பசுபிக் ரிம்: கோயாவின் ராட்சதர்கள்

இரவின் நகரத்தை நிர்மூலமாக்கிவிட்டு அலட்சியமாக நடந்து செல்லும் கொலோசஸ், ராட்சதன். The Colossus (the Giant) by Fransco Goya.

தூரத்தில் ப்யூஜி எரிமலை. பெரும் அலைகளுடன் கொந்தளிக்கும் கடல். The Great Wave off Kanagawa by Katsushika Hokusai.

ஹொகுசாயின் பெரும் அலைகளுக்கு நடுவே ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் கோயாவின் ராட்சதர்கள். Pacific Rim by Guillermo del Toro.

Image

கைஜு, ஜப்பானிய மொழியில் விநோத பிராணி (Strange Beast). இதற்கு முன்னர் ஹாலிவூட் திரையில் கண்ட கைஜு ரோலண்ட் எமரிச்சின் காட்ஸில்லா. அதற்கு முன்னரே ஏராளமான கைஜு திரைப்படங்கள் ஜப்பானில் வந்துள்ளது. ஜப்பானிய திரைப்பட தோற்றம் முதற் கொண்டே இவ்வகையான ஜயன்ட் மன்ஸ்டர் திரைப்படங்கள் வர ஆரம்பித்து விட்டன. கைஜுக்கள் நியூக்லியர் பாதிப்பால் விகாரமடைந்த ஜந்துக்கள், வேற்றுகிரகத்தில் இருந்து வரும் கைஜுக்கள், பண்டைய உயிரினங்களின் நீட்சி இப்படி வகை வகையான கைஜுக்கள் ஜப்பானிய சினிமா, மங்கா காமிக்ஸ், அனிமி, வீடியோ கேம்கள் போன்றவற்றில் அதிகமாக உலாவருபவை. கொஜிரா, காமெரா, காட்ஸில்லா என்று பல்வேறு வகையான கைஜுக்கள் திரையில் தோன்றி நகரங்களை நிர்மூலமாக்கி, சிறுவர்களை காப்பாற்றி, யுத்த தளபாடங்களை அழித்து, நகர தொழிற்சாலைகளை அழித்து, அணுசக்தி நிலையங்களை உணவாகக் கொண்டு வில்லனாக, நண்பனாக, புதிராக இந்த கைஜுக்கள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

Mecha Anime (Mecha Culture) ராட்சத மனித உருவ ரோபோக்களை வைத்து உருவாக்கப்பட்ட அனிமி படங்கள். இவற்றை இயக்க பைலட்கள் தேவை. ஏலியன்களிடமிருந்து மனிதர்களை காப்பாற்ற இந்த மெக்காக்களப போரிடும். இதுவும் ஜப்பானிய திரையுலகின் கொடைதான்.

கைஜு, யேகர்ஸ் (ஜெர்மனிய மொழியில் வேட்டைக்காரன்) இரண்டு கிழக்காசிய கலாசாரத்தின் கதைகளில் இருந்து உள்வாங்கி உருவாக்கப்பட்ட பிரமாண்ட திரைப்படமே பசுபிக் ரிம். இயக்குனர் கியர்மோ டெல் டோரோவின் இந்த படைப்பு ஹாலிவூடுக்கும் நமக்கும் புதியது. படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லிவிடலாம், பூமியை அழிக்க வரும் வேற்றுகிரக மன்ஸ்டர்களிடமிருந்து அதனை காப்பாற்ற உலக அரசாங்கம் யேகர்களை உருவாக்குகிறது இந்த முயற்சியும் அதன் முடிவும்தான் கதை. இந்த மாதிரியான படங்களை ஏற்கனவே பல தடவைகள் ஹாலிவுடில் வந்திருக்கின்றன அவர்களும் சளிக்காமல் அம்மாதிரியான படங்களை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இவ்வாறனதொரு கதைக்களனை எடுத்துக் கொண்டு கலைத்துவமாக மாற்றியிருக்கிறார் டெல் டோரோ. (இங்கு “கலைத்துவம்” என்று எதனை குறிப்பிடுகிறேன் என்று கட்டுரையின் முடிவில் விளங்கும்.)

