Kwaidan – “Ghost Story” (1964)

முடிக்கப்படாத புனைவுகள் நிறையவே இருக்கின்றன. ஏன் அவை முடிக்கப்படவில்லை? எங்கோ ஒரு வீட்டில், ஒரு இருட்டு அறையில், பழைய தகரபெட்டிக்குள் முடிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. ஒருவேளை புனைவாளன் சோம்பேறியாக இருக்கக்கூடும், இல்லையெனில் பதிப்பகத்தாருடுன் சிக்கல் இருந்திருக்கக்கூடும், அப்படியுமில்லையெனில் இடையில் வெளியே போனவன் திரும்பி வராமலேயே இருந்திருக்கக்கூடும், ஒரு வேளை மரணம் அவனை அழைத்திருக்கலாம்… இது தவிர வேறு காரணங்களும் இருக்கும்!

Image

ஜப்பானிய நாட்டாரியல் மரபுக் கதைகளில் ஆவி, ஆவியுலகம், பேய், பிசாசு, பூதங்கள் என்று நிறைந்திருக்கும். அம்மாதிரியான கதைகளின் தொகுப்பே இந்த Kwaidan. 1964 இல் வந்த இத்திரைப்படம் நான்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கதைகளை கொண்டு எடுக்கப்பட்டது. 1965 கானில் ஸ்பெஷல் ஜுரி பரிசை வென்ற திரைப்படம் இது. இந்த படத்தின் இயக்குனர் மசாகி கோபாயாஷி.

ஜப்பானிய (தாய்லாந்து, கொரியா போன்ற ஆசிய நாடுகளின்) திகில் திரைப்படங்கள் அமெரிக்க ஹாரர் படங்களை விட பயத்தை, பய உணர்வை அடியாழத்திலிருந்தே உசுப்பிவிடக் கூடியவை. இதற்கு காரணம் என்னவென்று யோசிக்கும் போது…. நாங்க இந்த நாடுகளுக்கு, மரபுகளுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதனாலோ என்ற சிந்தனை வலுப்பெறுகிறது. பொதுவாக சில அமானுஷ்ய கதைகள், நாட்டுபுற கதைகள் இந்த நாடுகளுக்கிடையில் தொடர்புபட்டதாக அல்லது கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக வெவ்வேறு வடிவங்களில் காணப்படுவது அவதானிக்கத்தக்கது.

ஊரிலிருக்கும் ஒரு தெருவுக்கோ, நெடுங்காலமாக இருக்கும் காய்ந்து வயதான மரத்துக்கோ, ஒற்றையடிப் பாதை வழி தனியாக செல்லும் போது அருகில் தென்படும் பாழடைந்த வீட்டிற்கோ சொல்லப்படும் நாட்டுப்புற கதைகள், அதிலும் அமானுஷ்ய கதைகள் நாம் நிறையவே கேள்விபட்டிருப்போம். வீட்டில் வயதான பாட்டி, பழைய காலத்து மனிதர்கள் இவ்வாறான கதைகளை தாங்கிக் கொண்டு திரிவார்கள். அவர்கள் இல்லாமல் போனவுடன் அந்த கதைகளுக்கு என்ன நடக்கும்? நெடுநாட்களாகவே இருக்கும் கேள்வி. இவ்வாறான ஜப்பானிய நாட்டாரியல் கதைகளிலிருந்து அல்லது கதைப்பாடல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பே இந்த Kwaidan. Kwaidan என்றால் Ghost Story என்று அர்த்தப்படும். Lafcadio Hearn என்பவர் தொகுத்த  Kwaidan: Stories and Studies of Strange Things என்ற தொகுதியிலிருந்தே இந்த நான்கு கதைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. 

அந்த நான்கு கதைகள்….

