திகிலூட்டும் நிமிடங்கள் – பேயெழுத்து பற்றி

Edgar Alan Poe & H.P. Lovecraft
Edgar Alan Poe & H.P. Lovecraft

தலைப்பை பார்த்தவுடனேயே காமிக்ஸ் வாசகர்களுக்கு தெரிந்துவிடும், இது பழைய “காமிக்ஸ் க்ளாஸிக்” ஒன்றின் தலைப்பு. (இந்த அறிமுகத்திற்கு பொறுத்தமாக இருப்பதால் வைத்துவிட்டேன்) கதைகள், கதைகள் இல்லாவிட்டால் இந்த உலகம் எப்படியிருக்கும் கற்பனை செய்துபார்க்க கற்பனையே இருந்திருக்காது. சிறுவயதில் கேட்ட பேய்கதைகள், தேவதைக்கதைகள், பூதங்களின் கதைகள், நண்பர்கள் கட்டிச் சொன்ன கதைகள், முன்னைய நாள் ரொபின் ஹுட்டின் கதை இப்படி சொல்லிக் கொண்டே போனால் விகிபீடியா லிஸ்டாகிவிடும்.

அம்மா புத்தகங்களை புரட்டி படம் பார்த்து கதைசொல்ல நான் கேட்டுக் கொண்டிருப்பேன், இதுவே எனது முதல் கதைகளுடனான பயணம். தந்தை ருஷ்யாவில் இருந்து கொண்டுவந்த சிறுவர் கதைகள், நாட்டுபுறக்கதைகளின் தொகுப்பு (நவரத்தின மலை, எறும்பும் புறாவும், எரிப்பறவை, கரடிக் குடித்தனம்) என்று பல சிறுவர் இலக்கியங்களில் விழுந்து புரண்டு கொண்டிருந்த காலம் அது. எறும்பும் புறாவும் டால்ஸ்டோய் தொகுத்த நாட்டுப்புற கதைகள், அதில் ஒரு வயதான சாக்குத்துணி அணிந்த கிழவர் ஊன்றுகோலை வைத்துக் கொண்டு விவசாயிமார்களின் பிள்ளைகளுக்கு கதை கூறுவது போல் ஒரு ஓவியம் இருக்கும், இன்னும் ஞாபகம் இருக்கிறது. (எப்படி மறக்கும் இன்னும் கூட நாஸ்டல்ஜியா தாக்கும் போது எடுத்துப்பார்ப்பதுண்டு) இந்த கதைகளில் இருக்கும் ஓவியங்கள் எனக்குள் ஒரு பென்டஸி உணர்வை ஏற்படுத்தும். பின் நானாக வாசிக்கத் துவங்கியதும் எத்தனை தடவை என்றில்லாமல் இந்த புத்தகங்களை வாசித்துத் தள்ளியிருக்கின்றேன்.

எப்போதும் என்னை கவர்ந்த கதையுலம் மாயங்களும் மர்மங்களும் அற்புதங்களும் நிறைந்திருக்கும் பென்டஸி, ஹாரர், தேவதை, பூதங்கள், மர்மம், விஞ்ஞான புனைவுகள்… இப்படியான கதைக் களங்களே என்னை சூழ்ந்து சுற்றி வந்து கொண்டிருந்தன. (இப்பொழுதும் அப்படித்தான் – என்ன கொஞ்சம் எக்ஸ்ட்ராவா நிறைய Genreகள் சேர்ந்து கொண்டது)

காமிக்ஸ், எப்படி அறிமுகமாகியது? இது மர்ம மனிதன் மார்டின் துப்பறிய வேண்டிய கேள்வி. முதல் ஹீரோ முகமூடி வீரர் மாயாவி (அய்… எல்லோரும் போல இரும்புக்கை மாயாவி என்று ஆரம்பிக்கவில்லை, அப்பாடா) ராணி காமிக்ஸ் சரக்குகள்தான், உடனடியாக தொற்றிக் கொண்டது காமிக்ஸ் பைத்தியம். அதன் ஓவியங்கள்தான் காரணம். பாடசாலை நாட்களில் (ஊர் பாடசாலையிலிருந்து ஆறாம் வகுப்பு முதல் நகர்புற ‘மொக்க’ ஸ்கூலுக்கு – பாய்ஸ் மட்டும் – போன போது அறிமுகமானதுதான்) தினம் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள், அதுவும் பாடசாலை விடும் முன்னர் பார்த்துவிட்டு திருப்பி கொடுத்துவிடவேண்டும். இப்படியொரு டாஸ்க் என்னுடன் சேர்த்து மூன்று பேர், அதிகாலையியே வந்து, பாடங்களை கட்டடித்து, இன்டர்வெல் வேளையில். கனத்த புத்தகங்களுக்கு நடுவில் என்று ரொம்ப கஷ்டமான மிஷன். முகமூடி மாயாவி, ப்ளாஷ் கார்டன் (சென்சார் செய்யப்பட்டது), மடஸ்தி ப்ளேசி, பாண்டு ஜேம்ஸ் பாண்டு என்று ராணிக்குள்ளே சுற்றிய காலம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. சமூகக்காவலர்கள், கலாச்சார பொலிஸ் என்ற ரூபத்தில் வந்தது வில்லங்கம். மாணவர்கள் (அதாவது நாங்க) படிக்கிறார்கள் இல்லை, கெட்ட விடயம் (சென்சார் பண்ணியுமா – புரியல) அது இது என்று காமிக்ஸுக்கு தடை விதித்தார்கள். இது எங்களுக்கு மட்டுமில்ல அந்த ஏரியாவுலயே அதுக்கு பிறகு காமிக்ஸ் சுவடில்லாமல் ஒழிக்கப்பட்டது. வீடுகளில் பிரதிகள் கொழுத்தப்பட்டன. இந்த மாதிரி நிலைகளிலும் சில நண்பர்கள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு ‘பிரதிகளை’ பாதுகாத்து வைத்திருந்தனர். பின்னாட்களில் எனக்கு சில நண்பர்கள் மூலம் பல காமிக்ஸ்கள் வாசிக்கக் கிடைத்தது.