Image

நச்சுவாயுக்களால் நிரம்பி அழிவின் விளிம்பில் இருக்கும் பூமி. பசுபிக் பெருங்கடலுக்கடியில் இன்னொரு உலகுக்கும் பூமிக்குமிடையில் வாசல் திறக்கப்படுகிறது அதனுள்ளிருந்து ராட்சத ஜந்துக்கள் ஒவ்வொன்றாக பூமியை அழிக்க படையெடுக்கின்றன. ஒவ்வொரு முறையும் எதிராளியின் சக்தியை அனுமானித்து அதற்கேற்ப ஈடுகொடுக்கக் கூடிய பலம் பொருந்திய கைஜுக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றது. இவற்றின் ஒரே இலக்கு பெரு நகரங்களை நிர்மூலமாக்குவதே. இவ்வாறு முதலில் அழிவு அதன் பின்னர் அதிலிருந்து பாடம் படித்து பின் யேகர் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட யேகர் திட்டம் வெற்றியளித்தாலும் அதனை இயக்குவதற்கு ஒரு பைலட்டால் முடியாது என அறிந்து இரண்டு பைலட் முறையை உருவாக்குகிறது பான் பசுபிக். இரண்டு பைலட்டுகள் ஒன்றிணைந்து பிரமாண்ட இயந்திர மனிதனை இயக்குவது அவ்வளவு எளிதான வேலையில்லை, இரண்டு drifter களினதும் எண்ணங்களும், சிந்தனைகளும் ஒன்றிணைய வேண்டும், ஆனால் அடுத்தவரின் எண்ணகளை சிதைக்கவோ, தனது சிந்தனைகளை திணிக்கவோ கூடாது அதாவது வேறுபாடுகளை அங்கீகரித்து உடன்பட்ட பின்னர்தான் யேகர்களை இயக்க முடியும். இது மனித உணர்வுகள், எண்ணங்கள், சிந்தனைகள், கொள்கைகள் ஒன்றாக இருப்பதில்லை ஆனால் நாம் அவற்றை புரிந்துகொண்டு அங்கீகரித்து ஒற்றுமையாய் வாழவேண்டும் என்பதனை உணர்த்துகிறது. இதன் பின்னர் யேகர்களுக்கம் கைஜுக்களுக்கு நடக்கும் சமரும் அதன் முடிவும்தான் பசுபிக் ரிம். இவ்வாறானதொரு சூழலில் பிற ஹாலிவூட் படங்களாக இருந்தால், ராட்சத மிருகம் ஒன்று திடிரென்று நகரை நிர்மூலமாக்க வந்தால் என்ன செய்வார்கள். முதலில் பெரும் அழிவு ஏற்படும் அதன் பின்னர் அமெரிக்க ராணுவம் ஒன்றுகூடும் திட்டமிட்டு வெற்றி தோல்வி பின்னர் மறுபடியும் வெற்றி. இவ்வளவும் ஒரே நாளில் அல்லது ஒன்றிரண்டு வாரங்களில் நடந்து முடிந்துவிடும். அமெரிக்க ராணுவம் அவ்வளவு சாணக்கியம் படைத்தது!? ஆனால் பசுபிக் ரிம் படத்தில் அவ்வாறு காண்பிக்கப்படவில்லை ஒன்றிரண்டு வாரங்களிலோ மாதங்களிலோ இது நடந்து முடிவதில்லை வருடக்கணக்கில் நடக்கிறது. இப்படியானதொரு நிலைமை வந்தால் யதார்த்தம் இப்படித்தான் இருக்கும். அடுத்து அமெரிக்கா மட்டும் உலக நாயகனாக இந்த படத்தில் சித்தரிக்கப்படவில்லை. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்தே இதனை சாதிக்கிறது.