The Black Hair

வறுமையில் வாடும் ஒரு சாமுராய் வீரன் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வசதிக்காக மறுமணம் செய்கிறான். இந்த மறுமணம் சந்தோஷத்துக்கு பதிலாக பெரும் மனஉளைச்சலைக் கொடுக்கிறது. இப்படியா ஒரு வருடம் கழிகிறது. ஒப்பந்தக்காலமும் முடிந்து விடுகிறது. தனது முதல் மனைவியை தேடி விரைகிறான்…. ஒரு வருடத்துக்கு முன்னால் இருந்த அந்த அழகிய வீடும் கிராமமும் இப்பொழுது புற்புதர்கள் நிறைந்த மயான பூமியாக காட்சியளிக்கிறது. மனைவி நெசவுத் தொழில் செய்பவள், அவன் பிரிந்து செல்லும் போது தறித்துக்கொண்டு இருந்த மாதிரியே இப்பொழுதும் தறித்துக்கொண்டிருக்கிறாள். சத்தம் மட்டும் வருகிறது. மனைவியை காண மிக வேகமாக செல்கிறான். அவன் தவிக்கவிட்டுச் சென்ற மனைவி அன்று இருந்தது போலவே அழகாக, கரிய நிறக் கூந்தலோடு இருக்கிறாள்….. அதே குரல். தான் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு அழுகிறான். இனிமேல் உன்னைவிட்டு பிரியமாட்டேன் என்கிறான். இருவரும் அறைக்குச் செல்கிறார்கள். திருமணம் முடித்த அன்று இருந்தது போலவே அறை இருக்கின்றது என்கிறான் சாமுராய் கணவன். நீ என்னை இனிமேல் பிரிந்து போகாமல் இருக்க என்கிறாள் மனைவி… அழகிய முகமும், கரிய நிறக் கூந்தலும் அன்று பார்த்த மனைவி இன்றும் அதே போலவே இருக்கிறாள்.

The Woman of the Snow

யூகி-ஒன்னா என்கிற பனிப்பிரதேச பெண் மோகினியை பற்றிய கதையிது. இரண்டு விறகு வெட்டிகள் மிகக் கடுமையான பனி மழையிலும் புயலிலும் வயிற்றுப்பிழைப்பை எண்ணி விறகு பொறுக்குவதற்காக செல்கிறார்கள். அடர்ந்திருக்கும் பனி அவர்களை அழைக்கழிக்கிறது. பலமாக வீசும் காற்றும் பைன் மரங்களும் அவர்களின் துயர பயணத்தை மேலும் துயரமாக்குகிறது. கடும் பிரயத்தனப்பட்டு கடக்கவேண்டிய ஆற்றை அடைந்தால் பாலம் உடைந்து விட்டிருக்கின்றது. பனிக்காற்றினூடே அமானுஷ்ய அனுபவம் அவர்களை ஆட்கொள்கிறது. அருகிலிருக்கும் மரக் கூடாரம் ஒன்றினுள் நுழைகிறார்கள் இருவரும். வயதானவனுக்கு மிகவும் முடியவில்லை. சில நாழிகைகள் கழிந்துவிட்ட போது பனிக்காற்றின் மாய மோகினி அந்த வயதானவன் உயிரை குடித்துக்கொண்டிருக்கிறது. இவன் உடல் கூசி கல்லாகி நிற்கின்றான்…  அடுத்து அவன். அருகில் வர வர இவன் முகம் வெளிரிக்கொண்டே வருகிறது. அவனைக் கொல்லவில்லை… “நீ மிகவும் இளையவனாய் இருக்கின்றாய்… உனக்கொரு வாய்ப்பளிக்கின்றேன்” என்று கூறும் பனி மோகினி கூடவே ஒரு நிபந்தனையையும் வைக்கின்றது. – இது நம்மில் யாரும் மறந்துவிடாமல் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய நிபந்தனை – “நீ இன்றிரவு கண்டதை யாரிடமும் சொல்லக் கூடாது அது உனது தாயாக இருந்தாலும் சரி, மீறினால் நீ சொன்ன மறுநிமிஷமே உன்னை கொன்றுவிடுவேன் – எங்கிருந்தாலும்” (பேய்கதைகளை யாரிடமும் சொல்லாதீர்கள் மக்களே) காலங்கள் உருண்டோடுகின்றது…. வசந்த காலத்தில் ஒரு நாள் விறகு வெட்ட சென்ற இளம் விறகு வெட்டிக்கு அழகிய மங்கையொறுத்தி வழி தவறி நிற்பதை கண்டு வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். அது காதலாக மாறி திருமணத்தில் முடிகிறது. மீண்டும் காலங்கள் உருண்டோடுகின்றது… மூன்று அழகிய குழந்தைகளை பெற்றெடுத்து சந்தோஷமாக வாழ்க்கையை கழிக்கின்றனர் இருவரும். அவர்களின் காதல் என்றும் போலவே இருந்தது. அவள் அழகு போலவே. ஒரு நாள் இரவு அவளுக்காக அழகிய பாதணிகளை செய்து தருகிறான் இளம் விறகுவெட்டி அது அவளுக்கு பெரிதாகவும் இல்லை சிறிதாகவும் இல்லை சந்தோஷமடைகிறாள். இந்த இரவு அவனுக்கு அன்று நடந்த சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. அமைதியாக இருக்கும் அழகிய மனைவியின் முகத்தில் பனி மோகினி தெரிகிறாள். அவன் அன்று நடந்ததை கூறுகிறான் தன் மனைவியிடம். இத்துனை வருடங்கள் சொல்லாமல் விட்ட ரகசியம்… திடிரென தன் சுயரூபத்தை வெளிப்படுத்துகிறாள் மனைவி இப்போது பனி மோகினியாக அவன் முன்னால் இருக்கிறாள். இத்துனை நாள் உன்னால் சொல்லாமல் இருக்க முடிந்தது இன்று சொல்லிவிட்டாய் வாக்கை மீறி விட்டாய் நான் சொன்னது போல் உன்னைக் கொள்ள வேண்டும்…. ஆனால் முடியாது எங்கள் காதலின் சாட்சியான இந்த மூன்று குழந்தைகள். நான் செல்கிறேன் இனி திரும்ப வரமாட்டேன் இந்த செல்வங்களை பார்த்துக்கொள் என்று கூறி பனி மூட்டத்தில் கலந்து மறைந்து விடுகிறாள். அவளுக்காக செய்த பாதணி…. அவள் திரும்பி வருவாள் என்ற ஏக்கத்துடன் இன்னும் அந்த விறகுவெட்டி இளைஞன் காத்துக்கொண்டிருக்கிறான்.

