிம். இனி ஒன்றும் செய்ய முடியாது அப்படியே நடக்க வேண்டியதுதான். அதுதான் ஒரே வழி. நல்லவேளை கூடையில் ஒன்றுமிருக்கவில்லை. வாங்கிய வடையும் சூடாறிப் போய் இருந்தது. பசி, வடை – வேண்டாம் எண்ணை – பசியுடன் வீர நடை போட்டான் தஸ்லிம். லேசான தூரமா அது. இரவு நேரக் கண்டியை ரசிக்க முடியவில்லை. இரண்டு காரணங்கள் வெளிச்சம் போதாது மற்றது இவனுக்கு அந்த மூட் இல்லை.

திரும்பி பார்த்து பார்த்து நடந்தான். ஏதாவது வண்டி வரும் என்ற நப்பாசை. வந்தது. அவனுக்கு முன்னால் ரோட் மாறி போய்விட… கண்ணில் நீர். 😥

இன்னும் கொஞ்ச தூரம்தான்… மஹிய்யாவ போக்குவை (குகைவழிப்பாதை) கடந்துவிட்டால் எல்லாம் ஹைர். அதையும்தான் பார்ப்போமே.

மஹிய்யாவ போக்கு (குகைவழிப்பாதை). மேலே இரயில் பாதை அடியில் வாகன பாதை – இரயிலும் ஒரு வாகனம்தான் என்றாலும் அது இரயில் – சுற்றிவர அழகிய வனம், அது அந்த நேரம். இப்போ கடைகளும் கவர்ன்மென்ட் தடைகளும் நிறைந்து இருக்கின்றது. மஹிய்யாவ பொது மயான பூமி பெரும்பகுதியை பிடித்து இருக்கின்றது. அப்படியான அந்த அழகிய பின்னணியில் ஒரு ஜீவன் தனித்து நடக்கிறது… தஸ்லிம்.

இரவு பன்னிரண்டு அடிக்க தஸ்லிம் வர்றானாம்.

டங் டங் டங்… திடுக் திருப்பம்.

விறகு விற்க போன சுகதபால வெற்று வண்டியில் திரும்பிக் கொண்டிருந்தான். ரெட்டை மாட்டு வண்டி. இவன் வண்டிய நிறுத்தாமலேயே அவன் நிருத்தி… “டக்கென்று ஏறு…. கட்டுகஸ்தொட்டை வரைக்கும்தான்… ம்ஹ்ம் ம்ஹ்ம்.. போ போ” (சிங்களத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டது) மறுபடியும் ஊர் வம்பு ஏறிக் கொண்டது இம்முறை கத்தம் பாத்திஹா இல்லை.

மஹாவலி ஆற்றைக் கடக்கும் பெரியபாலத்தை அடைந்த போது. மணி பத்தாகியிருந்தது. மஹாவலி ஆறு நாட்டின் மிகப்பெரும் ஆறு… கட்டுகஸ்தொட்டையை கடந்து ஏ9 பாதைக்கு செல்ல இருக்கும் வழி. இரு மருங்கிலும் மூங்கில் காடுகளும் அடர்ந்து வளர்ந்த கோரைப் புற்களும் நிறைந்திருக்கும். பாலம் கட்டும் போது ஏழு பேர் அதிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்றொரு கதையும் இருக்கு. ஆனால் பலர் சொல்வது அவை ஆற்றுப் பிசாசுக்கு கொடுக்கப்பட்ட நரபலி என்று. போன மாசம் கூட ஒரு தற்கொலை நடந்தது. அந்த அழகிய ஆற்றுப்படுகையில் தஸ்லிம் தனித்து விடப்பட்டான். சுகதபால கொடுத்த தீப்பந்தத்தை பற்றிக் கொண்டு நடந்தான்.

இரவு பன்னிரண்டு அடிக்க தஸ்லிம் வர்றானாம்.

ஊர் வாசலை அடைந்த போது கவலையப்பிய முகம் மாறி பீதி நிறைந்து வெளிறிப் போன பிணமாக தோன்றியது. கூடவே தீப்பந்த நெருப்பின் ஒளி அந்த முகத்தில் படுவதை கற்பனை செய்து கொள்ளவும்.