இந்த கைஜுக்கள் வேற்றுகிரக ஏலியன்களால் உருவாக்கப்படும் க்ளோன்கள். ஒவ்வொருமுறை அனுப்பப்படும் கைஜுக்கள் மேலும் பலம்பொருந்தியதாக எதிராளியின் பலங்களை பலவீனங்களை அறிந்து அதற்கேற்ப செயற்படுபவையாக இருக்கின்றது. ஒவ்வொரு கைஜுவும் பூமியின் விலங்குகளின் மாதிரிகளை வைத்து உருவாக்கியிருக்கிறது டெல் டோரோ மற்றும் கன்சப்ட் ஆர்ட் குழு. அவற்றின் முழுத்தோற்றமும் அவ்வளவு துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. (கொரில்லா தோற்றத்தில் இருக்கும் Leather Back – Kaiju Category 4) அவற்றின் தோல் இடுக்குகளில் தெள்ளு கூட இருக்கிறது. பொதுவாக ஏனைய மன்ஸ்டர் திரைப்படங்கள் போல் அல்லாது டெல் டோரோவின் படங்களில் அவற்றுக்கென்று தனியானதொரு அறிவியலை உருவாக்கிவிடுவார் ஏற்கனவே இவரது ப்ளேட் 2 திரைப்படத்தில் வெம்பயர்களுக்கென்று தனி அறிவியலை உருவாக்கியிருப்பார். அதே போல் இங்கும் கைஜு உயிரியலையும் உருவாக்கியிருக்கிறார். உதாரணத்திற்கு கைஜுக்களின் உடம்பில் வாழும் தெள்ளுகளுக்கு அமோனியாதான் உயிர் மூலதனம். கைஜுக்கள் இவ்வுலகில் நிலைத்திருப்பதற்கு நஞ்சாக்கப்பட்ட சூழலும் காரணம். மனிதம், அறம், சூழலியல் இவ்வாறான கூறுகளை வேறு ஒரு இயக்குனர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தால் கண்டிப்பாக அவற்றை நாம் பார்த்திருக்க முடியாது. மாறாக அமெரிக்க புராணம்தான் படம் முழுக்க வியாப்பித்திருக்கும்.

யேகர்கள், ஜப்பானிய மெக்கா அனிமி வடிவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவை. ஆனால் அனைத்தும் மிகவும் புதிய கன்சப்ட்கள். இரண்டு மல்யுத்த வீரர்கள் சண்டையிட்டால் எப்படி தத்ரூபமாக இருக்குமோ அப்படித்தான் இந்த கைஜு யேகர் சமர் இருக்கின்றது. ஜிப்ஸி டேன்ஜர் ஒரு வெஸ்டர்ன் கௌபாயை ஒத்ததாக அமைக்கப்பட்டிருக்கிறது. படத்துக்கென்று உருவாக்கப்பட்ட மாதிரிகளில் மெயிக்கோ யேகரும் ஒன்று ஆனால் படத்தில் காண்பிக்கப்படவில்லை அநேகமாக அடுத்த பாகத்தில் வரும்.

படத்தில் யேகர்கள், கைஜுக்களுக்கு பிறகு மனதில் நிற்கும் பாத்திரங்கள் கைஜு விஞ்ஞானி நிவ்ட் (Newt – Charlie Day) மற்றும் ஹனிபல் சொவ் (Hannibal Chow – Ron Perlman) நிவ்ட்தான் கைஜுக்கள் பற்றிய உண்மைகளை கண்டறிந்து தெரிவிக்கிறார். எல்லா மன்ஸ்டர் விஞ்ஞானிகளையும் போலவே இவரும் கைஜு பைத்தியம். ஹினிபல் சொவ் இப்படியொரு பாத்திரத்தையும் அதன் பின்னணியையும் வேறு எந்த மன்ஸ்டர் படங்களிலும் பார்த்திருக்க முடியாது. இவரது தொழில் கறுப்புச் சந்தையில் கைஜு உடல்பாகங்களை விற்பது. இவருக்கும் நிவ்ட்டுக்கும் நடக்கும் உரையாடல்கள் நகைச்சுவையின் உச்சம்.