Hoichi the Earless

இதுதான் இந்த தொகுப்பிலுள்ள மிகப்பெரிய கதை. இது கண் தெரியாத ஒரு Biwa hōshi (பைவா என்பது ஒரு இசைக்கருவி – லுட் வடிவில் இருக்கும் – பைவா ஹோஷி என்பவர்கள் ஜப்பானிய கதைப்பாடல்களை இசைத்து தங்களுக்கான வருவாயை ஈட்டிக் கொண்டவர்கள்) ஒரு புத்த மத ஆலயத்தில் தனது வேலைகளை செய்து கொண்டு இருக்கிறான். அவன் கதைப்பாடல்கள் டன்-நோ-உரா என்ற பெரும் போர் பற்றியதாக இருக்கின்றது. ஹெய்கே என்ற பெரும் படை தோல்விக்குப் பின்னால் தன்னை கடலுடன் அழித்துக் கொண்டது பற்றிய சோகமயமான அமானுஷ்ய இசையனுபவம் இந்த கதைப்பாடலை பைவா இசைக்கும் போது கிடைக்கிறது.  Battle of Dan-no-ura வின் ஆவியுலகு இந்த இசையில் மயங்குகிறது. பைவா துறவியை தமக்காக வாசிக்கும் படி ஒவ்வொரு இரவும் அழைத்துச் செல்கிறான் தளபதி. அது டன்-நோ-உராவின் மயான பூமி – கண் தெரியாத துறவிக்கு இது தெரிவதில்லை. ஒவ்வொரு இரவும் காணமல் போகும் துறவியை பற்றிய கவலை மடத்தின் பெரும் துறவிக்கு வருகிறது. ஒரு இரவு அவன் எங்கு செல்கிறான் என்பதை பார்க்கும் படி இரு பணியாட்களை அமர்த்துகிறார். அது கடும் மழைநாள் – பேய்மழை. அந்த இரவு வைவா ஹோஷி வாசிக்கும் கதைப்பாடல் கடைசிப்பாடல்… இன்னும் ஒரு சில வரிகளை வாசித்துவிட்டால் ஆவியுலக ஹெய்கேக்கள் திரும்ப வரப்போவதில்லை. ஆனால் அவன் வாசித்து முடிக்கும் முன்னர் தடுத்து விடுகிறார்கள். திரும்ப மடத்துக்கு அழைத்து வரப்படும் துறவி புனித நூலின் வசனங்களை உடல் முழுக்க எழுதுவதன் மூலம் ஆவிகளின் பார்வையிலிருந்து தப்பித்து விடலாம் என்ற யோசனையின் பிரகாரம் அவன் உடல் முழுவது புனித வரிகளால் நிரப்பப்படுகிறது. முழு உடலையும் எழுத்துக்களால் நிரப்பி விட்டாயா? பெரும் துறவி கேட்க ஆமாம் என்கிறான் இன்னொரு துறவி. காதுகளை மறந்து விட்டது அவனுக்கு மறந்துவிட்டது போலும்.