பத்து மணியிலிருந்து பத்து முப்பது வரையிலான காலப்பிரிவில் நத்தை வேக நடையுடன் போவோமா இல்லை வேண்டாமா என்ற சிந்தனையில் புளியமரத்தை கடந்து விட்டிருந்தது தீப்பந்த வெளிச்சத்தில் பின்னோக்கி பார்த்த போது கன்பர்ம். வாழ்நாளில் இதுதான் முதற்தடவை தனியே இரவில் பயணிப்பது. அதுவும் நள்ளிரவுக்கு இன்னும் கொஞ்ச நேரமே இருக்கும் நிலையில்.

புளியமரத்தை கடந்ததே பெரிய விஷயம். இனி தைரியமா போகலாம். என்னவொரு நப்பாசை. வீட்டை அடைய இன்னும் கொஞ்ச தூரம்தான் ஆனால் அவரசபட்டு அதிரடி நடவடிக்கை எதனையும் எடுக்கக் கூடாது. நத்தை.

தீப்பந்த ஒளி அற்புதமானது அதே நேரம் இரவில் எவ்வித வெளிச்சமும் இல்லாத நிலையில் அவ்வொளி இவன் கண்ணில் பட்டு தெரியும் காட்சி (அதை அவனால் பார்க்க முடியாது) தீப்பற்றி எரியும் போது கேட்கும் சிட் சிட் பட பட. நான்கு அடி சுற்றளவில் தெரியும் ஒளியும், அது பற்றிப் பிடிக்கும் பாதையையும் வைத்துக் கொண்டு ஒன்றரை கிலோ மீட்டர் செல்வதென்பது. யப்பா பிரயத்தனம்.

எங்கோ தொலைவில் லாந்தர் விளக்கின் ஒளி தெரிய. புன்னகை. அதுவும் மறைய. ஆவ்வ்.

தஸ்லிம் வீட்டுக்குச் செல்ல நான்கு குறுக்குபாதைகள் இருக்கின்றது. ஆனால் அவையனைத்தும் பகல் வேளையில் மாத்திரமே அக்டிவ்வாக இருக்கும். இரவில், என்ன விளையாடுறியா? இப்போ போற பாதை நேர்பாதை.

அந்த நேர்வழியைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம். மண்பாதை இரண்டு பக்கமும் காடாகிப் போயிருக்கும் தோட்ட மரங்கள். மா, பலா, வாழை, தென்னை, கொய்யா என்று முதலாம் ஆண்டு புத்தகத்தில் கணேஷ் வீட்டில் வளரும் மரங்கள் எல்லாம் இருக்கின்றது. ஏனைய காட்டு மரங்களும், செடிகளும், கொடிகளும், புற்களும், வௌவால்களும், ஆந்தைகளும் – இப்ப ஒரு ஆந்தை அலறுகிறது. சில மரங்கள் அமானுஷ்யமானவை அவைகளுக்கு தனித் தனியே கதைகள் உண்டு. ஒரு விஷக்காய் மரம் அதன் கீழே பாழடைந்த ஒரு கிணறு, இது அவன் நடந்து செல்கையில் இடப்பக்கமாக இருக்கும் வயல்வெளியில் இருக்கின்றது. துரதிஷ்டவசமாக தீப்பந்த ஒளியில் கிணறு மாத்திரம் தெளிவாகத் தெரிந்தது.

இரவு பன்னிரண்டு அடிக்க தஸ்லிம் வர்றானாம்.

சப்தங்கள்: ஆந்தையின் அலறல், சருகுகளின் காற்று நடனம், தீப்பந்த கற்றைகளின் சிட் சிட் பட் பட், பின்தொடரும் நிழலின் குரல், களைப்பின் சுவாசம், இராப்பூச்சிகளின் சம்பாஷனை.

க்ளிங் க்ளிங்.

இரவு பன்னிரண்டு அடிக்க தஸ்லிம் வர்றானாம்.

இரவின் நடுப்பகுதியில் இதய வேகம் சராசரியை கடக்க.

திரும்பாதே தஸ்லிம்.

சப்தங்கள் மெளனமாயின.

க்ளிங் க்ளிங்.

தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s