இம்மாதிரியான படங்களுக்கு விசுவல் எபெக்ட்ஸ் எந்தளவுக்கு முக்கியம் என்பது தெரிந்ததே ஆனால் அது படத்துடன் ஒன்றிப்போகாமல் இருந்துவிட்டால் அவ்வளவுதான் முழுப்படமும் மண்ணைக் கவ்விவிடும். இந்தப் படத்தில் விசுவல் எபெக்ட்ஸ், அனிமட்ரோனிக்ஸ் எல்லாம் மிகவும் துல்லியமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கைஜுக்களில் சிறு சிறு அங்க அசைவுகளும், யேகர்களின் துருபிடித்த பாகங்களும் மிக மிக துல்லியமாக உருவாக்கி நடமாட விடப்பட்டிருக்கிறது. இதற்கேற்பவே கடலும், நகரங்களும் இருக்கின்றது. இந்த ராட்சத உருவங்களை உருவாக்க கியர்மோ டெல் டோரோ முன்னுதாரணமாக கொண்ட கோயாவின் கொலோஸஸ் ஓவியம் எவ்வளவு பொறுத்தமான தேர்வு என்பதனை ஓவியத்தையும் படத்தையும் பார்த்தால் விளங்கும். ஒரு சினிமா படைப்பாளிக்கு ஓவியங்கள், இசை, புத்தகங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவை எந்தளவுக்கு முக்கியமானவை என்பதனை இது காட்டுகிறது. அதேநேரம் இவை பற்றி ஆழமான அறிவுப்பின்னணி இருந்தால் மட்டுமே அவற்றை முறையாக பயன்படுத்த முடியும். இவ்விடத்தில் சில இந்திய விசுவல் எபெக்ட் “அற்புதங்களை” மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

Image

Guillermo Navarro ஒளிப்பதிவாளர், இவரைப்பற்றி கூறுவதை விட இவர் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த படங்களை பார்த்தாலே தெரியும். மந்திரவாதி. டெல் டோரோவின் ஆஸ்தான் ஒளிப்பதிவாளர் நண்பர். பொதுவாக டெல் டோரோ படங்களில் ஒளி நிறங்களில் கண்டிப்பாக தங்க நிறம் அல்லது செபியா கலந்து இருக்கும். இந்த படத்திலும் இதனை பயன்படுத்தியிருக்கிறார். டோக்கியோ நகரில் Otachi Kaiju Category 4 உடன் ஜிப்ஸி டேஞ்சர் பொருதும் போது நியோன் லைட்டுகள் அப்படியே ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்துகிறது.

Image

டெல் டோரோ, யேகர், கைஜு, இசை இப்படித்தான் இந்த படத்தை கூறவேண்டும். Ramin Djawadi யின் இசை படத்தின் பிரமாண்டத் தன்மையை கைஜு யுகத்தை இசைக்கதையாக ஒலிக்கச் செய்கிறது. ஜிப்ஸி டேன்ஜர் வரும் போது ஒலிக்கும் தீம் இசை புல்லரிக்க வைக்கிறது. ஒவ்வொரு முக்கிய பாத்திரங்களுக்கும், இடங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் அமைக்கப்பட்டிருக்கும் பின்னணி இசை அமர்க்களப்படுத்துகிறது. படத்தின் இசை துள்ளல் தன்மையுடன் இருப்பதால் கைஜு யேகர் பொருதும் காட்சிகள் கொண்டாட்டமும் பிரமாண்டமும் ஒன்றுடன் ஒன்று கலந்து அதிர்கிறது.

படத்தில் குறை என்று பார்க்கும் போது இவ்வாறானதொரு கதைக்கு வழங்கப்பட்ட நேரம் மிகச்சொற்பம். அடுத்த பாகத்தில் இதனை சரி செய்வார் டெல் டோரோ என்று எதிர்பார்க்கலாம்.

திரைப்படத்தில் எந்தவித சஸ்பென்ஸோ, த்ரில்லோ அல்லது ட்விஸ்களோ இல்லை. திரைக்கதை மிகவும் எளிதில் அனுமானிக்க முடியுமாக இருக்கிறது. நாம் எல்லோரும் கேட்டு வளர்ந்த பாட்டி கதைகளும் அப்படித்தானே. கடல்களும் மலைகளும் ராட்சத பேய்களும் கடைசியில் முடிவு எப்படியிருக்கும் என்பதுவும் எமக்கும் பரிச்சயமானவையே. ஆனால் அது பாட்டி சொல்ல கேட்பதில் இருக்கும் அந்த அற்புத தருணம் அதுதான் கியர்மோ டெல் டோரோவின் சினிமா.