In a Cup of Tea

திரும்பவும் முதல் பந்திக்கே செல்லவும். முடிக்கப்படாத புனைவு இதுதான் இந்த கதை. அந்த புனைவாளன் எங்கு சென்றான்? என்ற கேள்விக்கு பதில் இந்த கதையில் இருக்கின்றது. இருக்கின்றதா?

இதிலுள்ள கதைகள் திகில் கதைகள் அல்ல. அதற்கான வரைவிலக்கணத்துடன் வரவில்லை. திகில் திரைப்படங்களுக்கு இசை எந்தளவு முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதில் கிட்டத்தட்ட பின்னணி இசை என்பது மிகச்சாதாரணமான ஒலிகளாகவே இருக்கின்றது. ஆனால் அது தரும் அமானுஷ்ய அனுபவத்தை எந்த திரைப்படமும் இன்னும் எனக்குத் தரவில்லை. நாட்டார் கதைகள் என்பதால் பாவிக்கப்பட்டிருக்கும் இசைக்கருவிகள் எல்லாமே பண்டைய ஜப்பானைச் சேர்ந்தவை. டன் டன் டன் என்று விட்டு விட்டு ஒலிக்கும் மணியோசை அமானுஷ்ய அனுபவத்தைக் கொடுக்கிறது. முதல் கதையில் இசையே இல்லை எனலாம் ஆனால் இருக்கிறது. மிகச் சாதாரணமாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானிய நாடக கதைகள் போல் அமைக்கப்பட்ட செட்களும், பாத்திரங்களும் நாட்டார் கதை என்ற ஒரு வடிவம் சார்ந்து இயங்குவதற்கு துணைபுரிகிறது.

இதே போன்று எம்மத்தியிலும் நிறைய நாட்டார் கதைகள் விரவிக் கிடக்கின்றன. பாட்டி சொன்ன கதைகள் என்றெடுத்தாலும் ஒரு பத்து பதினைந்து கதைகள் தேரும். அதில் கிட்டத்தட்ட அனைத்துமே அமானுஷ்ய கதைகளாவே இருக்கும். தமிழ் சினிமாவில் ஏன் இன்னும் இவ்வாறான முயற்சிகள் வரவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதன் திரை வடிவம் சினிமாவுக்கென்ற சில இலக்கணங்கள் அற்று நாட்டார் வடிவம் என்ற ஓர் உத்தியாக முன்னிற்கின்றது. எமக்கான சினிமாவையும் எமது கிளைவிட்டுச் செல்லும் கதைப்பரப்பிலிருந்து கொண்டுவர முடியுமாக இருந்தால் நன்றாக இருக்கும். இது பெரும் ஆய்வை வேண்டி நிற்கும் செயல். பார்ப்போம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s