லயன், முத்து, திகில், காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் (நன்றி விஜயன்) அறிமுகமாகன பின்னர்தான் ராணியெல்லாம் பிச்சைக்காரிகள் என்று தெரிந்தது. இங்கு வரும் அத்துனை புத்தகங்களையும் வாங்கிவிடுவேன், அப்பொழுதும் நிறைய மிஸ்ஸாகியிருக்கிறது. எந்த காமிக்ஸாக இருந்தாலும் சரி வாங்கிவிடுவது வழக்கம், டைகர், இரத்தபடலம், ரிக் கிர்பி, மர்ம மனிதன் மார்டின் (இந்த சீரிஸில் மொத்தம் 6 கதைகள்தான்) காமெடி ஹீரோக்கள் (லக்கி லூக்), டெக்ஸ் (எனக்கு பிடிக்காத கௌபாய் – டெக்ஸ் ரசிகர்கள் மன்னிப்பார்களாக) என்று நீளும். விஷேடமாக திகில் ஸ்பெஷல், இந்த வரிசையில் என்னிடம் ஒரேயொரு புக் மட்டும்தான் இருக்கின்றது.

நூலக அங்கத்துவம் கிடைத்தபின், பல கதைகள் அறிமுகமாயின. ஷெல்பில் முதலில் தேடுவது பேய்கதை புத்தகங்கள் – மர்மக்கதை – துப்பறியும் கதை – அப்படியும் கிடைக்காவிட்டால் வேறென்ன மறுபடியும் முதல்ல இருந்து பேய்க்கதை…. பிரிடிஷ் கவுன்சில் ஆங்கில வகுப்பின் பின்னர், எல்லோரையும் போல ஷேர்லோக் ஹோம்ஸ் – ஒன்று கூட விட்டு போகாம அத்தனை கதைகளையும் படித்திருக்கிறேன். (Hound of Baskervilles தான் எனக்கு மிகவும் பிடித்த கதை – இதுவும் எல்லோரையும் போல்தான்) எதேச்சையாக அப்போது கண்ணுக்குப்பட்ட புத்தகம் Tell Tale Heart and Other Stories, எட்கர் அலன் போவின் இந்த புத்தகம் என் கண்ணில் பட்டது ஏன்? மறுபடியும் ஓவியம் அட்டைப்படத்தில் அமர்க்களமாய் அமர்ந்திருந்த ரீப்பரும் அவன் அருவாவும் (மரண தேவன்) விடுவேனா? அதன் பிறகு எட்கர் என்னுடைய இருளின் தோழனான், இன்றும் என்னை ஈர்க்கும் ஓர் கதைசொல்லி. க்ளாசிக் வரிசைகளை (Dracula, Frankenstein, Dr. Jekyll & Mr. Hyde, The Picture of Dorian Gray, War of the Worlds, Jules Verne, M.R. James, R.L. Stevenson…) ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தேன்.

எட்கர் அலன் போ போல் என்னை ஈர்த்த இன்னொரு எழுத்தாளர் எச்.பீ. லவ்க்ராப்ட். கொஞ்சம் லேட்டாகத்தான் இவர் எனக்கு அறிமுகமானார். (‘எனக்கு அறிமுகமானார்…’ நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா) சுப்பர்நெசுரல் சீரிஸ் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு எபிசோடில் லவ்க்ராப்ட் பற்றி வரும் (சுப்பர்நெசுரல் மொக்கையாகிப் போன ஒரு நல்ல சீரிஸ் – அமெரிக்காவில் இருந்து வரும் முக்காவாசி இப்படி சொதப்பிருவாங்க) அதிலிருந்து வால்புடிச்சு தேடி, முதலில் வாசித்தது At the Mountain of Madness அதுவும் காமிக்ஸ் வடிவில். மிகவும் அருமையான திகில் பயணம் – இந்த கதை எத்தனையோ முறை தழுவப்பட்டிருக்கிறது ஜான் காபென்டரின் த திங் படம் இந்த கதையின் தழுவல்தான். அன்டார்டிக்காவில் உறைந்த நிலையிலிருக்கும் ஒரு நகரத்தை பற்றியது, மர்மம், திகில், பயங்கர காட்சிகள், Macabre (இந்த வார்த்தையை எப்படி தமிழ்படுத்துவது?) என லவ்க்ராப்ட் டச் நிறைந்திருக்கும் கதை. காமிக்ஸும் அருமையாக இருந்தது.

திகில் நிமிடங்கள் தொடரும்… (நாளைக்கு அல்லது நாளை மறுநாள்)

Advertisements

4 comments

  1. சூப்பர். நல்லதொரு பதிவு.

    படிப்பதற்கு மிகவும் சுவையாக எழுதும் உங்கள கலையை தக்கவைத்துக் கொள்ளுங்கள் ஒமார்.

    சுலபத்தில் கைவரும் விஷயமல்ல அது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s