குறிப்பு:

 1. ப்ரான்ஸ்கோ கோயா அவரது “கறுப்பு ஓவியங்களுக்கு” பெயர் போனவர். தனித்துவமான அவரது ஓவியப்பாணி இருளும் அதன் கதைகளையும் உள்ளடக்கியது. “ராட்சதன்” ஒவியம் அவருடையதா அல்லது அவரது மாணவர்களில் ஒருவரினுடையதா என்ற சர்ச்சை நீண்ட காலமாக இருந்து வருகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று அவ்ஓவியம் அவருடையதே என்று கூறுகிறது.
 2. கைஜு என்பதற்கு Giant Beast என்றுதான் படத்தில் கூறப்படுகிறது.
Advertisements

7 comments

 1. பல புதிய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க.. என்னதான் சொன்னாலும் திரைக்கதை ரொம்ப பழசு.. போரடிக்கற மாதிரி கதையோட்டம். இதுல நீங்க சொன்ன பல விஷயங்கள் முதல் தடவை பாக்கும்போது தெரியவே இல்லை. எதுக்கும் இன்னொரு தடவை படம் பாத்துட்டு அப்பறமா வரேன்..!!

 2. அதேமாதிரி எனக்கு படத்துல பிடிச்ச மூனு விஷயங்கள்.
  1.இசை
  2.ஒளிப்பதிவு
  3.பிரமாண்டம்

 3. Gipsy Danger’இன் செயற்கை நுண்ணறிவு அமைப்பின் குரல் கூட, ஏதோ ஒரு பெண்ணை பிடித்து வந்து பேச வைத்தது அல்ல. அவர் மிகவும் விளையாடி ரசித்த PORTAL வீடியோ கேம்மிற்கு குரல் கொடுத்த Ellen McLain அவர்களை தேடி பிடித்து வர வைத்து குரல் கொடுக்க சொல்லி இருப்பார். இதில் இருந்தே Del Toro அவர்கள் ஒவ்வொரு விஷயங்களையும் எந்த அளவுக்கு ரசிக்கிறார் என்பது தெரிய வருகிறது.

 4. Pilot’கள் நினைவுகள் ஒன்று சேர்வதை பற்றி ஏன் உங்கள் விமர்சனத்தில் குறிப்பிடவில்லை.? (இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அது.)

 5. விரும்பும் (அ) பிடித்த திரைப்படத்தை எந்தளவுக்கு ரசிக்கவும் அதை மற்றவர்க்கு எடுத்து உரைக்கவும் வேண்டும் என்பது இக்கட்டுரையை படித்து முடித்தவுடன் நினைத்தேன். பெரும்பாலோனரின் பரிந்துரையில் இப்படத்தை கண்டு இருந்தேன் , எனக்கு வழக்கமான ஹாலிவுட் படம் என்ற நினைப்பே இருந்தது , நீங்கள் கூறியது போல அமெரிக்க விளம்பரம் மட்டும் இல்லாமல் இருந்தது ஆச்சிரியமாக இருந்தது. மற்றபடி இப்பொழுது நீங்கள் கூறியதை படித்து மீண்டும் அதை அனைத்தையும் தேட வேண்டும் என்று தோன்றுகிறது. நன்றி நண்பா சூப்பர் , ஒரு வேண்டுகோள் நீங்கள் தொடர்ந்து திரைப்படங்களின் பார்வையை பகிர்ந்து கொள்ள வேண்டும் ஏன்னா ரெம்ப கேப் எடுக்குறீங்க பாருங்க 🙂 😉

 6. கியர்மோ டெல் டோரோ பற்றி தெரியவே தெரியாது.. (உங்க பதிவுகள் படிக்குறதுக்கு முன்னாடி)…
  உண்மைய சொல்லனும்னா நீங்க குறிப்பிட்ட 90% விஷயத்த நான் படத்துல கவனிச்சன்… அப்டி கவனிச்சி பார்த்ததற்கு காரணம் உங்க பதிவுகள்… அதற்கு நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s